புவி நேரம் 2026: தலைமுறைகளை ஒன்றிணைக்கும் கீதம்!

புவி நேரம் 2026: தலைமுறைகளை ஒன்றிணைக்கும் கீதம்!
Updated on
2 min read

சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் குறித்த விழிப்புணர்வை ஊட்டும் வகையில், உலக இயற்கை நிதியத்தால் (WWF) 2007ஆம் ஆண்டு முதல் ‘புவி நேரம்’ முன்னெடுக்கப்பட்டு வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் மார்ச் மாத கடைசி சனிக்கிழமையன்று இரவு 8.30 முதல் 9.30 மணி வரை தேவையற்ற மின்விளக்குகளை அணைப்பதன் வழியே பின்பற்றப்படும் ‘புவி நேரம்’, ஒரு உலகளாவிய இயக்கமாக உருவெடுத்துள்ளது.

இந்த ஆண்டுக்கான புவி நேரம் வரும் 28ஆம் தேதியன்று கடைப்பிடிக்கப்படுகிறது. இதையொட்டி, இந்தியாவின் திரையிசைச் சாதனையாளர்களாகத் திகழும் சாந்தனு மொய்த்ரா, சங்கர் மகாதேவன், ஷான் மூவரும் ஒன்றிணைந்து ‘புவி நேரம் 2026’ கீதத்தைத் தந்திருக்கின்றனர். சங்கரின் மகன்களான சித்தார்த் மகாதேவன், சிவம் மகாதேவன் மற்றும் ஷான் மகன் மாஹி முகர்ஜியும் இதில் இணைந்து பாடியிருக்கின்றனர். இந்தப் பாடலை தன்வீர் காஸி எழுதியிருக்கிறார்.

இயற்கையைப் பேணுவது குறித்த விழிப்புணர்வு அடுத்த தலைமுறைக்குக் கடத்தப்படுவதை உணர்த்தும் வகையில் இரண்டு தலைமுறைகளைச் சேர்ந்த இசைத் திறமையாளர்களை ஒன்றிணைத்திருக்கிறது இந்தப் பாடல். சுற்றுச்சூழல் பொறுப்புத்தன்மை, தலைமுறைக்கிடையிலான பிணைப்பு, ஒன்றிணைக்கப்பட்ட நம்பிக்கை ஆகியவற்றைப் பிரதிபலிக்கிற வகையில் இது உருவாக்கப்பட்டிருக்கிறது.

“புவி நேரம் பற்றிய விழிப்புணர்வை மட்டுமல்லாமல் பொறுப்புத்தன்மையையும் கடத்த விரும்புகிறோம். இந்தப் பாடலில் குறிப்பிடப்பட்டுள்ள எதிர்காலத்தில்தான் நாம் வாழவிருக்கிறோம்” என்கிறார் இப்பாடலுக்கு இசையமைத்துள்ள சாந்தனு மொய்த்ரா. சங்கர் மகாதேவன், ஷான் உடன் அவர்களது வாரிசுகளையும் பாட வைத்திருப்பது இப்பயணத்தைத் தன் மனதுக்கு நெருக்கமாக ஆக்கியுள்ளதாகக் குறிப்பிடுகிறார்.

“இதயங்களை இணைக்கும் பாலமாக இருந்துவந்த இசை, இப்போது தலைமுறைகளுக்கு இடையேயான பாலம் ஆகியிருக்கிறது” என்று குறிப்பிட்ட சங்கர் மகாதேவன், “ஒன்றிணைந்து மேற்கொள்கிறபோது, சிறிய செயல்கள் கூட பலம்வாய்ந்த தாக்கத்தை ஏற்படுத்துவதை இப்பாடலில் சொல்லியிருக்கிறோம்” என்கிறார். கூடவே, இதிலுள்ள ஒவ்வொரு இசைக்குறிப்பும் ஆழ்ந்த அர்த்தத்தைக் கொண்டிருப்பதாகவும், புவிக்கோளின் நலம் காப்பது விருப்பமாக அல்லாமல் முக்கியக்கடமையாக இருக்க வேண்டுமென்பதை இது நினைவூட்டுவதாகவும் தெரிவித்திருக்கிறார்.

“புவி நேரம் 20வது ஆண்டை நோக்கிப் பயணிப்பது, ‘மாற்றம் சாத்தியம்’ என்று நம்புகிற மக்களின் அக்கறையைப் பிரதிபலிக்கிறது. பூமியை நேசிக்க வேண்டும் என்கிற மிகப்பெரிய பாடமொன்றை அடுத்த தலைமுறைக்கு இப்பாடல் கடத்துமென்று நம்புகிறேன். வரும் 28ஆம் தேதி இரவு 8.30 – 9.30 மணியளவில் தேவையற்ற விளக்குகளை அணைப்பதன் மூலமாக, ஓர் அர்த்தமுள்ள மாற்றம் நிகழ வேண்டும்” என்கிறார் பின்னணிப் பாடகர் ஷான்.

இந்தித் திரையுலகின் புகழ்மிக்க ஜாம்பவான்களை ஒன்றாக இணைத்திருக்கும் இந்த ‘புவி நேர’ கீதம், “அனைவரும் ஒன்றிணைந்து வாழ்கிற வீடான இந்தப் பூமியின் எதிர்காலம், இன்று நாம் தேர்ந்தெடுக்கிற விருப்பங்களைச் சார்ந்திருக்கிறது” என்பதைத் தெளிவுற உணர்த்துவதாக உள்ளது.

2026ஆம் ஆண்டுக்கான புவி நேரத்தின் அடையாள ஆளுமைகளாக விஸ்வநாதன் ஆனந்த், பி.வி.சிந்து, ரிக்கி கேஜ், தியா மிர்ஸா, சுதர்சன் பட்நாயக், பிரதீப் கிருஷ்ணன், அமான் அலி பங்கஷ், அவான் அலி பங்கஷ், பஞ்சாப் கிங்ஸ், சாந்தனு மொய்த்ரா, த்ருக்பா துக்ஸே ரின்போசே, குல்சும் ஷதாப் வஹாப், சோஹம் தேசாய், ஜோய் பருவா, ப்ரேஸியா பொமன்பேஹ்ரம் ஆகியோர் உள்ளனர்.

கொண்டாட்டமும் உறுதிமொழியும் இணைந்த இந்தப் புவி நேரத்தைப் பின்பற்றுவது, இந்த ஒரு மணி நேரத்தைக் கடந்து பல காலம் மக்கள் மனங்களில் எதிரொலிப்பதாக அமையட்டும்.

புவி நேரம் 2026: தலைமுறைகளை ஒன்றிணைக்கும் கீதம்!
8 A.M. Metro: விட்டு விடுதலையாகும் இராவதி | திரை தேவதைகள் 10

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in