

பட்டைத்தலை வாத்துகள். |படங்கள்: வினோபா கார்த்திக் |
நெல்லையிலிருந்து சுமார் 30 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது கூந்தன்குளம் பறவைகள் சரணாலயம். கூந்தன்குளத்தில் பறவைகளைக் காண வேண்டுமென்றால், நாம் முதலில் சந்திக்க வேண்டிய நபர் பறவை ஆர்வலர் பால்பாண்டியன்.
தன்னை மட்டுமன்றி, தன் குடும்பத்தையே பறவைகளுக்காக அர்ப்பணித்திருக்கிறார். 14 வயதிலேயே தன் தந்தையுடன் மீன்பிடிக்கச் செல்லும்போது ஏற்பட்ட பறவைக் காதல், அவரின் 74 வயதுவரை தொடர்கிறது! பத்தாம் வகுப்பு வரையே படித்திருந்தாலும் வெளிநாட்டுப் பறவையியல் ஆராய்ச்சியாளர் ஒருவர் அறிமுகம் செய்த சாலிம் அலியின் புத்தகங்களின் மூலம் வலசைவரும் பறவைகளை அறிந்துகொண்டவர்.
174 வகையான பறவைகளை இங்குக் கண்டறிந்தும் இனப்பெருக்கக் காலத்தில் கீழே விழும் பறவைக் குஞ்சுகளைப் பாதுகாத்தும் சேவை செய்துவந்திருக்கிறார்.
பால்பாண்டியனுடன் விஜயநாராயணம் ஏரிக்குப் புறப்பட்டோம். வழியில் ‘கல் குருவி’ (Indian Courser) குடும்பம் ஒன்று வயலில் திரிந்துகொண்டிருந்ததைக் கண்டோம். குளிர்காலமானதால் ஏரியின் பெரும்பகுதி விஸ்தாரமான புல்வெளியாக விரிந்துகிடந்தது பிரமிப்பை ஏற்படுத்தியது. ஏரியின் தென்பகுதியில் தண்ணீர் நிறைந்த அணைக்கட்டும் வடபகுதியில் பசும்கம்பளம் விரித்த மேய்ச்சல் வெளியும் இருந்தன.
பால்பாண்டியன் வண்டியிலிருந்து இறங்கித் தன் இருகண்ணோக்கியை உயர்த்தினார். வயல்எலி போன்ற சிறு விலங்குகளையும், பாம்பு போன்ற ஊர்வனவற்றையும் வேட்டையாடும் பறவை வெள்ளைப் பூனைப் பருந்து (Pallid Harrier).
சாம்பல் பூனைப்பருந்து (Montagu’s Harrier) என்றொரு வகையும் உள்ளது. இரண்டுமே விஜயநாராயணத்தில் வாழ்கின்றன. புல்வெளிகள் பூனைப்பருந்துகளுக்குப் பிடித்தமான வேட்டைக்களம். புல்வெளியின் மீது தாழப் பறந்து இரை தேடுவது இவற்றின் குணம். அதிகாலை அல்லது பின்மாலைப் பொழுதில் இங்கு வேட்டைக்கு வருகின்றன.