

ஒரு மலைப்பகுதிக்குச் செல்கையில் நம் கண்களுக்கு என்னென்ன தெரியும்? மலை தெரியும். அதன் மீதுள்ள காடுகள் தெரியும். காட்டுக்குள் வசிக்கும் உயிரினங்கள் தெரியும். பிறகு, பழங்குடிகளும் தெரிவர். ஆனால், கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு இவை எதுவுமே தெரியாது. அம்மலைக்குள் புதைந்துள்ள கனிமவளம் மட்டுமே தெரியும். அது மற்றவற்றை எல்லாம் கண்களிலிருந்து மறைத்துவிடும்.
ஒரு மலையில் பாக்சைட் இருக்கிறது என்றால், அதையெடுக்க மலையை உடைக்க வேண்டும். அதற்குமுன் அங்குள்ள காடுகளை அழிக்க வேண்டும். காடுகளை அழிக்கையில் விலங்குகளையும் பழங்குடிகளையும் விரட்டியாக வேண்டும். அனைத்தையும் முடித்தே பாக்சைட் தாதுவிலிருந்து அலுமினியத்தைப் பிரித்தெடுப்பர்.
அப்படி எடுக்கையில் பாக்சைட்டிலுள்ள அலுமினிய ஆக்சைடு ஒருபுறமாகப் பிரிய, மறுபுறம் சிவப்பு மண் கழிவாகக் குவிந்து நிலத்தை மாசுபடுத்தும். அலுமினிய ஆக்சைடில் இருந்து அலுமினியத்தைப் பிரித்தெடுக்கப் பயன்படுத்தப்படும் perfluro carbon (PFC) வளிமண்டலத்தை மாசுபடுத்தும் ஒரு பசுங்குடில் வாயு. கடைசியில், அலுமினியம் கிடைத்ததும் அதை வைத்து ஆகாய விமானங்களோ, பண்ட பாத்திரங்களோ செய்தால்கூட பரவாயில்லை. அதைத் தகடாக்கி குளிர்பான கேன்களையும், உணவைச் சிப்பமிட உதவும் அலுமினியத் தாள்களையும் செய்கிறோம். நாமோ கேன் களுக்குள் இருக்கும் குப்பையைக் குடித்துவிட்டு, மதிப்புமிக்க அலுமினியத்தைக் குப்பையில் எறிகிறோம். பொட்டலமாக வரும் அலுமினியத் தாள்களையும் குப்பையாக வீசுகிறோம்.
யார் குற்றவாளி? - “புவியின் வளங்கள் வரையறைக்கு உட்பட்டவை; அவற்றை வரைமுறையின்றி நுகர்வது நம் இருப்பைத் தகர்க்கவல்லது” என 2017 நவம்பரில் 184 நாடுகளைச் சேர்ந்த இருபதாயிரம் அறிவியலாளர்கள் எச்சரிக்கை விடுத்தனர். ஆனால், முதலீட்டியத்தின் காதுகளுக்கு அதெல்லாம் கேட்பதேயில்லை.
கடைசியில், மலைகள் இருக்காது. காடுகள் இருக்காது. விலங்குகள் இருக்காது. பழங்குடிகளும் இருக்க மாட்டார்கள். மலையை உடைத்து எடுக்கப்பட்ட அலுமினியம் மட்டும் குப்பையாகக் கிடக்கும். அந்த அலுமினியத்தை எடுக்க மலைகளிலிருந்து விரட்டப்பட்ட பழங்குடிகளும் தெருவில் குப்பையாகக் கிடப்பர். ஆனால், பணம் சம்பாதித்தவர் மட்டும் எங்கோ வளமாக வாழ்வார்.
அவர் யார்? இயற்கையை அழிப்பது மனிதரே என்று இங்குப் பொதுப்படையாகக் கற்பிதம் பரவலாக்கப்படுகிறது. உண்மையில் இயற்கையை அழிப்பது கனிம வளத்தைச் சுரண்டிய மனிதரா? அல்லது விரட்டியடிக்கப்பட்ட பழங்குடி மனிதரா?
புவியின் எல்லைகள்: இந்த இடத்தில் நாம் ‘புவிக்கோள் எல்லைகள்’ என்கிற கருத்தியலைக் கற்க வேண்டும். கடந்த 12,000 ஆண்டுக் கால ஹோலோசீன் காலகட்டத்தில் இந்த எல்லைகளுக்கு உட்பட்டு வாழ்ந்ததாலேயே, சுற்றுச்சூழலை நம்மால் பாதுகாக்க முடிந்தது. சரி புவிக்கோளின் எல்லைகளைக் காண்போம்:
1) காலநிலை மாற்றம். 2) கடல் அமிலமாதல் 3) ஓசோன் மெலிவு 4) உயிர்–புவி வேதி ஒழுங்கு எல்லை (நைட்ரஜன், பாஸ்பரஸ் சங்கிலி) 5) உலக நன்னீர்ப் பயன்பாடு 6) நிலப் பயன்பாட்டு மாற்றம் 7) பல்லுயிர் இழப்பு 8) வளிமண்டல தூசி அதிகரிப்பு 9) வேதி மாசு.
இவற்றில் காலநிலை மாற்றம், உயிரினப் பன்மை, நைட்ரஜன் சங்கிலி ஆகிய மூன்றின் பாதுகாப்பு எல்லைகளை நாம் ஏற்கெனவே கடந்துவிட்டோம். கடல் அமிலமாதல், நன்னீர் பயன்பாடு, நிலப் பயன்பாட்டு மாற்றம் மற்றும் பாஸ்பரஸ் சங்கிலி ஆகியவற்றின் எல்லைகளை நெருங்கிக்கொண்டிருக்கிறோம்.
எல்லை மீறிவிட்டோம்! - கடல் அமிலத்தன்மையின் பரிந்துரை எல்லை 2.75. இந்த அளவைக் கடந்தால் சிப்பி உயிரினங்கள் அழியும். தொழிற்புரட்சிக்கு முன்பிருந்த அளவு 3.44 என்றால், தற்போதைய நிலைமை 2.90ஐ தொட்டுவிட்டது. ஓசோனின் பரிந்துரை எல்லை 276. தொழிற்புரட்சிக்கு முன்பு 290. நடப்பு நிலைமையோ 283. சூழல் சிதைவினைத் தவிர்த்துக்கொள்ள வளிமண்டல நைட்ரஜன் 35 மில்லியன் டன்னாக இருக்க வேண்டும். ஆனால், தற்போது 121 மில்லியன் டன்னாக உள்ளது.
தொழிற்புரட்சிக்கு முன்பு கடலில் ஒரு மில்லியன் டன் பாஸ்பரஸே கலந்துகொண்டி ருந்தது. நடப்பிலோ 8.5-9 மில்லியன் டன் கலக்கிறது. இதன் பரிந்துரை எல்லை 11 மில்லியன் டன். நிலப் பயன்பாட்டின் பரிந்துரை எல்லை பனி மூடப்படாத நிலத்தில் 15% ஆகும். இதுவும் தற்போது 12%ஐ தொட்டுவிட்டது.
வேதி மாசின் பரிந்துரை எல்லை இதுவரை உறுதி செய்யப்படவில்லை. அமெரிக்காவில் மட்டும் 80,000 வேதிப்பொருட்கள் பயன்பாட்டில் உள்ளன. அவற்றில், வெறும் 5 மட்டுமே தடை செய்யப்பட்டவை என்கிறது ‘சயின்டிபிக் அமெரிக்கன்’ இதழ். நினைவிருக்கட்டும், 5% அல்ல; ஐந்து என்கிற எண்ணிக்கை மட்டுமே.
இந்த இடத்தில் செஸ்ட் பீட்டி இன்ஸ்டிடியூட்டின் பேராசிரியர் பால்ட் கூறியதே நினைவுக்கு வருகிறது: “புற்றுநோய் காரணியான கார்சினோஜெனுக்கு மிகக் குறைந்த அளவு என்று ஏதுமில்லை. அப்படியே இருந்தாலும், அது எவ்வளவு என்று நமக்குத் தெரியாது.”
- நக்கீரன் கட்டுரையாளர், சூழலியல் எழுத்தாளர்; vee.nakkeeran@gmail.com