

சென்னை எம்.எஸ். சுவாமிநாதன் நிறுவனத்தின் ஆண்டு மாநாடு. நாடெங்கும் இருந்து செயல்பாட்டாளர்கள் கூடியிருந்தார்கள். மேடையிலோ நான்கைந்து குழந்தைகள் விளையாடிக்கொண்டிருந்தனர். அவர்களிடையே விளையாட்டுச் சண்டை மூண்டது.
திடீரென அங்கே தோன்றி அந்தக் குழந்தைகளின் சண்டையை விலக்கிவிட்டு பேசினார் ஒரு கட்டியங்காரி. அவர் சொல்லத் தொடங்கியது புராணக் கதையோ, பொழுதுபோக்கு நகைச்சுவையோ அல்ல. சுற்றுச்சூழல் அறிஞர்கள் சில காலமாக நமக்கு விடுத்துக்கொண்டிருக்கும் எச்சரிக்கையான காலநிலை நெருக்கடி குறித்து, குறிப்பாக வெப்பநிலை அதிகரிப்பின் விளைவுகள் குறித்தே அந்தக் கட்டியங்காரி பேசினார்.
ஒரு கூத்தின் மையக்கருத்தைப் பார்வையாளர்கள் கஷ்டப்படாமல் புரிந்துகொள்ள வைப்பவர் கட்டியங்காரர். ஒரு விருந்தின் முதல் இனிப்பு வாயில் உமிழ்நீரைச் சுரக்க வைப்பதுபோல, நகைச்சுவையின் துணைகொண்டு நாடகத்துக்குள் நம்மை இவர் அழைத்துச்செல்கிறார்.
‘வெப்பத்தின் வெறியாட்டம்' என்கிற இந்தக் கூத்தில் அப்படி நமக்குத் துணையாக இருந்தவர் ராணிப்பேட்டையைச் சேர்ந்த திலகவதி பழனி. கூத்தை நிகழ்த்தியது அவர் நடத்தும் திலகம் கட்டைக்கூத்துக் குழு.
நாட்டிலேயே ஒரு பெண்ணால் நடத்தப்படும் முதல் கட்டைக்கூத்துக் குழு என்கிற பெருமை இதற்கு உண்டு. கட்டைக்கூத்து ஆசிரியர் பொ.ராஜகோபால்-நெதர்லாந்து நாட்டு ஆய்வாளர் ஹன்னா ஆகியோர் காஞ்சிபுரத்தில் நடத்திவரும் ‘கட்டைக்கூத்து சங்க'த்தின் மூலம் பயிற்சி பெற்ற பெண் கட்டைக்கூத்துக் கலைஞர்களில் இவரும் ஒருவர். பொதுவாகக் கட்டைக்கூத்து ஆண்களால் மட்டுமே நிகழ்த்தப்பட்டுவரும் நிலையில், இந்தச் சங்கமே பெண்களுக்கு முதலில் பயிற்சி அளிக்கத் தொடங்கியது.
காலநிலை அச்சுறுத்தல்
காலநிலை நெருக்கடி - அறிவியல் அறிஞர்களும் சுற்றுச்சூழல் செயல்பாட்டாளர்களும் அடிக்கடி உச்சரிக்கும் வார்த்தை. இதன் அறிவியல் சிக்கலானதாகக் கருதப்படும் அதேநேரம், அது ஏற்கெனவே நம் அனைவரையும் பாதிக்கத் தொடங்கிவிட்டது. எனவே, இது குறித்து மக்களிடம் மிக விரைவாக எடுத்துச்சொல்ல வேண்டியிருக்கிறது.
கடந்த ஆண்டின் முதல் 9 மாதங்களின் 273 நாள்களில் 270 நாள்களுக்கு இந்தியாவின் ஏதோ ஒரு பகுதி தீவிர வானிலை நிகழ்வால் பாதிக்கப்பட்டிருந்தது. 4,064 பேர் இந்த நிகழ்வுகளால் மரணித்துள்ளனர். முந்தைய நான்கு ஆண்டுகளுடன் ஒப்பிடும்போது இது 48 சதவீத அதிகரிப்பு. 4.7 கோடி ஹெக்டேர் பயிர்கள் பாதிக்கப்பட்டன.
இது முந்தைய நான்கு ஆண்டுகளுடன் ஒப்பிடும்போது 400 சதவீத அதிகரிப்பு. நாட்டிலுள்ள 18 மாநிலங்கள், மத்திய ஆட்சிப்பகுதிகள் தீவிர வானிலை நிகழ்வுகளை அதிக நாள்களுக்கு அனுபவித்துள்ளன. பருவமழைக் காலத்திலேயே தீவிர வானிலை நிகழ்வுகள் மிக அதிகமாக நிகழ்ந்துள்ளன. மொத்த 4,064 உயிரிழப்பில், 3,007 பருவமழைக் காலத்தில் நிகழ்ந்தவை.