

பேருயிர்கள், அரிய பறவைகளைப் பார்க்க முடியவில்லை என்றாலும்கூட, சில பயணங்கள் நினைவில் தங்கி நிற்கின்றன. அப்படியானதுதான் களக்காடு முண்டந்துறை (2010) பயணம். கணுக்காலிகளான மரவட்டைகளின் செயல்பாடுகளே, இப்பதிவை முக்கியமாக்கின. களக்காட்டின் சில பகுதிகளில் காலை முதல் நண்பர்களுடன் சுற்றி அலைந்துவிட்டு கடைசியாக நீர்நிலை ஒன்றுக்குப் போனோம். அன்று மாலையாகிவிட்டதால் மறுநாள் காலை நீர்நிலை இருந்த பகுதிக்கு மீண்டும் செல்ல முடிவெடுத்தோம். காலையில் அப்பகுதியை நோக்கி மெல்ல நடை போட்டபோது வண்ணத்துப்பூச்சியின் அழகிய புழுப் பருவம், கொண்டைக்குருவிகளை ஒளிப்படம் எடுக்க முடிந்தது.
அப்போது மழை பெய்திருந்த ஈரத் தரையில், இணை சேர்ந்த நிலையிலும் கழிவுகளைச் சாப்பிட்டபடியும் அங்கொன்று, இங்கொன்று என எங்களைச் சுற்றி நிறைய மரவட்டைகள் ஊர்ந்து கொண்டிருந்தன. ஆண், தனது கால்களின் வழியே பெண்ணுக்கு விந்துகளை அனுப்புகிறது. தாவர உண்ணிகளான மரவட்டைகள் மக்கும் இலைகள், தாவரக் கழிவை உணவாகக் கொள்கின்றன.
அந்தக் காட்சிகளைப் பதிவு செய்ய ஆரம்பித்தேன். மரவட்டைகளின் உலகுக்குள் எட்டி பார்த்த இந்தப் பயணத்தை என்றென்றும் மறக்க முடியாது.
எத்தனை கால்கள்?
கணுக்காலிகள் வகையைச் சேர்ந்த மரவட்டைகளின் உடல் இருபது கண்டங்களாகப் பிரிந்தும், நூற்றுக்கணக்கான இணைக் கால்கள் சேர்ந்தும் காணப்படுகிறது. இதன் ஆங்கிலப் பெயரான Millipede என்பது 'ஆயிரம் காலிகள்' (milli - thousands, ped - foot) ஆகிய லத்தீன் சொற்களில் இருந்து உருவானது. இதன் அறிவியல் பெயரான Diplopoda என்பது 'இரண்டு இணைக் கால்கள்' என்ற கிரேக்கச் சொல்லில் இருந்து உருவானதாகக் கருதப்படுகிறது.
மிகப் பழமையான சிலுரியன் காலத்தில் (44 கோடி - 41 கோடி ஆண்டுகள்) தோன்றிய உயிரினமான மரவட்டைகள் பதினாறு பிரிவுகள், 140 குடும்பங்கள் எனச் சுமார் 12,000 வகைகளில் காணப்படுகின்றன. புலி, சிறுத்தை, யானை போன்ற பெரிய பாலூட்டிகளைப் போலவே, சிற்றுயிர்களான மரவட்டைகளின் வாழ்க்கையும் சுவாரசியம் நிரம்பியதாக இருக்கிறது.
- கட்டுரையாளர், காட்டுயிர் ஒளிப்படக் கலைஞர்
தொடர்புக்கு: shanmugam.wildlife@gmail.com