

இயற்கை வளங்களைத் தேடி உலகமெங்கும் ஐரோப்பியர்கள் அலைந்து திரிந்த காலம். வட அமெரிக்கக் கண்டத்தில் ஏராளமான எண்ணிக்கையில் திரிந்துகொண்டிருந்த காட்டு எருமைகளைக் கண்டு அவர்கள் வியந்தனர்.
குறிப்பாக, மென்மயிர் வணிகர்களுக்கு நாவில் எச்சில் ஊறியது. காட்டெருமைகளைக் கொன்று தோலுரித்து மென் மயிர்களை ஐரோப்பியச் சந்தையில் விற்றால் பெரும் லாபம் ஈட்டலாம் என்று கணக்கிட்டனர். அவற்றை, அமெரிக்காவில் வசித்த செவ்விந்தியத் தொல்குடிகளைக் கொண்டு வேட்டையாடத் திட்டமிட்டனர்.
செவ்விந்தியர்களும் அதற்கு ஒப்புக்கொண்டனர். அவர்களுக்கு ஐரோப்பியர்கள் பயன்படுத்திய கத்திகள், சமையல் பாத்திரங்கள் உள்ளிட்ட வீட்டுப் பயன்பாட்டுப் பொருட்களின்மீது ஓர் ஆசை இருந்தது. அவற்றை அதற்கு முன்பு அவர்கள் பார்த்ததில்லை. ஆகையால், பண்டமாற்றுக்கு ஈடாக வேட்டையாடித் தர ஒப்புக்கொண்டனர். ஐரோப்பிய வணிகர்களுக்கும் மகிழ்ச்சி. ஆனால், அது வெகு நாட்கள் நீடிக்கவில்லை.
தங்களுக்குத் தேவையான அளவுக்குப் பொருட்கள் கிடைத்ததும் செவ்விந்தியர்கள் வேட்டையை நிறுத்தி விட்டனர். அதனால், மென்மயிர் வணிகர்கள் செவ்விந்தியர் கள்மீது சினம் கொண்டனர். இறுதியில் அவர்களே களத்தில் இறங்க அவர்களது வேட்டைத் துப்பாக்கி காட்டெருமை இனத்தையே ஏறக்குறைய அழித்தொழித்தது வரலாறு.
பண்பாடா, முதலீட்டியமா? - ஏறத்தாழ 11,000 ஆண்டுகளுக்கு முன்பு மனித இனம் வேட்டைச் சமூகமாகவே இருந்தது. பின்னர், அது காட்டுத் தாவரங்களை விளைபயிராக்கி வேளாண் சமூகமாகவும், காட்டு விலங்குகளை வீட்டு விலங்குகளாகப் பழக்கி மேய்ச்சல் சமூகமாகவும் மாறியது. தொடர்ச்சியான உணவு உற்பத்தியில் உபரி ஏற்பட, வணிகச் சமூகமாக மாற முதலீடு பெருகியது.
பொ.ஆ. (கி.பி.) 1800களில் ஏற்பட்ட தொழிற்புரட்சிக்குப் பிறகு ஆலை முதலீட்டியம் வந்தது. அது உலகெங்கும் ஐரோப்பியர் பரவலின் வழி காலனித்துவத்துக்கு வழிவகுத்தது. பின்னர் 1950களில் அது வணிக முதலீட்டியமாக (mercantile capitalism) வேக மெடுத்தது. இன்று உலகமயமாக்கலுக்குப் பிறகு அது நுகர்வு முதலீட்டியமாகக் (Consumer Capitalism) ‘தெறி’ வேகத்தில் பறக்கிறது.
நுகர்வு முதலீட்டியமே இன்றைய விரைவான இயற்கை சீரழிவுக்குக் காரணம். ஆனால், இந்த உண்மையை மறைக்க அது ‘நுகர்வு பண்பாடு’ என்று மாற்றுப் பெயரில் திரித்து வழங்கப்படுகிறது. இந்தச் சொல்லாக்கம் கவனத்துக்குரியது. ‘நுகர்வு முதலீட்டியம்’ என்றால் அது முதலாளிகளால் திட்டமிட்டு உருவாக்கித் திணிக்கப்படுவதாகும்.
அதேவேளை, ‘நுகர்வு பண்பாடு’ என்றால் அது மக்களே விரும்பி ஏற்றுச் செயல்படுத்துவது என்று பொருள். ஆக, மக்கள் விரும்புவதால்தான் நாங்கள் உற்பத்தி செய்கிறோம் என்று முதலீட்டியம் தப்பித்துக்கொள்ளவே, நுகர்வு பண்பாடு என்கிற சொல் அவர்களுக்குக் கவசமாக விளங்குகிறது.
உண்மையில் மக்கள் நுகர்வை விரும்பி ஏற்கிறார்களா? நிச்சயமாகக் கிடையாது. அவ்வாறு விரும்பி ஏற்கும் மன நிலையை நிறுவனங்கள் நுட்பமான முறையில் திட்டமிட்டுக் கட்டமைக்கின்றன. இந்த ‘இணக்க மனநிலை’யை மக்களிடம் உருவாக்க விளம்பரங்கள் பெரிதும் உதவுகின்றன.
தூண்டில்... ஒருவர் வேலையை முடித்துக் களைப்புடன் வீடு திரும்புவார். தன் அயர்ச்சியைப் போக்கத் தொலைக்காட்சி யைத் திறப்பார். அப்போது விளம்பரம் ஒன்று தென்படும். அதுவொரு புதிய பொருளைக் காட்டி இது உன்னிடம் இருக்கிறதா என்று கேட்கும். அது இல்லாவிட்டால் அவருடைய அல்லது அவர் குடும்பத்தின் பெருமை குலைந்துவிடும் என்பது போன்ற மனநிலையை உருவாக்க முயலும்.
அம்மனிதர், அதுவரை தான் வசதியுடன் வாழ்ந்து வருவதாகத்தான் நினைத்துக்கொண்டிருப்பார். ஆனால் அப்பொருள் இல்லாவிடில் அதற்கு ஊறு ஏற்பட்டு விடும் என்ற தோற்றத்தை அந்த விளம்பரம் ஏற்படுத்தவே, இணக்க மனநிலைக்கு ஆளாவார். வேறு வழியின்றி, விளம்பரச் செல்வாக்குக்கு உட்பட்டு கடனுக்கு அந்தப் பொருளை வாங்கிவிடுவார்.
அதன் பிறகு கடனை அடைக்கக் கூடுதல் உழைப்பையோ, கூடுதல் வேலையையோ செய்ய ஓடிக்கொண்டிருப்பார். பிறகு ஒருகட்டத்தில் கடனை அடைத்து முடித்துக் களைப்புடன் மீண்டும் தொலைக்காட்சியைப் பார்க்க அமர்வார். அப்போது மற்றொரு புதிய விளம்பரம்…
இதையே நுகர்வு பண்பாடு என்கின்றனர். கொஞ்சம் யோசித்துப் பார்ப்போம். இந்த விளம்பரங்கள் ஏதும் இல்லாவிடில், தேவையற்ற பொருட்களை உற்பத்தி செய்யாவிடில் அவற்றை யார் வாங்குவர்? உண்மையில், மக்களைக் குற்றம் சுமத்தும் செயலை நிறுத்த வேண்டும். ஆனால், செய்ய மாட்டார்கள்.
மக்கள் அடிப்படையில் தன்னலம் மிக்கவர்கள். போட்டி பொறாமையுடன் வாழ்பவர்கள் என்கிற தவறான கருத்துத் தொடர்ந்து திட்டமிட்டுப் பரப்பப்படுகிறது. அவர்கள் ஒருவருக்கொருவர் பொறாமைக் கொள்வதாலேயே பொருட்கள் வாங்கிக் குவிக்கப்படுகின்றன எனும் கருத்துப் பரவலாக்கப்பட்டுள்ளது. இது தவறு என்பதற்கு ஐந்தாவது பருவகாலமே சாட்சி.
அதென்ன, ஐந்தாவது பருவகாலம்?
- நக்கீரன் கட்டுரையாளர், சூழலியல் எழுத்தாளர், vee.nakkeeran@gmail.com