

கடந்த பிப்ரவரி 13 அன்று, சூரஜ் (வயது 37) சேலத்தில் இருந்த திறந்தவெளி மைதானத்தில் சுமார் நான்கு மணி நேரம் நின்றபடி, தேர்தல் பிரச்சார உரையைக் கேட்கக் காத்திருந்தார்.
பிற்பகல் தொடங்கியபோது வெப்பம் மேலும் தீவிரமடைந்தது. உரை தொடங்கிய சில நிமிடங்களிலேயே, மார்பைப் பிடித்துக்கொண்டு சூரஜ் மயங்கி விழுந்தார். ஒரு மணி நேரத்திற்குள் அவர் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டது.
தமிழ்நாட்டைச் சேர்ந்த சுற்றுச்சூழல் அமைப்பான ‘பூவுலகின் நண்பர்கள்’ மேற்கொண்ட ஆய்வு, மயங்கி விழுவதற்கு முன்பான சில மணி நேரத்தில், ‘யுனிவர்சல் தெர்மல் கிளைமேட் இன்டெக்ஸ்’ (UTCI – Universal Thermal Climate Index) எனப்படும் அளவீட்டில் 38°C-ஐ மீறிய வெப்பநிலைக்கு சூரஜ் உட்பட்டிருந்ததாகத் தெரிவிக்கிறது.
யு.டி.சி.ஐ. என்பது காற்றின் வெப்பநிலையை மட்டுமல்லாமல், ஈரப்பதம், காற்றின் வேகம், சூரிய ஒளியின் தாக்கத்தையும் கணக்கில் கொண்டு மனித உடலால் ‘உணரப்படும் வெப்பநிலை’யை கணக்கிடும் ஓர் அளவுகோல்.
இதில் 32° செல்சியஸைக் கடந்த வெப்பநிலை தீவிர வெப்ப நெருக்கடியைக் குறிக்கிறது; 38° செல்சியஸைக் கடந்தால் மிகக் கடுமையான அல்லது தீவிரமான வெப்ப நெருக்கடி நிலையைச் சுட்டிக்காட்டுகிறது.
அத்தகைய சூழலில் மிகச் சிறிய உடல் உழைப்புக்கூட ஆபத்தானதாக மாறக்கூடும். உடலின் உள் வெப்பநிலை 39° செல்சியஸைக் கடந்தால் நீரிழப்பு, உடல் உறுப்புகள் செயலிழப்பு, மரணம் போன்ற விளைவுகளுக்கு வழிவகுக்கலாம்.
சூரஜின் மரணம், பெரும்பாலும் கவனிக்கப்படாமல் இருக்கும் ஓர் உண்மையை வெளிப்படுத்துகிறது. அதிக அபாயகரமான வெப்பநிலைக்கு மத்தியிலேயே இந்தியாவில் தேர்தல்கள் நடைபெற்றுவருகின்றன.
உயிர்களைக் காவுகொள்ளும் இந்த வெப்பம், இன்னும் பொதுச் சுகாதார அச்சுறுத்தலாக உரிய முறையில் கருதப்படுவதில்லை. காலநிலை மாற்றத்தின் தாக்கத்தால் வெப்ப அலைகள் மேலும் தீவிரமடைந்துள்ளன. அதனால் உடல்நலப் பாதிப்புகள், பொதுச் சுகாதார ஆபத்துகள், நீர்வளங்களின் மீதான அழுத்தம், விளிம்புநிலை மக்கள் மீதான சுமைகள் போன்றவை அதிகரிக்கக்கூடும்.
தேர்தல் மாதம்
சமீபத்தில் தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்ற பல நாள்களில், இந்திய வானிலை ஆய்வு மையம் வெப்பஅலை குறித்த எச்சரிக்கைகளை வெளியிட்டது. இவ்வகை எச்சரிக்கைகள் தேர்தல் பிரச்சாரங்களின் வடிவத்தையே மாற்றியமைத்துள்ளன.
பல மாநிலங்களில் அரசியல் கட்சிகள் தங்களின் பிரச்சார அட்டவணையை மாற்றியமைத்தன; இதனால் பிரச்சாரக் கூட்டங்களின் நேரம் மாற்றப்பட்டிருந்தாலும், வெப்பம் தொடர்பான உடல்நலப் பிரச்சினைகள் தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே இருக்கின்றன.
இது, இந்தியாவின் மிகக் கடுமையான வெப்ப அலைகளுக்கு இடையே நடைபெற்ற 2024 நாடாளு மன்றத் தேர்தலை ஞாபகப்படுத்துகிறது. அப்போது, வெப்பமயக்கம் (heatstroke) ஏற்பட்டதாகச் சந்தேகிக்கப் பட்ட பத்தாயிரக்கணக்கான நோயாளிகள் பதிவாகினர்; நூற்றுக்கணக்கான மரணங்களும் நிகழ்ந்தன.
உயிரிழப்புகளின் எண்ணிக்கை குறித்த மதிப்பீடுகள் 360 முதல் 700-ஐ கடந்த அளவுவரை இருக்கின்றன. இந்த வெப்பத்தைச் சமாளிப்பது வேட்பாளர்களுக்கே கடினமாக இருந்தது.
வேட்பாளர்கள் மயங்கி விழுந்த சம்பவங்கள், கடுமையான வெப்பமயக்கம், நீரிழப்பால் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலைகள் இருந்ததை அதிமுக சார்பில் போட்டியிட்ட சிங்கை ராமச்சந்திரன் நினைவுகூர்கிறார்.