

‘வட அரைக்கோளத்தில் மொத்தம் நான்கு பருவ காலங்கள் நிலவுகின்றன. வசந்த காலம், குளிர் காலம், கோடைக் காலம், இலையுதிர் காலம் ஆகியவையே அவை. இவற்றைத் தவிர ஐந்தாவதாகப் புதிதாக உருவாக்கப்பட்ட ஒரு காலம் இருக்கிறது. அது என்ன காலம் தெரியுமா? ‘கஷ்டகாலம்’.
ஒருவகையில் இந்தப் பதிலும் சரியே. பருவ காலங்கள் ஒவ்வொன்றுக்கும் தனித்தனியே பருவ கால உடைகளைப் பன்னாட்டு ஆடை நிறுவனங்கள் உருவாக்கி விற்பனை செய்கின்றன. இவை போதாது என மக்களின் நுகர்வை அதிகரிப்பதற்காகச் செயற்கையாக உருவாக்கப்பட்ட ஐந்தாவது காலமே ‘விடுமுறைக் காலம்’.
தற்காலத்தில் இது மேலும் விரிவாகி சில சில்லறை வணிகர்கள் ஏறத்தாழ 26 நாகரிகப் பருவ காலங்களைக் கண்டறிந்துள்ளதாக எழுதுகிறார் ‘பொருட்களின் கதை’ நூலாசிரியர் ஆனி லியோனார்ட். இதன் பொருள் ஒவ்வொரு பருவ காலமும் இரண்டு வாரங்களை மட்டுமே கொண்டதாகும். பொதுவாக, கடந்த குளிர் காலத்துக்கு வாங்கிய ஸ்வெட்டரை அடுத்த ஆண்டும் மக்கள் பயன்படுத்துவர். ஆனால், நிறுவனங்களோ உற்பத்தியைக் குவித்துவிட்டு, அவற்றை நுகரும்படி எல்லா வழிகளிலும் மக்களின் உணர்வுகளைத் தூண்டுகின்றன.
அதேவேளை, நுகர்வு என்பது அனைத்து மக்களுக்கும் சமமாக அமைவதில்லை. 26 காலங்களுக்கும் 26 உடைகளை உடுத்துபவர்கள் வாழும் அதே உலகில்தான், கிழிந்த ஆடைகளை அணிந்து திரிபவர்களையும் காணமுடிகிறது. பசியில் அடுத்த வேளை உணவுக்கு அலைபவர்களும் இங்கேதான் வாழ்கின்றனர். நுகர்வென்பது உண்மையில் முதலீட்டியத்தின் பணப் பசி. அதிலும் பணக்கார நாடுகளின் பெரும் பசி. அப்பசியினால் கடிபட்ட புவிக்கோளம் இன்று காயப்பட்டுக் கிடக்கிறது.
அநியாய அத்துமீறல்
உலக மக்கள்தொகையில் வெறும் 25% மட்டுமே கொண்ட வட அரைக்கோளத்தின் பணக்கார நாடுகளே உலகின் 75% வளங்களை நுகர்கின்றன. உண்மையில் இது நுகர்வல்ல, திருட்டு. எல்லைத் தாண்டும் திருட்டு. எடுத்துக்காட்டாக, அமெரிக்காவையே எடுத்துக்கொள்வோம். உலகின் பல்வேறு பகுதிகளிலும் அமைந்துள்ள மூலப்பொருட்களில் 30% அந்நாட்டவர்களால் மட்டுமே விழுங்கப்படுகிறது. ஆனால், உலக மக்கள்தொகையில் அந்நாட்டினர் வெறும் 5% மட்டுமே என்று சுட்டிக்காட்டுகிறார் ஆனி லியோனார்ட்.
அவர்கள் ஒவ்வொருவரும் 1.4 கோள் அளவுக்கு மூலப்பொருட்களை நுகர்கின்றனர். தேவையைவிட 0.4 விழுக்காடு அதிகமாக நுகர்கிறார்கள். உலகில் உள்ள அனைவரும் இதே அளவுக்கு நுகர ஆசைப்பட்டால் நமக்கு மொத்தம் ஐந்து புவிக்கோள்கள் தேவைப்படும் என்கிறார் அவர்.
ஒரு புவி போதுமா?
அமெரிக்காவைச் சேர்ந்த மார்க்சிய சூழலியல் அறிஞர் பாரி காமனர் கூறுவார்: “தற்போதைய உற்பத்தி முறையானது தன்னைத் தானே அழித்துக்கொள்ளும் வகையில் உள்ளது. தற்கால மனித நாகரிகமும் தற்கொலையை ஒத்துள்ளது” என்று.
எதற்குமே ஓர் எல்லை உண்டு. அதுபோல புவியின் தாங்கு திறனுக்கும் ஓர் எல்லை உண்டு. அதை, ‘புவியின் திறனை எல்லைமீறும் நாள்’ (Earth overshoot day) என்று குறிப்பர். இது இயற்கைவள நுகர்வை அடிப்படையாகக் கொண்டு கணக்கிடப்படுகிறது.
இயல்பாகவே புவிக்கோளமானது இழந்த தன் வளத்தை மீட்டுருவாக்கம் செய்துகொள்ளவும், நுகர்வு உருவாக்கிய மாசினை உள்வாங்கிக்கொள்ளவும் முயலும். அதற்கு புதுக் கோளத்துக்கு ஓராண்டு, அதாவது 365 நாட்கள் தேவைப்படுகிறது. அதன்படி புவியின் திறனை மீறும் நாள் என்பது ஒவ்வொரு அடுத்த ஆண்டின் ஜனவரி ஒன்றாம் தேதியாக அமைய வேண்டும். ஆனால், 2006ஆம் ஆண்டில் முதல் கணக்கீடு தொடங்கியபோது, புவியின் திறனை மீறும் நாளாக ஆகஸ்ட் 21 குறிக்கப்பட்டது.
அதாவது, அந்த ஆண்டின் ஆகஸ்ட் 21ஆம் தேதிக்குள்ளேயே, அதற்கடுத்து வரும் ஆகஸ்ட் 22 - டிசம்பர் 31 வரையிலான நாட்களின் வளங்களையும் நாம் சேர்த்து நுகர்ந்துவிட்டோம் என்பது அதன் பொருள். தற்போது அது ஒவ்வோர் ஆண்டும் மேலும் முன்கூட்டியே வந்துவிடுகிறது. 2021இல் ஜூலை 30ஆம் தேதியாக இருந்த அது, 2022இல் ஜூலை 28 ஆகக் குறைந்தது. 2020இல் கோவிட் தொற்று ஏற்பட்டதால் அந்த ஓர் ஆண்டில் மட்டும் நுகர்வு குறைந்து அது ஆகஸ்ட் 22 ஆக மாறியது. அதற்கு முந்தைய 2019ஆம் ஆண்டில் அது ஜூலை 29 ஆக இருந்தது குறிப்பிடத்தக்கது.
நாம் வருங்காலத் தலைமுறைகளுக்குரிய வளங்களையும் சுரண்டியே வாழ்கிறோம் என்பது இதிலிருந்து தெளிவாகிறது. 1970களில் ஒட்டுமொத்த நுகர்வை ஈடுசெய்ய முழு ஆண்டு போதுமானதாக இருந்தது. தற்போதோ ஓராண்டு ஐந்து மாதம் தேவைப்படுகிறது. இது புவிக்கோளம் தன் தாங்கு திறனைத் தாண்டி வெகுதொலைவுக்கு வந்துவிட்டதையே உணர்த்துகிறது.
- நக்கீரன் கட்டுரையாளர், சூழலியல் எழுத்தாளர்; vee.nakkeeran@gmail.com