

உணவு தானியங்கள் அனைத்தும் நேரடியாக மக்கள் வயிற்றுக்குச் செல்வதில்லை. அவற்றில் கணிசமானவை ஆலைகளுக்கும் பண்ணைகளுக்கும் செல்கின்றன. அவை உணவுப் பற்றாக்குறையை உருவாக்குவதோடு கரிம உமிழ்வையும் ஏற்படுத்துகின்றன. 2020 ஜூலையில் வெளியான ஓர் அறிக்கையின்படி (EAT- Lancet Commission) உலக நாடுகளில் 10% நாடுகளைக் கொண்டிருக்கும் ஜி20 நாடுகள், உலக மக்கள்தொகையில் 64%ஐ பெற்றுள்ளன. ஆனால், 75% உலகளாவிய உணவு உமிழ்வுக்கு அவை காரணமாகின்றன.
அதனால்தான், “தற்போதைய உணவு உற்பத்தியைக் கொண்டு 2050இல் நாம் எதிர்பார்க்கிற மக்கள் தொகையான 1,000 கோடி மக்களுக்கும் உணவளிக்கலாம். ஆனால், உணவு தானியங்களின் ஆலைப் பயன்பாட்டு முறை ஏறக்குறைய 100 கோடி மக்களின் பசியைப் போக்காமல் உயிரி எரிபொருளாகவும் பண்ணை விலங்குகளின் கால்நடைத் தீவனங்களாகவும் மாறிக் கொண்டிருக்கின்றன” என்கிறார் ஃபிரெட் மேக்டஃப்.
யார் சுரண்டுவது? - இது செயற்கையான உணவுப் பற்றாக்குறை. பயன்பாட்டு முறையும், பங்கீட்டில் சமச்சீரின்மையுமே தற்போதைய சிக்கல். ஏழைகளின் பெருக்கமே காரணம் என்பது அபத்தம். எந்த மக்கள்தொகையின் பெருக்கம் ஆபத்து என்பதை மேக்டஃப் விவரிக்கிறார்:
“இயற்கை வளத்தைப் பாதுகாக்க மக்கள்தொகை யைக் குறைக்க வேண்டுமெனில், ஏழைகளின் மக்கள்தொகையை நாம் குறைக்க வேண்டியதில்லை. மாறாக, பணக்காரர்களின் மக்கள்தொகையையே குறைக்க வேண்டும். உலகின் முதல் 10% பணக்காரர் களுக்கு ’குழந்தையே வேண்டாம்’ அல்லது ‘ஒரு குழந்தை மட்டும்’ என்கிற கொள்கையை நடைமுறைப்படுத்த வேண்டும். பணக்காரர்களிடம் வாரிசு சொத்து வைத்திருப்பதற்கான வரி 100% வசூலிக்க வேண்டும். இதன் வழி அனைத்து வளங்களின் பயன்பாட்டையும் மாசுபாட்டையும் தோராயமாகப் பாதியாகக் குறைக்கலாம்.”
பத்தாண்டுகளுக்கு முன்பு வெளிவந்த தகவலின்படி ஓர் அமெரிக்கரின் பண்ணை நுகர்வு 12 கிலோவாக இருந்தது. காடுபடுப்பொருட்கள் 9 கிலோவாகவும், புதைப்படிவ எரிபொருட்களின் நுகர்வு 18 கிலோவாகவும் இருக்கப் பிற கனிமங்களின் நுகர்வோ 13 கிலோவாக இருந்தது. ஒட்டுமொத்தமாகப் பார்த்தால் ஓர் அமெரிக்கர் ஏறக்குறைய தன் உடல் எடைக்குச் சமமாக இயற்கை வளங்களை நுகர்ந்துகொண்டிருந்தார். தற்போதைய நிலைமை இன்னும் அதிகமிருக்கலாம். இயற்கைவளம் யாருக்குச் செல்கிறது என்பது தெரிகிறதா?
நுகர்வும் சூறையும்: இயற்கைவள நுகர்வானது, மக்கள் பெருக்கத்தைவிட அதிகமாக உயர்கிறது. எடுத்துக்காட்டாக, புவியில் 1970 களில் அகழ்ந்தெடுக்கப்பட்ட பொருட்களின் மொத்த எடை 2,200 கோடி டன். 2010 வரை இது 7,000 கோடி டன்னாக உயர்ந்தது. இது மூன்று மடங்கு அதிகம். ஆனால், உலக மக்கள்தொகையோ 1970இல் ஏறக்குறைய 370 கோடி என்றால், 2010இல் 680 கோடியாக இருந்தது. அதாவது இரண்டு மடங்குக்கும் சற்றுக் குறைவாகவே உயர்ந்தது. எனில் அந்த இயற்கை வளங்கள் எங்கே சென்றன?
நுகர்வு என்பது ஏழை நாடுகளுக்குச் சொந்தமான இயற்கை வளத்தைப் பணக்கார நாடுகள் சுரண்டி வாழ்வதே. இது நுகர்வல்ல, திருட்டு. அதனால்தான், கியூப அதிபராக இருந்த ஃபிடல் காஸ்ட்ரோ சுற்றுச்சூழலின் முதன்மை எதிரிகள் என்று இரண்டு காரணங்களைக் குறிப்பிட்டார். ஒன்று, அளவற்ற நுகர்வு வாழ்க்கை முறை. இரண்டு, இயற்கை வளத்தை வரம்பின்றி சூறையாடல்.
உலகம் அமெரிக்காவானால்? - 2003ஆம் ஆண்டின் கணக்கின்படி அமெரிக்காவில் ஓட்டுநர் உரிமம் பெற்றிருந்தவர்களைவிடச் சொந்த கார் வைத்திருப்பவர்களின் எண்ணிக்கை அதிகம் என்கிறார் ஆனி லியோனார்டு. அவர்கள் கார் வைத்திருந்த அளவுக்கு உலகின் 780 கோடி மக்களும் கார் வைத்திருக்க விரும்பினால் என்னவாகும்? பெட்ரோல், டீசலுக்கு எங்கே போவது? உலோகங்களுக்கு எங்கே போவது? அதற்கான இயற்கை வளம் புவியில் இருக்கிறதா என்று ராமச்சந்திர குஹா எழுப்பும் கேள்வி நியாயமானதே.
ஒவ்வொரு மனிதரும் 2.3 டன் கார்பனை வெளியிட உரிமை உண்டு. ஆனால், ஓர் அமெரிக்கர் 20 டன்னும், ஜெர்மானியர் 12 டன்னும், ஜப்பானியர் 9 டன்னும் வெளியிடுகின்றனர். இதில் பழங்குடியினரின் பங்கு ஏறக்குறைய பூஜ்யம். பசுங்குடில் விளைவுக்கு 70 இந்தோனேசியக் குழந்தைகள் தரும் பங்கை ஒரே ஒரு அமெரிக்கக் குழந்தை தந்துவிடுகிறது. சுற்றுச்சூழல் மாசுபாடு கண்ணோட்டத்திலும் அமெரிக்காவில் பிறந்த ஒரு நாய்க்குட்டி அல்லது ஒரு கார், 12 வங்கதேசக் குழந்தைகளுக்குச் சமம் என்கிறார் குஹா.
ஆக, சுற்றுச்சூழல் மாசுபாட்டுக்கு மக்கள்தொகையே காரணம் என்பதன் பின்னுள்ள அரசியல் இதுதான். அறிஞர் பேரி காமனர் கூறியதை மக்கள் மொழியில் இவ்வாறு விளக்கலாம்: “சுற்றுச்சூழல் மாசு (ஏழைகளின்) பெட்ரூமில் இருந்து உருவாவதில்லை. அது கார்ப்பரேட் நிறுவனங்களின் போர்டு ரூம்களிலிருந்தே உருவாக்கப்படுகிறது.”
- நக்கீரன் கட்டுரையாளர், சூழலியல் எழுத்தாளர்; vee.nakkeeran@gmail.com