

காட்டுக்குச் செல்கையில் கண்ணில்படும் குப்பைகளைப் பொறுக்குவதுண்டு. அதைத் தனிமனிதப் பொறுப்பாகக் கருதுவதில்லை. மாறாக, காட்டுயிர்களுக்கு அதனால் தீங்கு ஏற்பட்டு விடக் கூடாது என்கிற அக்கறைதான்.
ஆனால், நகரங்களில் குப்பைப் பொறுக்கும் நிகழ்ச்சிகளுக்கு அழைத்தால் செல்வதில்லை. அவை விழும் குப்பையில் மக்களுக்கு மட்டுமே பங்கிருப்பது போன்ற தவறான கருத்தை விதைப்பதே முதற்காரணம்.
யார் பொறுப்பு? - குப்பையில் மக்களின் பங்கு என்பது பகுதியளவே உண்மை. பல்லாண்டுகளாகக் கடைகளுக்குச் செல்கையில் துணிப்பை எடுத்துச் செல்கிறேன். ஆனால், பைக்குள் வந்து விழும் பொட்டலங்கள் அனைத்தும் ஞெகிழியாக உள்ளன. அவைதான் குப்பையாகின்றன. துணிப்பை ஆவதில்லை. இதற்கு யார் பொறுப்பு?
நம்மிடம் ஒரு பழமொழி உண்டு. ‘எரிவதை அணைத்தால் கொதிப்பது நின்றுவிடும்.’ ஆனால், குப்பையை உருவாக்குபவர் ஒரு போதும் பொறுப்பேற் பதில்லை. மாறாக, பயன்படுத்திய ஒரே காரணத்துக்காக நம் தலையில் பொறுப்பைச் சுமத்திவிடுகின்றனர். இதில் பெருங்கொடுமை நாம் போடாத குப்பை களையும் நாம் சுமக்க வேண்டியிருப்பதே.
இந்தியா வரும் அமெரிக்கக் குப்பை: அமெரிக்க நாட்டிலுள்ள வீடுகளின் குப்பைத் தொட்டியின் அடியில் ஓர் ஓட்டை இருக்கிறது. தொட்டியில் குப்பையைக் கொட்டினால் அது ஓட்டையின் வழியே நேரே மூன்றாம் உலக நாடுகளுக்கு வந்து விழுகிறது. 2017ஆம் ஆண்டில் மட்டும் அந்நாடு 9,49,789 டன் ஞெகிழிக் கழிவுகளை மூன்றாம் உலக நாடுகளுக்கு ஏற்றுமதி செய்துள்ளது. அவற்றை இறக்குமதி செய்வதற்காகவே பல நிறுவனங்கள் இங்கு இயங்குகின்றன.
இங்கும் ஐடிசி நிறுவனம் ரப்பர் கழிவு என்று மருத்துவ நஞ்சு கலந்த கையுறைகள், பயன்படுத்தப் பட்ட ஆணுறைகள் அடங்கிய கண்டெய்னரை இறக்குமதி செய்ய முற்பட, அக்கப்பல்கள் சென்னை உயர் நீதிமன்ற உத்தரவால் திருப்பி அனுப்பப்பட்டன. இரட்டைக் கோபுர இடிபாட்டுக் கழிவுகளும் மூன்று கப்பல்களில் சென்னைக்கு வந்தது தனிக்கதை.
சுற்றுச்சூழல் தொழில்! - நம்மைக் குப்பை அள்ள அழைப்பு விடுக்கும் சில சுற்றுச்சூழல் அமைப்புகள், இது சார்ந்த அரசியலை பேசுவதில்லை. பேசினால் நிதியுதவி நின்றுவிடுமே? மாணவர்களின் துணையுடன் நீர்நிலைகளில் குப்பை அள்ளும் தன்னார்வ நிறுவனம் நடத்தும் ஒருவர், அதற்காக நிதியுதவி பெற்று வசதியாக வாழ்ந்துவருகிறார். சுற்றுச்சூழலியல் என்பது பலருக்கும் தொழிலாக மாறிவிட்டது.
ஆற்றலை நுகரும் எந்தவொரு உயிரினமும் கட்டாயம் கழிவுகளை வெளிப்படுத்தும் என்பதும், அக்கழிவு எப்போதும் குறைந்த தரத்திலேயே அமையும் என்பது அடிப்படைப் பாடம் என்பார் ஜேம்ஸ் லவ்லாக். இப்பாடம் கழிவைத் திட்டமிட்டே உருவாக்கும் நிறுவனங்களுக்குத் தெரியாதா என்ன?
எது கழிவு? - கழிவு என்பது தவறான இடத்தில் உள்ள மூலப்பொருள் என்பார் ஆனி லியோனார்டு. தனித்தனியே இருக்கும் தனிமங்களை ஒன்றுசேர்த்துப் பொருளாக்கினால் அதுவே கழிவாக மாறும் என்பார் பேராசிரியர் பால் கோனெட்.
ஒரு காலி அலுமினியக் கேனைக் கையில் வைத்துக்கொண்டு இது என்ன என்று கேட்டால், அதை ‘அலுமினிய கேன்’ என்போம். அதுவே குப்பைக் கூடைக்குள் இருக்கையில் என்னவென்று கேட்டால் ‘குப்பை’ என்போம். ஆக, கழிவு என்பது அது இருக்கும் இடத்தை வைத்தே வரையறுக்கப்படுகிறது என்று விளக்குவார் அவர்.
நுகர்வை அதிகரிக்கும் நோக்கில் திட்ட மிட்டே குறைந்த ஆயுளுடன் பொருள்கள் உருவாக்கப்படுகின்றன. பழுது நீக்குவதைவிடப் புதியதை வாங்குவது மலிவானது என்கிற நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளோம். மறுசுழற்சி என்பதும் கானல் நீர்த் தோற்றமே.
அது மக்களிடம், பொருள்தான் மறுசுழற்சிக்குச் செல்கிறதே என்ற போலித்தோற்றத்தை உருவாக்கி நுகர்வை மேலும் அதிகரிக்கவே உதவுகிறது. எல்லாக் கழிவு களையும் மறுசுழற்சி செய்ய முடியாது. செய்தாலும் மறு உருவாக்கத்தில் அதன் தரம் குறைந்துவிடும். அதனை ‘டவுன்சைக்கிள்’ (Downcycle) என்பர். எடுத்துக்காட்டாக, புட்டிநீர் குப்பிகளை மறு சுழற்சி செய்து மீண்டும் அதே தரத்திலான புட்டிநீர் குப்பிகளாக மாற்ற முடியாது.
மறுசுழற்சிக்குப் பணம் தருவதன் மூலமாகத் தயாரிப்பாளரைப் பொறுப்பேற்கச் செய்யும் EPR (Extended Producers Responsibility) முறையாலும் பெரிதாகப் பலனில்லை. எனவே, குப்பை என்பது மக்கள் வரிப் பணத்தில் இயங்கும் அரசின் தலையில்தான் விடிகிறது.
தூய்மை அரசியல்: தூய்மை இந்தியா திட்டம் பேரளவில் விளம்பரம் செய்யப்படுகிறது. நம் கையில் பொறுப்பை ஒப்படைப்பதற்காக, பிரதமர் உள்ளிட்ட உயர் பொறுப்பில் இருப்பவர்கள் குப்பைகளைப் பெருக்குவது போன்ற ஒளிப்படங்களும் வெளியாகும். அதற்காகப் பெருநிறுவனங்கள் கோடிக்கணக்கில் நிதியளிப்பதும் விளம்பரமாகிறது. ஆனால், குப்பைகளை உற்பத்தி செய்வது அந்த நிறுவனங்களே என்பது மட்டும் செய்தியாகாது.
நூற்றுக்கணக்கான உயிர்களைப் பலிவாங்கிய போபால் யூனியன் கார்பைடு ஆலையின் எழுபது ஏக்கர் நிலத்தில் நூற்றுக்கணக்கான டன் எடையுள்ள நச்சுக் கழிவுகள் இன்னமும் அகற்றப்படாமல் உள்ளன. அந்தக் குப்பையைத் தூய்மைப்படுத்த எந்த துடைப்பானும் இதுவரை செல்லவில்லை. இதுதான் தூய்மை இந்தியாவின் அரசியல்.
- கட்டுரையாளர், சூழலியல் எழுத்தாளர்; vee.nakkeeran@gmail.com