

அனுராதபுரம் போதி மரம்
இலங்கையின் அனுராதபுரத்தில் உலகின் மிகவும் பழமையான (2,300 ஆண்டுகள் பழமை) அரச மரம் இருக்கிறது. இங்குள்ள ஜெய ஸ்ரீமகா போதி ஆலயத்தில் உள்ள மகாமேவுனா தோட்டத்தில் பொ.ஆ.மு. (கி.மு.) 288இல் அசோகரின் மகள் சங்கமித்திரையால் நடப்பட்ட அரச மரம் இது. பிஹாரின் கயையில் உள்ள புத்தர் ஞானம் பெற்ற அரச மரத்திலிருந்து உருவான மரமாக இது கருதப்படுகிறது. இந்த மரத்தின் வளர்ச்சியும் பாதுகாப்பும் ஆவணப்படுத்தப்பட்டுள்ளன.
இந்த மரத்தை உள்ளடக்கிய பண்டைய அனுராதபுரம் யுனெஸ்கோ உலக மரபுச்சின்னங்கள் பட்டியலில் இடம்பெற்றுள்ளது. உலகின் மிகவும் பழமையான அரச மரமாக இது மதிக்கப்படுகிறது.
இந்த மரத்திலிருந்து பெறப்பட்ட மரக்கன்று ஒன்றை கௌதம புத்தர் ஞானம் பெற்ற கயையில் 1881இல் பிரிட்டன் தொல்லியலாளர் அலெக்சாண்டர் கன்னிங்ஹாம் நட்டார். பிரிட்டன் பொறியாளரான இவரே, இந்தியத் தொல்லியல் ஆய்வு நிறுவனத்தை நிறுவி, அதன் முதல் தலைமை இயக்குநராகச் செயல்பட்டவர். சாஞ்சி, சாரநாத், பௌத்த கயை ஆகிய பகுதிகளில் தொல்லியல் ஆய்வு மேற் கொண்டவர்; தட்சசீலம், நாளந்தா, ஸ்ராவஸ்தி உள்ளிட்ட தலங்களை அடையாளம் கண்டவர்.
சிந்துவெளியில் அரசு
புத்தர் அரச மரத்தின் கீழ் செய்த தியானத்தால் ஞானம் பெற்றதால், இது போதி (ஞான ஒளி) மரம் என வணங்கப்படுகிறது. நாட்டார் தெய்வங்கள், இந்துக்கள், சமணர்கள் எனப் பல மதத்தினரும் இந்த மரத்தைப் புனிதமாகக் கருதுகிறார்கள்.
புத்தரின் காலத்துக்கு முன்பே சிந்துவெளி நாகரிகத்தில் அரச மரம் வழிபாட்டுக்கு உரியதாகக் கருதப்பட்டது. 1920களில் மேற்கொள்ளப்பட்ட அகழாய்வின்
போது பிரிட்டன் தொல்லியலாளர் மார்டைமர் வீலர் கண்டெடுத்த சிந்துவெளி முத்திரை ஒன்றில் அரச மரமும், அதன் கீழே இரண்டு ஒற்றைக்கொம்பன்களும் இருந்தன. வேறு பல முத்திரைகளிலும் அரச மரம் இடம்பெற்றுள்ளது. வாழ்க்கை தரும் மரமாக சிந்துவெளி மக்களால் அரசு கருதப்பட்டது.
நம் கிராமங்களில் அரச மரத்தடியில் பிள்ளையார், நாட்டார் தெய்வங்கள் வைத்து வணங்கப்படுகின்றன. மதங்களைக் கடந்து வழிபாட்டு இடங்களிலும் கோயிலுக்கு அருகேயும் இந்த மரம் வளர்க்கப்பட்டதால், இதன் அறிவியல் பின்பெயர் ஆங்கிலத்தில் religiosa என அமைந்தது.
சிந்துவெளி முத்திரை