

புல் வகையைச் சேர்ந்தது மூங்கில். இங்கு ஐந்து வகை மூங்கில்களை நடவு செய்தோம். மூங்கில் வறட்சியைத் தாங்கி வளரும் தன்மையுடையதே. ஆனாலும் கடும் வறட்சியில் சில மூங்கில்கள் காய்ந்துவிட்டன.
1. சிறுமூங்கில்: இதில் இப்போது ஒரு புதர் மட்டுமே உள்ளது. இது அளவில் சிறியது. மிக உயரமாக வளரவில்லை. அதற்கு அருகில் வாகை மரம் மிக உயர்ந்து நிற்பதால், அதன் வளர்ச்சி தடைபட்டதா எனத் தெரியவில்லை.
2. துளையில்லா மூங்கில்: வழக்கமாக மூங்கிலின் உள்ளே கணுக்களுக்கு இடையில் துளைகள் இருக்கும். ஆனால், இந்த மூங்கிலில் துளைகள் இல்லை. மிகவும் கெட்டியாக, கடினமாக, வலிமையாக உள்ளது. அதில் துளையிட்டு வேலை செய்வது மிகவும் கடினம்.
என்னிடம் துளையிடும் கருவிகள் இல்லை. பயன்படுத்த இயலாமல் பழுதான கத்தரிக்கோலுக்கு மூங்கில் கைப்பிடியிட்டு அதையே துளையிடும் கருவியாகப் பயன்படுத்துகிறேன். பெரும்பாலும் பழைய பொருள்களை வீணாக்காமல் மறுசுழற்சி செய்வதில் மகிழ்ச்சியும் நிறைவும் அடைகிறேன்.
3. முள் மூங்கில்: இதில் முள் உண்டு. எனவே, இதை வேலி ஓரமாக நட்டு வைத்தோம். இவையும் அதிகம் வளரவில்லை. ஆனால் அதேநேரம், வறட்சியில் காய்ந்தும் விடவில்லை.