நாயகன்: தமிழ் சினிமாவில் நெருங்க முடியாத கிளாசிக்... ஏன்?

நாயகன்: தமிழ் சினிமாவில் நெருங்க முடியாத கிளாசிக்... ஏன்?
Updated on
4 min read

தமிழ் சினிமாவில் ‘நாயகன்’ இணையற்ற கிளாசிக் என்றால் மிகையல்ல. அவசரகதி அவதானிப்புகள், முன்முடிவு தீர்ப்புகள் சடுதியாடும் ஆய்வுகளற்ற டிஜிட்டல் உலகில் ‘நாயகன்’ படத்தை ‘காட்ஃபாதர்’ காப்பி என தட்டையாக அடித்து விடப்படுவதுண்டு. மேலும், மணிரத்னம் படங்கள் ப்ளாஸ்டிக் என்றும் தட்டையாக அடித்து விடப்படுவதுண்டு. இத்தகைய அவதூறுகளுக்கு பதிலாக எழுத ஆரம்பித்த இந்தக் கட்டுரை, ‘நாயகன்’ திரைப்படம் குறித்த ஒரு சிறிய மதிப்பீடாக வந்து நின்றது.

காட்ஃபாதரின் அடித்தளமும் சொந்த ஆன்மாவும்:

எளிய மக்களை அதிகார சக்திகள் நசுக்கும்போது எதிர்வினையாக அவர்கள் மத்தியிலிருந்து ஒரு சக்தி வாய்ந்தவன் உருவெடுக்கிறான் / நீதியிலிருந்தே உருவெடுக்கும் அவன், நீதிக்கு மாறான திசையிலும் செல்ல நேர்கிறான் / இதனா‌ல் குடும்பத்துக்குள் ஏற்படும் சிதறல் / பராக்கிரமங்கள் நிறைந்த ஒரு கேங்க்ஸ்ட்டர் கதையை ஒரு நிதானமான எமோஷனல் பர்னராக ஆக உருவாக்கியது. இத்தகைய அம்சங்கள் காட்ஃபாதரில் இருந்து நாயகனுக்கு ஊக்கமளித்திருக்கிறது. இரண்டு படங்களுமே கதாபாத்திர மையம் கொண்ட (Character Driven) திரைக்கதைகள்.

ஆனா‌ல், ‘நாயகன்’ தன் சொந்த ஆன்மாவை உருவாக்கிக் கொண்ட இடமும், விதமும் என்ன?

‘காட்ஃபாதர்’ மைக்கேல் கார்லியோனது பயணம் மாஃபியா அதிகாரத்தை நிலைநிறுத்தும் நெடுங்கதை. தனது ஒவ்வொரு எதிர்கொள்ளல்களிலும் மேலும் மேலும் மூர்க்கமான கிரிமினல் லார்டாக மாறுகிறான் மைக்கேல். ஆனால், வேலு நாயக்கர் அப்படி அல்ல. காட்ஃபாதரில் இருந்து நாயகன் மாறுபட்டு தன் சொந்த ஆன்மாவை உருவாக்கும் புள்ளி இங்குத் தொடங்குகிறது.

வேலுவின் புற வாழ்வு - அக வாழ்வு என்ற இரண்டு பரிமாணங்களுக்கு இடையே மற்றொரு பரிமாணம் இருக்கிறது. அதிகார சக்திகளை எதிர்ப்பதில் பராக்கிரமம் நிறைந்தவன், குடும்பத்தினரின் மீது பாசம் நிறைந்தவன் என்ற இரண்டு பரிமாணங்களை விடவும், எளிய மனிதர்களுக்காக பரிதவிப்பவன் என்கிற வேலுவின் பரிமாணமே நாயகனின் தனித்துவம்.

தனது முதல் வியாபாரத்தை புத்திசாலித்தனமாகவும், துணிச்சலாகவும் முடிப்பார் வேலு. சாகசம் நிகழும் புற வாழ்வு. அடுத்த காட்சியில் பாலியல் விடுதியில் நீலாவை சந்தித்து மிகுந்த கரிசனத்தோடு நடந்துகொள்வார் வேலு. மனிதம் நிறைந்த புறவாழ்வு.

தந்தையைக் கொன்ற பொறுக்கி போலீஸை அடித்தே கொல்வார் வேலு. அடுத்தக் காட்சியில் நீலாவை பாலியல் தொழிலில் இருந்து விடுவித்து திருமண‌ம் செய்துள்வார் வேலு. நேசம் மிஞ்சும் அக வாழ்வு.

ஏழைகளின் வீட்டை அப்புறப்படுத்த முயலும் பணக்காரர் வீட்டை நொறுக்கி, அவனை பணிய வைப்பார் வேலு. சாகசம்! அடுத்த காட்சியில், தான் கொன்ற போலீஸின் குடும்பத்தை சந்தித்து, அவர்களுக்கு தொடர்ந்து உதவி செய்ய வாக்குறுதி அளிப்பார். மனிதம்!

பெரிய தாதாக்களை எதிர்த்து ஒரு வியாபாரத்தை முடிப்பார் வேலு நாயக்கர். சாகசம். அடுத்தக் காட்சியில் மனைவி கொல்லப்படுவார். போலீஸ் அதிகாரியின் நியாயத்துக்கு களமிறங்குவார் வேலு நாயக்கர். விளைவாக மகனை இழப்பார். மகளைப் பிரிவார். அக வாழ்வின் சிதறல் நிகழும்.

வேலு நாயக்கர் என்ற அதிகார மையம் உருவெடுக்கும் அதே வேளையில், வேலு நாயக்கர் என்கிற மனிதநேயம் மிகுந்த மாமனிதனும் உருவெடுத்துக் கொண்டே இருப்பார். மறுபுறமோ அவரது அக வாழ்வு நிர்மூலமாகிக் கொண்டே வரும். இந்த மூன்று பரிமாணங்களுக்கான காட்சிகளையும் திரையில் பின்னிய விதத்தில்,

அந்தக் காட்சிகளின் வழியே வேலு நாயக்கர் கதாபாத்திர ‘ஆர்க்’ வளர்ந்து செல்லும்போது, முத்தாய்ப்பாக வேலு நாயக்கரின் மாமனிதம் - அக வாழ்வின் ஏக்கம் மீது நிலை கொண்டதில் தனக்கான பிரத்யேக ஆன்மாவை உருவாக்கிக் கொண்டு ‘காட்ஃபாதர்’ உள்ளிட்ட கேங்க்ஸ்ட்டர் படங்களில் இருந்து விலகி புதிய திரையுயிராக பிறப்புக் கொள்கிறது நாயகன்!

வேலுவின் நேசத்துக்கான ஏக்கமும், மனிதமும் நிரம்பிய அகப்பிரதியை சரியாக கண்டுணரும் இசைஞானி, அதற்கேயுரிய பிரத்யேக இசையை படைத்து, நாயகன் என்கிற மேஜிக் சாத்தியமானது.

வெறும் கண்ணீரை சுமந்துக் கொண்டிருக்கும் ஒரு மனிதனின் கதை மிக நமுத்துப் போனதாகியிருக்கும். வெறும் பராக்கிரமங்களை சொல்லும் ஒரு கதைக்குள் எந்த மானுட தரிசனமும் நிகழாது. நீதியின்பாற் உருவெடுத்த ஒரு பராக்கிரமசாலியின் நெகிழ்ச்சி நிறைந்த பக்கங்களை திரையில் மீட்டும் போது புதிய ரசவாதம் நிகழ்ந்திருக்கிறது. ஒரு கேங்ஸ்ட்டர் தன் சாம்ராஜ்யத்தை நிலைநிறுத்த செய்யும் பராக்கிரமங்கள் நாயகனின் பிரதி அல்லவே அல்ல. கேங்க்ஸ்ட்டரின் எழுச்சி, வீழ்ச்சியை மையப்படுத்திய பல பத்து படங்களை விட ‘நாயகன்’ தனித்து உயர்ந்து நிற்குமிடம் இதுவே.

படத்தின் பலக் காட்சிகளின் உருவாக்கம் மணிரத்னத்தின் திரை ஆளுமை என்னவென்பதையும், முதல் பாராவில் குறிப்பிட்ட அவதூறு எவ்வளவு அபத்தமானவை என்பதையும் எளிமையாக விளக்கி விடும். இந்த ஒரேயொரு சாதாரணக் காட்சியைப் பார்க்கலாம்...

சிறையில் இருக்கும் வேலு நாயக்கரிடம், துணை கமிஷனர் ஒரு பொது கோரிக்கையை வைத்துவிட்டு நகரும்போது, அவரது மருமகனாக மற்றொரு கோரிக்கையை வைப்பார்... வேலு நாயக்கர் தனது சொந்த பேரனை வாழ்த்த வேண்டுமென! பெரிய நெகிழ்ச்சி இல்லாமல் தலையாட்டி விட்டு புத்தகத்தை பார்ப்பார் வேலு நாயக்கர், புத்தகம் மூக்குக் கண்ணாடியில் பிரதிபலிக்கும். கமிஷனர் நகர்ந்தவுடன் மூக்குக் கண்ணாடியை கழட்டி புத்தகத்தை விடுத்து... சிதறிய தன் அக வாழ்வுக்காக கண்ணீர் சிந்த எத்தனிப்பார் வேலு நாயக்கர். கமிஷனர் முன்பு வெளிப்படாத அந்த கண்ணீர் நம்மிடம் வெளிப்படுவதையும் அனுமதிக்காத இயக்குநர், வேலு நாயக்கர் கண்கள் கலங்குவதற்கு முன்பு சிறைக்கதவுகள் கொண்டு காட்சி சட்டகத்தை மூடி விடுவார்.

- மணிரத்னத்தின் மிகச் சிறந்த பல காட்சி உருவாக்கங்களில் ஓர் எளிய அழகிய உதாரணம் இக்காட்சி.

மறுதினம், நீதிமன்ற வளாகத்தில் ‘நீங்கள் நல்லவரா? கெட்டவரா?’ என காலத்தின் கேள்வியை கேட்பான் பேரன். இறுதியில் வேலு நாயக்கர் என்ற வரலாற்று வாசகம் மரித்துக் கிடக்கும். அந்த வாசகத்தின் முன் கேள்விக்குறிகளாக அமர்ந்திருப்பார்கள் மகளும் பேரனும்.

அதிகார சக்திகளுக்கு எதிரதிகாரமாக உருவெடுத்து, கணம்தோறும் சக மனிதர்களுக்காக பரிதவித்து, அக வாழ்க்கை நிர்மூலமாகி, நேசத்துக்கான ஏக்கத்தோடு மரித்த வேலு நாயக்கர் என்கிற பிரதி நம்முன் மென்சோக கீதமாக நிழலாடுகிறது. இத்தகையதோர் க்ளாசிக் எப்படி ப்ளாஸ்டிக்காக இருக்க முடியும்? மணிரத்னம் வெறும் பெயரல்ல. வியப்பூட்டும் ஒரு நிகழ்வு!

கமல்ஹாசன் நடிப்பு... எந்தக் காட்சியை சொல்ல, எந்தக் காட்சியை விட? விலகிய மகள் வீட்டில் பேரனின் குரல் கேட்டு நெகிழும் காட்சியா? மகளிடம்... ‘அதிகார சக்திகளின் எதிர்வினையே தனது உருவாக்கம்’ என்று சொல்லும் காட்சியா? மகன் இறப்பில் அழும் காட்சியா? தனக்காக தீக்குளித்த அஞ்சம்மாவை மருத்துவமனையில் பார்த்து உடையும் காட்சியா? இப்படி படம் நெடுக எத்தனை காட்சிகள்!

அதேபோல் இளையராஜாவின் பின்னணி இசையில், பாடல்களில் தனித்து எதை சொல்ல எதை விட?

நாயகனின் தீம் இசையான ‘தென்பாண்டி சீமையிலே’ முதல் துணை கமிஷனர் வீட்டில் மகள் புகைப்படத்தை வேலு நாயக்கர் காணும்போது பயன்படுத்திய ஒலி வரை இசைஞானி நடத்தியது இசை சாம்ராஜ்யம்!

இப்படத்தின் ஒளி பயன்பாடு, ஷாட் சட்டகங்கள், வண்ண பயன்பாடு என பி.சி. ஸ்ரீராமின் வேலைப்பாடுகளை குறித்து தனியே ஒரு கட்டுரை எழுத வேண்டும். வேலு வாழ்வின் கால மாற்றங்களை அதன் குறையாத உணர்வெழுச்சியோடும், துளி அயர்ச்சியற்ற முறைமையோடும் படத்தொகுத்த பி.லெனின், வி.டி.விஜயன் வேலைப்பாடுகள் குறித்தும் தனியே கட்டுரை எழுத வேண்டும்.

தலைவனின் பராக்கிரமம் - மாமனிதம் என்ற இரண்டு புறப்பிரதிகளையும், அதனோடு உள்முரண் கொள்ளும் நேசத்துக்கான ஏக்கம் நிரம்பியிருக்கும் அகப் பிரதியையும் திரை எழுத்தில் பின்னி, திரையில் மீட்டிய விதத்தில் இன்று வரை நெருங்க முடியாத கிளாசிக்காக திகழ்கிறது ‘நாயகன்’.

- அருண் பகத், சுயாதீன இயக்குநர் (ஏகலைவன், டைம் ப்ரொப்பெல்லர்) | தொடர்புக்கு > bhagatharun.ab@gmail.com

<div class="paragraphs"><p><strong>அருண் பகத்</strong></p></div>

அருண் பகத்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in