வடசென்னை வெள்ளமும் அடுத்த தலைமுறையும்!

வடசென்னை வெள்ளமும் அடுத்த தலைமுறையும்!
Updated on
2 min read

வடசென்னையின் அடையாளங்களில் ஒன்றாக விளங்கும் வியாசர்பாடி சத்தியமூர்த்தி நகர் சாலையில் கோடு கிழித்தாற்போலத் தொடர்கின்றன குடியிருப்புகள். அதிலொன்று ஜகஜீவன்ராம் நகர்.

‘அன்றாட ஜீவனம்’ என்று சொல்லுமளவுக்குச் சாதாரண வாழ்க்கையைக் கொண்டிருக்கும் இம்மக்களுக்குப் பெருவெள்ளச் சூழல் மோசமான அனுபவங்களையே இதுவரை தந்து வந்திருக்கிறது.

2023ஆம் ஆண்டு நேரிட்ட வெள்ளத்தின்போது உடல் உபாதைக்கான மருந்துகள் வாங்க முடியாத சூழலைச் சகிக்க முடியாமல் ஒரு மூதாட்டி தற்கொலை செய்துகொண்டிருக்கிறார். வெள்ளம் சூழ்ந்த பகுதியில் உள்ளவர்களுக்குக் குப்பை சேகரிப்பு வாகனத்தில் உணவுப்பொருள் அனுப்பப்பட, அதனை மக்கள் திருப்பி அனுப்பியதும் நிகழ்ந்தது.

வெள்ளம் சூழும்போதெல்லாம் அரசு அதிகாரிகளை எப்படி அணுகுவது, இக்கட்டான நிலையை எப்படிக் கடப்பது என்கிற கேள்விகள் இப்பகுதி மக்கள் மத்தியில் எழுவதாகச் சொல்கிறார் சக்தி. இவர், இப்பகுதியிலுள்ள வியாசை தோழர்கள் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர்.

அந்தச் சூழலில்தான், வியாசை தோழர்கள் அமைப்பினருடன் சென்னை காலநிலைச் செயல்பாட்டுக் குழுவினர் (CCAG) கைகோத்தனர். “2023ல வெள்ளம் வந்தப்போ சிசிஏஜியைச் சேர்ந்த பிரசாந்தும் அவரோட தோழர்களும் அறிமுக மானாங்க. ‘இங்க ஏன் வெள்ளம் தேங்குது? எதனால தண்ணீர் வெளியேறச் சில நாள்களாகுது’ என்கிற கேள்விக்கெல்லாம் பதில் சொன்னாங்க” என்கிறார் சக்தி.

இப்பகுதியில் நிலமட்டம் ரொம்பத் தாழ்வாக இருப்பதுதான் வெள்ளநீர் தேங்கக் காரணம் என்றிருக்கிறது சிசிஏஜி. “இங்க தேங்குற மொத்த மழைநீரும் வெளியேற ஒரே ஒரு வழிதான். முன்னால, அந்த நீர் கொடுங்கையூர் சதுப்புநிலம் வழியே சென்றிருக்கிறது.

தற்போது அப்பகுதி குப்பைக்கிடங்காக மாறியிருப்பதால், அங்குச் செல்ல முடியாத வெள்ள நீர் வீடுகளுக்குள் புகுந்துவிடுகிறது” என்கிறார் சக்தி.

ஒவ்வோர் ஆண்டும் நகரப் பேரிடர் மேலாண்மை திட்டம் அரசு சார்பில் வெளியிடப்படுகிறது. அதில், வெள்ளம் பாதிக்கப்பட்ட பகுதிகளைக் குறிப்பிட்டு வரைபடம் இடம்பெறும்.

அந்த வரைபடத்தில் ஜெஜெஆர் நகர் இடம்பெறாததையும், வெள்ளக்காலத்தில் சமுதாயச் சமையலகம், சுகாதாரப் பராமரிப்பு அதிகாரிகளின் கண்காணிப்பு அங்குச் செயல்படுத்தப்படாததையும் சுட்டிக்காட்டித் தொடர்ச்சியாகப் புகார் கொடுத்திருக்கிறது வியாசை தோழர்கள் அமைப்பு.

ஒருகட்டத்தில் இது பற்றிய விழிப்புணர்வை அடுத்த தலைமுறைக்குக் கடத்துவதுதான் சரி என முடிவு செய்யப்பட்டிருக்கிறது.

“படிப்போடு சேர்த்துச் சமூகக் கல்வியையும் வியாசை தோழர்கள் சொல்லித் தர்றாங்க. குழந்தைகள்தான் எப்போதும் ஏன், எதுக்கு, எப்படி என்று கேள்வி கேட்டுக்கிட்டே இருப்பாங்க. அப்படித்தான் தினேஷ், காவ்யா, தாரணி, ரிஷிதா, ஹரிஷ், விக்னேஷ்வரி ஆகிய 6 பேரைத் தேர்ந்தெடுத்து, அவங்களை 8 மாதங்களாகச் சென்னையில இருக்கிற பள்ளிக்கரணைச் சதுப்புநிலம், பக்கிங்ஹாம் கால்வாய், எண்ணூர் முகத்துவாரம் என்று பல நீர்நிலைகளுக்கு அழைத்துச் சென்று, அவற்றோட இயல்புத்தன்மை பற்றி விளக்கினோம்.

அங்கு நடந்திருக்கிற ஆக்கிரமிப்புகளைச் சுட்டிக்காட்டினோம். கொடுங்கையூர்க் குப்பைக்கிடங்கு மாசு சீர்கேடு பற்றியும் விளக்கினோம். அரசுக்கும் மக்களுக்குமான இடைவெளியைக் குறைப்பதுதான் எங்களது நோக்கம்” என்கிறார் பிரசாந்த்.

“மண்டல அதிகாரி, ஆட்சியர், மேயர் என்று ஒவ்வொருவரிடமும் பாதிப்புகள் பற்றிப் புகார்க் கடிதம் கொடுக்கும்போது எப்படி எழுத வேண்டும் என்று சொல்லித்தர்றோம்.

நகரத் திட்டமிடல் பற்றிய அறிவை, விழிப்புணர்வை அடுத்த தலைமுறை தெரிஞ்சுகிட்டா, அவங்க அதை வேற மாதிரி பார்ப்பாங்க. அதற்கடுத்த கட்டம் நோக்கி நகர்வாங்க” என்கிறார் சக்தி.

இந்த முயற்சி பற்றிய தகவல்கள் வெளியானபிறகு, சென்னையிலுள்ள சிட்லபாக்கம், ராமாபுரம் பகுதிகளைச் சேர்ந்த சிலர் தங்களது குழந்தைகளுக்கும் கற்றுத் தருமாறு சிசிஏஜியை அணுகியிருக்கின்றனர். இந்த ஆண்டு சென்னை மாநகராட்சி வெளியிட்ட வெள்ள பாதிப்பு வரைபடத்தில் சில மாற்றங்களைச் செய்து இவர்கள் சமர்ப்பித்திருக்கின்றனர்.

மழைக்கு முன்பும் பின்பும் மழையின்போதும் தேவையான சீர்திருத்தங்கள் பற்றி ஓர் அறிக்கை தயார் செய்திருக்கின்றனர். “ஒரு வேலையச் செய்யுறதுக்காக, பக்கிங்ஹாம் கால்வாயோட ஒரு பகுதியில அடைப்பை ஏற்படுத்தியிருந்தாங்க. வெள்ளநீர் அது வழியாக வடியாமல் போனால் பாதிப்பு அதிகமாக இருக்கும். அதைத் தெரிவித்து ஆட்சியருக்கு எழுதி அனுப்பினோம்.

‘உடனடியாகச் சரிசெய்யப்படும்’ என்று பதில் கடிதம் அனுப்பிச்சாங்க” என்று ஆர்வம் கொப்பளிக்கச் சொல்கிறார் மாணவர் தினேஷ். “இந்த 6 பேரில் 2 பேர் அடுத்து ‘மாஸ்டர் ஆஃப் சோஷியல் ஒர்க்’ படிக்கப் போறதா சொல்லியிருக்காங்க. இதுதான் வெற்றி. இங்கு வாழும் சூழலை எவ்வாறு கையாண்டால் சரிசெய்ய முடியும் என்கிற வழியை அடுத்த தலைமுறைக்குக் காட்டுவதில் மகிழ்ச்சி” என்கிறார் பிரசாந்த்.

- uthayasankaran.p@hindutamil.co.in

வடசென்னை வெள்ளமும் அடுத்த தலைமுறையும்!
நாயகன்: தமிழ் சினிமாவில் நெருங்க முடியாத கிளாசிக்... ஏன்?

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in