

எவ்வித எதிர்பார்ப்பும் இன்றி மரக்கன்றுகளை நட்டு வளர்த்து வரும் மாமனிதர்களுக்கு என் தலைதாழ்ந்த வணக்கம். கேலிகளைப் பொருள்படுத்தாமல் மனிதருக்கு நிழலையும் பறவைகளுக்கும் சிற்றுயிர்களுக்கும் வாழ்விடத்தையும் அமைத்துத் தருவது ஒன்றே இவர்களது நோக்கமாக இருந்திருக்கும். இங்கே கூறப்போவது இவர்களைப் பற்றியல்ல.
அதானி நிறுவனம் 2030க்குள் 10 கோடி மரங்களை வளர்க்கப் போவதாகத் தெரிவித்ததும், அதைச் சிலாகித்து ஒருவர் பதிவிடுகிறார். அந்த அளவுக்குத்தான் சுற்றுச்சூழல் அரசியல் சார்ந்த புரிதல் நம்மூரில் இருக்கிறது. அந்த நிறுவனம் குஜராத்தின் முந்த்ரா பகுதியில் உயிர்ப்பன்மை வளமிக்க அலையாத்திக்காடுகளை அழித்துவிட்டு ஆலையைக் கட்டியது ஏன் என்று அவர் கேட்கவில்லை. சுற்றுச்சூழலியல் என்பது பாவத்தைக் கழுவும் ஆன்மிகச் சடங்கா?
பெருநிறுவனங்கள் குறிப்பிட்ட விழுக் காடு தொகையைச் சமூக சேவைக்காகச் செலவிட வேண்டும் என்பது விதிமுறை. அது, ‘கார்ப்பரேட் சமூகப் பொறுப்பு’ (CSR - Corporate Social Responsibility) நிதி எனப்படும். இந்நிதியைப் பெறுவதற்குப் பல தொண்டு நிறுவனங்கள் போட்டியிடும். அதில் சுற்றுச்சூழல் தன்னார்வ அமைப்பு களும் அடக்கம். பேரளவில் சூழலை அழித்த நிறுவனங்களிடம் இருந்து நிதி வாங்கி, சிறு அளவில் சூழலை மீட்பதே இவர்களது பெருந்தொண்டு!
மறைமுகக் காடழிப்பு: ஆண்டுக்குத் தோராயமாக 38,300 ச.கி.மீ காடுகள் அழிக்கப்படுகின்றன. இது சுவிட்சர்லாந்து நாட்டின் பரப்பளவுக்குச் சமம். இன்றும் வல்லரசு நாட்டு மக்களின் கழிப்பறைத் தாளுக்காகக் காடுகள் அழிக்கப்பட்டு, தைல மரங்கள் நடப்படுகின்றன.
20ஆம் நூற்றாண்டுத் தொடக்கத்திலிருந்து சுமார் ஒரு கோடி சதுர கி.மீ. பரப்பளவுக்குக் காடுகள் அழிக்கப்பட்டுள்ளன என்று உலக வங்கியே மதிப்பிட்டுள்ளது. அதற்கு அவ்வளவு அக்கறையா என்று எண்ண வேண்டாம். எல்லாம் ‘கார்பன் டிரேடிங்’ என்னும் கரிம வணிக அக்கறைதான்.
காலநிலை மாற்ற நெருக்கடியால் வளர்ந்த நாடுகள் தம் கரிம வெளியீட்டைக் குறைக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. எனவே, அவை மாற்றுத் திட்டம் ஒன்றைக் கண்டறிந்தன. தம்மைவிடக் குறைந்த அளவில் கரிமத்தை வெளியிடும் வளரும் நாடுகளிலுள்ள ஆலைகளின் கார்பன் பங்குகளை விலை கொடுத்து வாங்குவதே கரிம வணிக திட்டம். அதன்வழி, வளர்ந்த நாடுகள் தாம் வெளியிடும் மாசைக் குறைத்துக்கொள்ளாமல் தொடர்ந்து புதைபடிவ எரிபொருளை எரித்து கார்பனை வெளியிடலாம்.
நிலநடுக்கோட்டுப் பகுதியிலுள்ள நாடுகளின் காடுகளும் கரிம வணிகத்தில் இணைக்கப்பட்டுள்ளன. அக்காடுகள் சேமிக்கும் கரிமத்தைப் பங்குகளாக மாற்றி அங்கு முதலீடு செய்கின்றனர். 2007இல் பாலி மாநாட்டில் உருவாக்கப்பட்ட REDD (Reducing Emissions from Deforestation and forest Degradation) திட்டம் இயற்கையான காட்டுக்கும் செயற்கையான காட்டுக்கும் அதிக வேறுபாடு பார்ப்பதில்லை.
இதன்படி காடுகளை அழித்துத் தேக்கு, யூகலிப்டஸ், செம்பனை மரங்களை நடுவது காடுகளை அழிப்பதாகக் கருதப்பட மாட்டாது. இது காடுகளை அழித்து ஓரினத் தோப்புகளை உருவாக்கி இரட்டை லாபம் பெறும் திட்டம். ரஷ்ய நிறுவனம் ஒன்று இந்தோனேசியாவில் பல்லாயிரம் ஏக்கர் சதுப்புநிலங்களை அழித்து செம்பனை பயிரிட்டது என்கிறார் எழுத்தாளர் இரா.முருகவேள்.
தவறான அடையாளச் சின்னம்: கரிமச் சந்தை என்பது இன்று ஏறத்தாழ 160 கோடி டாலர் மதிப்புமிக்க வணிகம். இந்திய அரசும் தன் வசமுள்ள காடுகளை 30 விழுக்காடாக உயர்த்தி, அதனை கார்பன் பங்குகளாக மாற்றி லாபம் ஈட்ட முயல்கிறது. அதற்காகத் தொல்குடிகளைக் காட்டிலிருந்து விரட்டியடிக்கவும் முயல்கிறது.
ஆனால், பொழுதுபோக்குச் சுற்றுச்சூழலியல் இந்த அரசியல் பற்றியெல்லாம் பேசாது. மாறாக, மரம் நடுவது என்பது தனிநபர் பொறுப்பு மட்டுமே என்பதாக அரசியல் செய்யும்.
இதனை முன்னின்று செய்தவர்களுள் ஒருவரே முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம். இன்றைய ஃபேஷன் சுற்றுச்சூழலியலுக்கு அவர்தான் அடையாளச் சின்னம். நாட்டின் உயரிய பதவியிலிருந்தும்கூட மரங்களை எங்கு வளர்க்க வேண்டுமோ அங்கு வளர்ப்பதற்கு அவர் முற்படவே இல்லை.
அவர் பதவி வகித்த 2002-2007 காலகட்டத்தில் இந்திய அரசில் ஏறக்குறைய 3,25,000 ஹெக்டேர் காடழிப்பு நடந்துள்ளது என்றும், அதில் 0.83 அளவு மரப்பரப்பு இருந்ததாகவும் குளோபல் ஃபாரஸ்ட் வாட்ச் அமைப்பின் இணையதளம் தெரிவிக்கிறது.
உள்ளூர் மரவளர்ப்பு என்பது அந்த இடத்தின் நுண் காலநிலையை மட்டுமே தீர்மானிக்கும். ஆனால், பருவமழையில் பங்கு வகிப்பவை காடுகளே. அத்தகைய காடுகளை அழித்துவிட்டு ஊர்ப்புறங்களில் மட்டும் மரம் வளர்க்கச் சொன்னால் எப்படி மழை வரும்?
கட்டுரையாளர், சூழலியல் எழுத்தாளர்