

நம் குடும்பத்தில் ஐவர் உள்ளதாக வைத்துக் கொள்வோம். அவர்களில் ஒருவரை நாம் எப்போதும் பட்டினியாக வைத்திருப் போமா? கேட்டால் இல்லை என்போம். ஆனால், வைத்திருக்கிறோம் என்பதே உண்மை. உணவின் சமமற்ற நுகர்வின் காரணமாக, உலகில் ஐவரில் ஒருவர் பட்டினியால் வாடிக்கொண்டிருக்கிறார்.
இதற்கு முதன்மையான காரணம் நுகர்வு வெறியைத் தூண்டும் முதலீட்டியத்தின் லாப வெறியே என்பது மறைக்கப்படுகிறது. வறுமைக்கும் சுற்றுச்சூழல் மாசுபாட்டுக்கும் இதுவே காரணம் என்பதும் மறைக்கப்பட்டு, அதற்குப் பதிலாக மக்கள்தொகை பெருக்கம் மட்டுமே காரணம் என்பதுபோல் தொடர்ந்து முன்வைக்கப்படுகிறது.
மதிப்புக்குரிய ஜேம்ஸ் லவ்லாக்கும், ‘உலகில் ஒரே ஒரு மாசுபாடுதான் உள்ளது. மக்கள்தான் அது’ என்று குறிப்பிட்டிருப்பது வருத்தத்துக்குரியதே. அதிரடியாகப் பெருகும் மக்கள்தொகை ஓர் அபாயம் என்பதில் மாற்றுக் கருத்தில்லை. ஆனால், எந்த மக்கள்தொகை என்பதே கேள்வி.
மால்தஸ் கொள்கையே இக்கருத்துக்கு வித்திட்டது. உலகின் உணவு உற்பத்தி என்பது கூட்டல் விகிதத்திலும், அதேவேளை மக்கள்தொகை என்பது பெருக்கல் விகிதத்திலும் உயர்ந்துவருகிறது என்று முன்வைத்தவர் அவர். பிறகு, பால் எர்லிஷ் எழுதிய ‘மக்கள்தொகை வெடிகுண்டு’ (Population Bomb) என்னும் நூல் அக்கருத்தை மேலும் பரவலாக்கியது. கேரட் ஹார்டின் என்பவரும் இதே கருத்தைப் பிரதிபலித்தார். ஆனால், அந்த மக்கள் ஏழைகள் என்று கூறியதில்தான் அரசியல் தொடங்கியது.
அதற்குத் தீர்வாகப் பொருளாதார அறிஞரான ஜெப்ரி சாக்ஸ் போன்றவர்கள் ஏழை நாடுகளில் குடும்பக் கட்டுப்பாட்டை நடைமுறைப்படுத்த வேண்டும் என்றனர். குழந்தைப் பிறப்பைக் கட்டுப் படுத்தும் நாடுகளுக்குக் கடன் வழங்குவதில் உலக வங்கி முன்னுரிமை வழங்கியது. ஏழைகளும் ஏழை நாடுகளும் இப்படிக் குறிவைக்கப்படுவதற்கு உளவியல் காரணங்களும் இருந்தன.
பொருந்தாத வாதங்கள்: டார்வினின் பரிணாமவியல் கொள்கை இதற்குத் தோதாக ஏற்கெனவே திரிக்கப்பட்டி ருந்தது. ‘தகுதியுள்ளது பிழைக்கும்’ என்ற சொற்றொடரை டார்வின் தனது நூல்களில் எங்கும் பயன்படுத்தவில்லை. ஹெர்பர்ட் ஸ்பென்சர் என்பவரால் அறிமுகப்படுத்தப்பட்ட அது, டார்வின் சொன்னது போலவே திரிக்கப்பட்டு, ‘சோசியல் டார்வினிசம்’ என்கிற கருத்தியலாக மாறியது. அதன்படி பணக்காரர்களே உலகில் வாழத் தகுதி யுள்ளவர்கள் என்றும், அவர்களே இவ்வுலகில் பிழைத்து நிற்பர் என்பதாகவும் உருப்பெற்றது.
இது மறைமுகமாக, ‘ஏழைகள் வாழத் தகுதியற்றவர்கள்’ என்கிற வெறுப்பு மனநிலையை மேற்குலகில் உருவாக்கியது. இதனால், ஹென்றி மேஹ்யூ என்பவர் லண்டன் வாழ் ஏழைகளை ஓர் அந்நிய இனமாகவே கருதி புத்தகம் எழுதினார். ஏழைகளின் மூளை 25% குறைவாகச் சிந்திப்பதாக உலக வங்கியின் தலைவராக இருந்த ராபர்ட் மெக்னமாரா குறிப்பிட்டார். இவை எதுவும் அறிவியலுக்குப் பொருந்தாதவை.
பொய்த்துப்போன வாதம்: உலகில் ஏழைகளின் எண்ணிக்கை பெருகியதால்தான் உணவு நெருக்கடி உருவானது என்பது ஒரு கருத்தியல் பிழையே. ஏனெனில், “இப்புவியில் ஒவ்வொருவருக்கும் தேவைப்படும் உணவைவிட 1.5 மடங்கு உண வினை இவ்வுலகம் ஏற்கெனவே உற்பத்தி செய்து வருகிறது” என்கிறார் அமெரிக்காவின் வேளாண், உணவியல் அறிஞர் ஃபிரெட் மேக்டாஃப்.
‘குளோபல் சஸ்டைனபிலிட்டி’ (Global sustainability- 2019 April) என்கிற இதழில் வெளியான அறிக்கை ஒன்று மால்தசின் கருத்துத் தவறு என்று கூறுவதாக ‘டவுன் டு எர்த்’ இதழ் தெரிவிக்கிறது. அதன்படி, 1960லிருந்து 2010ஆம் ஆண்டு வரை உலக மக்கள்தொகை 142% பெருகியுள்ளது. அதே காலகட்டத்தில் உணவுத் தானிய விளைச்சல் 193% பெருகியுள்ளது. கலோரி உற்பத்தியின்படி பார்த்தாலும் அது 217% ஆகப் பெருகியிருந்தது. இத்தனைக்குப் பிறகும், ஓர் அமெரிக்கரின் உணவும் ஒரு வங்கதேசத்தவரின் உணவும் சமமாக இருக்கின்றனவா?
2011ஆம் ஆண்டில் வெளியான உணவு வேளாண் கழக (FAO) ஆய்வின்படி மனித நுகர்வுக் கென உருவாக்கப்படும் உணவில் மூன்றிலொரு பங்கு பசித்த வயிற்றுக்குச் செல்வதில்லை என்று கண்டறியப்பட்டது. காரணம், வீணடிக்கப்படும் உணவின் அளவே. வீணாகும் உணவு மட்டும் ஒரு நாடாகக் கருதப்பட்டிருந்தால் அது கார்பன் வெளியீட்டில் உலகின் மூன்றாவது பெரிய நாடாக விளங்கும். 2012ஆம் ஆண்டுக் கணக்கின்படி வீணடிக்கப்பட்ட உணவின் சந்தை மதிப்பு 93 கோடி அமெரிக்க டாலராக இருந்தது. இது ஓர் ஏழை நாடான இந்தோனேசியாவின் ஜிடிபிக்குச் சமம்.
உணவுப் பற்றாக்குறைக்கு மற்றொரு காரண மும் உண்டு. அதற்கும் ஏழைகள் பொறுப்பல்ல. இது குறித்து அடுத்த வாரம் விரிவாகப் பார்ப்போம்.
நக்கீரன் கட்டுரையாளர், சூழலியல் எழுத்தாளர்; vee.nakkeeran@gmail.com