

அரப்பு மரம்
‘ஆலும் வேலும் பல்லுக்கு உறுதி; நாலும் இரண்டும் சொல்லுக்கு உறுதி’ என எண்ணிய காலமெல்லாம் மலையேறிவிட்டது. இப்போது குச்சியால் பல் தேய்ப்பவர்கள் மிகக் குறைவே! நாங்கள் சிறியவர்களாக இருந்தபோது நெல் உமிச் சாம்பலைப் பயன்படுத்திக் கை விரலால் பல் துலக்கினோம். இப்போது பல் துலக்கப் பலவகைப் பற்பொடிகள், பற்பசைகள் வந்துவிட்டன.
பல் துலக்கப் பயன்படுத்தும் துலக்கியைச் (Brush) சில மாதங்களுக்கு ஒருமுறை மாற்ற வேண்டும் என மருத்துவர்கள் சொல்கிறார்கள். உலகம் முழுவதும் பல கோடி பேர் பயன்படுத்தும் பல் துலக்கிகள், பற்பசை ட்யூப்கள் என ஆண்டுதோறும் தூக்கி எறியும் ஞெகிழிக் குப்பையை நினைத்தால் வருத்தமே மேலோங்குகிறது. இதற்கெல்லாம் தீர்வு ஏது?
அரப்பு மரம்
குளிக்க, துணி துவைக்க, பாத்திரம் தேய்க்க எனப் பலவகையிலும் பயன்படுத்தும் செயற்கைப் பொருள்களால் சூழல் மாசு மிகுந்துவிடுகிறது. சிறு வயது முதல் உடம்பு, தலைக்குத் தேய்த்துக் குளிக்கக் கடலைமாவு, அரப்புத்தூள் போன்றவற்றையே நாங்கள் பயன்படுத்துகிறோம்.
இங்கு வரும் முன் நாங்கள் இருந்த ஊர்களில் அரப்பு மரங்கள் இல்லை. ஆனால், அரப்புத் தூளை வேறு இடங்களில் இருந்து கொண்டுவந்து விற்பனை செய்வார்கள். இங்கு காட்டில் அரப்பு மரங்கள் நிறைய உள்ளன.
அவை இந்த இடத்தில் இயற்கையாகவே வளர்பவை. இந்த மரத்திற்கு உசிலை மரம் என்கிற பெயரும் உண்டு. இங்கு இவை நிறையக் கிடைப்பதால் மிகவும் வசதியாக இருக்கிறது.