

கடந்த 23 ஆண்டுகளாகப் பல்லுயிர்களின் பாதுகாப்பான உறைவிடமாக விளங்கும் எங்களுடைய இந்தக் குறுங்காடு, எதிர்காலத்தில் என்ன ஆகுமோ என நினைத்தால் கவலையே மேலோங்குகிறது. எப்படி இதைக் காப்பாற்றுவது எனத் தெரியவில்லை.
பரந்த அளவில் இயற்கைச் சூழல் அழிந்துவருவதன் விளைவான காலநிலை மாற்றம், காட்டைப் பராமரித்தல், வேலியைச் சீராக வைத்திருத்தல் ஆகிய பணிகளுக்கு ஆள் பற்றாக்குறை, காட்டுத் தீ பரவக்கூடிய அபாயம் போன்றவை மிகுந்த கவலையளிக்கின்றன.
தொடக்கம்...
என் தம்பி அமெரிக்காவில் முனைவர் படிப்பை முடித்துவிட்டு, அங்கும் ஜப்பான், தாய்வான் ஆகிய நாடுகளிலும் சில ஆண்டுகள் பணியாற்றினார். சமூகம், இயற்கைச் சூழல், தமிழ் மொழி ஆகியவற்றுக்குப் பயனுள்ள வகையில் வாழ வேண்டுமென்ற நோக்கத்துடன் வேலையை விட்டுவிட்டு, 2000ஆம் ஆண்டு இந்தியா திரும்பினார்.
சிறிய அளவில் மரத்தோட்டம் (arboretum) ஒன்றை உருவாக்கும் நோக்கமும் இருந்ததால், அதிகப் பரப்பளவு உள்ள நிலத்தை வாங்க நாங்கள் விரும்பினோம்.
சத்தியமங்கலம் நகரில் இருந்து சுமார் ஐந்து கிலோமீட்டர் தொலைவில் உள்ள இந்த 33 ஏக்கர் நிலத்தை 2002இல் வாங்கினோம். பிறகு அம்மா, நான், தம்பி மூவரும் இங்கு குடிபெயர்ந்தோம்.