

காலநிலை மாற்றம் மிகப்பெரிய பிரச்சினையாக உருவெடுத்திருப்பதை, வெப்ப அலையின் தாக்கம் நன்கு உணர்த்துகிறது. இதனால் குழந்தைகள், பெரியவர்கள் அதிக அளவில் பாதிக்கப்படும் நாடுகள் வரிசையில் சீனா, அமெரிக்கா, ரஷ்யாவுடன் இந்தியாவும் இடம்பெற்றுள்ளது.
வழக்கத்திற்கு மாறான அளவில் அதிக ஈரப்பதத்துடன் அதிகபட்ச வெப்பநிலையும் சேர்ந்து நீடிப்பது வெப்ப அலை எனப்படுகிறது. சராசரி அதிகபட்ச வெப்பநிலையைவிட 5 டிகிரி செல்சியஸ் கூடுதலாகப் பதிவாவது ஐந்து நாள்களுக்கு மேல் தொடர்ந்தால் இதன் கடுமையை உணரலாம்.
வெப்ப அலையின் தாக்கம் இதுவரை இல்லாத அளவில் 2024இல் உணரப்பட்டது. முதியவர்களிடத்தில் இது 1,530 கோடி நபர் - நாள்கள் (Person - days) (விளக்கத்துக்குப் பார்க்க பெட்டிச் செய்தி) ஆகவும் குழந்தைகளிடத்தில் 230 கோடி நபர் - நாள்கள் ஆகவும் பதிவானது.
அதற்கு அடுத்த ஆண்டான 2025இல் முதியவர்களுக்கு 1,080 கோடி நபர் - நாள்களாகவும் குழந்தைகளுக்கு 110 கோடி நபர் - நாள்கள் ஆகவும் பதிவானதாக, சுகாதாரம் வானிலை மாற்றம் தொடர்பாக லான்செட் மருத்துவ ஆய்விதழ் அண்மையில் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப் பட்டுள்ளது.