

அதிகாலை நேரம்.. பனியில் மூழ்கிக் கிடக்கும் ஓர் அமைதியான கிராமம். மண் வாசனை கலந்த குளிர்ந்த காற்றில், எங்கோ ஒரு வீட்டின் முற்றத்தில் இருந்து மெல்லிய புகை எழுகிறது.
அந்தப் புகையின் மணம் காற்றோடு கலந்து நம் நாசியைத் தொடும்போது, அது நம்மைப் பல தசாப்தங்களுக்குப் பிந்தைய பழைய நினைவுகளுக்குள் மெதுவாக அழைத்துச்செல்கிறது. அதுதான் சாம்பிராணி மணம்.
ஒரு காலத்தில், குழந்தைகள் குளித்த பின் தலைக்குக் காட்டும் புகையாகட்டும், பெண்கள் தங்கள் நீண்ட கூந்தலை உலர்த்திக்கொள்ளும் முறையாகட்டும், கோயில், வீடுகளில் பூஜை செய்யும் முக்கியப் பொருள்களில் ஒன்றாகட்டும்; இப்படிச் சாம்பிராணிக்கு ஒரு முக்கியப் பங்கு இருந்தது.
கோயில்கள், சுப காரியங்கள், சடங்குகள் ஆகியவற்றில் இன்று நாம் பயன்படுத்துவது பெரும்பாலும் கரிக்கட்டைகளால் ஆன தூபக் குச்சிகள் அல்லது வத்திகள். அந்த நறுமணத்திற்குப் பின்னால் ஒரு மரம் இருக்கிறது என்பதும், அது எப்படிப் பெறப்படுகிறது என்பதும் நம்மில் பலருக்கும் தெரியாது.
காடுகளும் பழங்குடி அறிவும்
சத்தியமங்கலம் காட்டுப் பகுதியில் தங்கியிருந்தபோது, அங்குள்ள பழங்குடி மக்களுடன் உரையாடும் வாய்ப்பு கிடைத்தது. அவர்களின் அன்றாட வாழ்வில் பயன்படுத்தும் மருத்துவத் தாவரங்கள் பற்றிய தகவலைச் சேகரித்தபோது, அவர்கள் குறிப்பிட்ட பல்வேறு மருத்துவத் தாவரங்களில் ஒன்றுதான் குங்கிலியம்.