

நமது மத்திய அரசு, ‘சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு 2020 திருத்த வரைவு அறிக்கை’யை வெளியிட்டபோது சமூக ஊடகம் முழுவதும் பொங்கிப் பொங்கல் வைத்தது. சுற்றுச்சூழலுக்கு முன்பின் அறிமுகமற்றவர்களும் சுற்றுச்சூழல் குறித்துப் பேசியபோது, இவ்வளவு விழிப்புணர்வா?’ என்று வியப்பு மேலிட்டது.
குறிப்பாக, ஓர் இளம்பெண் ஆவேசமாகப் பேசிய காணொளி எங்கும் பரவி அவரைப் பற்றி அட்டைப்படக் கட்டுரையும் ஓர் இதழில் வெளியானது. பின்னர், அவர் ஓர் அரசியல் கட்சியின் சட்டமன்ற வேட்பாளராகவும் உயர்ந்தார். ஆனால், இப்போது அவரை வலைவீசித் தேடிக் கொண்டிருக்கிறேன். எங்குத் தலைமறைவாகச் சுற்றுச்சூழல் சேவையாற்றுகிறார் என்பது தெரியவில்லை.
இது ஓர் ஆபத்தான போக்கு. சுற்றுச்சூழல் துறை ஒன்றும் அவ்வப்போது தங்கிச் செல்லும் வாடகை விடுதியில்லை. சுற்றுச்சூழல் ஆர்வலர்களில் இரண்டு பிரிவினர் உள்ளனர். ஒரு பிரிவினர் ‘பேஷன்’ (Passion) சுற்றுச்சூழலியலாளர் என்னும் தீவிர சுற்றுச்சூழலியலாளர். மற்றொரு பிரிவினர் ‘ஃபேஷன்’ (Fashion) சுற்றுச்சூழலியலாளர் என்னும் ‘பொழுதுபோக்கு சுற்றுச்சூழலியலாளர்.’
போலி விழிப்புணர்வு: கார்பரேட்களுக்கு ‘பேஷன்’ சுற்றுச் சூழலியலாளர்களைப் பிடிக்காது. ‘ஃபேஷன்’ சுற்றுச் சூழலியலாளர்களையே பிடிக்கும். ஆபத்தில்லாத இவர்களையே நிறுவனங்களும் அரசுகளும் அரவணைத்துக் கொள்ளும். ஏனெனில், இவர்கள் தீபாவளிக்கு வெடிக்கும் ராக்கெட்டுகளைப் போன்ற வர்கள்.
பற்ற வைத்ததும் சட்டென்று சீறிப்பாய்ந்து வெடித்து, வெடிமருந்து தீர்ந்ததும் கீழே வீழ்ந்து காணாமல் போய்விடுவர். தீவிரச் சுற்றுச்சூழலியலாளர்கள் கார்பரேட்களுக்கு என்றும் கண்ணிவெடி. எங்கே வெடிக்க வேண்டும், எப்போது வெடிக்க வேண்டும் என்பதைத் தெரிந்து வைத்திருப்பார்கள்.
எனவேதான், நிறுவனங்களும் அரசுகளும் திட்டமிட்டே ஃபேஷன் சுற்றுச்சூழலியலாளர்களை உருவாக்குகின்றன. இவர்களுக்கு உதவியாக, பல தொண்டு நிறுவனங்களும், கிளப்களும் ஃபேஷன் சுற்றுச்சூழல் கருத்துக்களை மட்டுமே பரப்புவதைக் காணலாம்.
சுற்றுச்சூழல் சீர்கேட்டுக்கு மூலகாரணம் முதலீட்டிய பொருளாதாரமே என்பதை மக்கள் உணராதவாறு சேவையாற்றுவதே இவர்களது முதன்மைப் பணி. எனவேதான், ‘மரம் வளர்ப்போம் மழைப் பெறுவோம்’ என்பது போன்ற வாசகங்களைத் தாண்டி இவர்களது சுற்றுச்சூழல் சேவை அமையாது.
ஃபண்டு இருந்தால் தொண்டு: இன்று ‘சுற்றுச்சூழல்’ என்பது சிலருக்குத் தொழில். அதிலும், சில தொண்டு நிறுவனங்கள் நிதியுதவி கிடைக்கும் வரையே தம் சுற்றுச்சூழல் சேவையைத் தொடர்வர். அதனால், ‘ஃபண்டு இல்லையேல் தொண்டு இல்லை’ என்று இவர்களைப் பற்றிக் குறிப்பிடலாம்.
இதைத் தொழிலாகக் கொள்வது என்பது ஒருவரது சொந்த விருப்பம். ஆனால், அதை ‘சுற்றுச்சூழல் சேவை’ என்று குறிப்பிடுவதுதான் சிக்கல். ஏனென்றால், இவர்களுக்கு நிதியுதவி வழங்கும் நிறுவனங்கள் அல்லது அமைப்புகளுக்கு மறைமுக நோக்கங்கள் உள்ளன. அதற்கான கருவிகளாகவே இவர்கள் செயல்பட முடியும்.
ஃபேஷன் சுற்றுச்சூழலை வளர்த்துவிடுவதில் பெருநிறுவனங்களுக்கு வேறு சில வசதிகளும் உள்ளன. அது சமூக அநீதியை மறைக்க உதவும். சுற்றுச்சூழல் சீர்கேடுகளுக்குத் தனி மனிதரே பொறுப்பு என்று எளிதாகத் தட்டிக் கழித்துவிடலாம். ஏற்கெனவே, மக்களிடையே சுற்றுச்சூழல் சீர்கேட்டுக்குத் தாமே பொறுப்பு என்கிற குற்றவுணர்வு உருவாகியுள்ளது.
அதைப் போக்க சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கு ஏதேனும் செய்ய வேண்டும் என்று நினைக்கின்றனர். இது செய்த பாவத்துக்குக் கோயில் உண்டியலில் பணம் போடும் மனநிலை. இத்தகைய அப்பாவிகளையே ஃபேஷன் சுற்றுச்சூழல் குறிவைக்கிறது.
குழாயில் சொட்டும் நீரை நிறுத்தச் சொல்லுதல், ஆண்டுக்கொரு முறை பத்து நிமிடம் விளக்கை அணைக்கச் சொல்லுதல், மிதிவண்டியை மட்டும் ஓட்டச் சொல்லுதல், விதைப்பந்து வீசுதல், மரக்கன்று நடுதல், குப்பைகளைப் பொறுக்குதல் போன்ற பல சுற்றுச்சூழல் சேவைகள் இவர்களுக்குக் கற்றுத்தரப்படும். தொடக்கத்தில் நானும் இவை அனைத்தையும் செய்துள்ளேன். பிறகுதான் சிந்திக்கத் தொடங்கினேன்.
போதும் இந்த ஃபேஷன்: குழாயில் சொட்டும் நீரை நம்மிடம் நிறுத்த சொன்னவர்கள், ஏன் பன்னாட்டுக் குளிர்பான நிறுவன ஆலைகளின் குழாய் நீரை நிறுத்த சொல்வதில்லை? அங்கு இதைவிட அதிக நீரைச் சேமிக்கலாமே? பத்து நிமிடம் வீட்டு மின்சாரத்தை நிறுத்தும் நேரத்தில் ஏன் எந்தத் தொழிற்சாலைகளின் மின்சாரமும் நிறுத்தப்படுவதில்லை? என்னை மிதிவண்டியை ஓட்டச் சொன்னவர் அந்த மிதிவண்டியின் முதலாளியை ஏன் அதில் பயணம் செய்யச் சொல்வதில்லை? விதைப் பந்து வீசும் அதே நிமிடத்தில், மரக்கன்று நடும் அதே நிமிடத்தில், நிமிடத்துக்கு 24 கால்பந்துத் திடல்கள் அளவுக்குக் காடுகளை அழித்துக்கொண்டிருக்கும் கார்பரேட் நிறுவனங்களின் அரசியலைக் குறித்து இவர்கள் ஏன் வாய் திறப்பதில்லை?
மாட்டார்கள். வாய் திறந்தால் நிதியுதவி நின்றுவிடுமே? நிறுவனங்களிடம் தொடர்பு இல்லாதவர்கள்கூட பொது மக்களிடம் நிதி வசூல்செய்து இதைச் சுயதொழிலாகச் செய்து வரும் அரசியல் புரிந்ததும், இத்தகைய ஃபேஷன் சுற்றுச்சூழல் மனநிலையைக் கைவிட்டேன். இதுவே சுற்றுச்சூழல் சார்ந்த புரிதலுக்கான முதல்நிலை.
- கட்டுரையாளர், சூழலியல் எழுத்தாளர்; vee.nakkeeran@gmail.com