

காடுகள் காக்கப்பட வேண்டும் என்பது பொதுக் கருத்து. மறுபுறம் கார்ப்பரேட் நிறுவனங்கள் தம் வளர்ச்சிக்குக் காடுகளைக் காவு கேட்கின்றன. எனவே, பொருளாதார வளர்ச்சிக்கு இடையூறாகக் காடுகள் கருதப்படுகின்றன. ஆகவே, அதை ‘ஸ்பீட் பிரேக்கர்’ என்று ஒருவர் குறிப்பிட்டார். அவர் வேறு யாருமல்ல மத்திய வனத்துறை முன்னாள் அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர். மற்றொரு மத்திய அமைச்சர் நிதின் கட்கரி, “இந்தியாவானது பொருளாதாரமா அல்லது சுற்றுச்சூழலா’’ என இரண்டில் ஒன்றைத் தேர்வுசெய்ய வேண்டும் என்று வெளிப்படையாகவே பேசியுள்ளார். மற்றவர்களைப் பற்றி என்ன சொல்ல?
விளைவு, கடந்த 2015ஆம் ஆண்டிலிருந்து கோவிட் காலம் வரை மட்டுமே 409 சதுர கிலோமீட்டர் காட்டுப் பகுதி வளர்ச்சித் திட்டங்களுக்கு வழங்கப்பட்டிருக்கிறது. இது கொல்கத்தா நகரைப் போல இரண்டு மடங்கு பரப்பளவு.
ஒருபக்கம் பொருளாதார வளர்ச்சியில் பயனாகும் ஒவ்வொரு டன் நிலக்கரியும் ஒரு மனிதரின் ஓராண்டு மூச்சுக்குப் பயன்படுத்தும் ஆக்சிஜனை எரித்துக்கொண்டி ருக்கின்றன. அதைச் சமாளிக்கும் விதமாக மறுபக்கம் ஒரு ஹெக்டேரிலுள்ள மரங்கள் ஆண்டொன்றுக்கு 1.8 கோடி கன மீட்டர் காற்றைத் தூய்மையாக்கித் தருகின்றன. மேலும் 200 ஆட்கள் சேர்ந்து ஒரு மணி நேரத்தில் வெளியிடும் எட்டு கிலோ கார்பன் டைஆக்சைடை உள்ளிழுத்துக் கொண்டு காற்று நஞ்சாகாமல் நம்மைக் காக்கின்றது என்பார் பி.எஸ்.மணி. இதை அரசுக்கு யார் சொல்லிக்கொடுப்பது?
நோய்கள் இலவசம்: அரசு மட்டுமல்ல, நாமும் ஒன்றை மறந்துவிடுகிறோம். காடு என்பது மனிதருக்கு மட்டுமே உரியதல்ல. உலகின் மூன்றில் இரண்டு பங்கு நிலவாழ் உயிரினங்கள் காடுகளில்தான் வசிக்கின்றன. அவை வெறுமனே அங்கு வசிக்கவில்லை. பல நோய் பரப்பும் நுண்கிருமிகளைத் தமக்குள் தாங்கி அங்கு வசிக்கின்றன. அந்த நோய்கள் மனிதருக்கும் எளிதாகப் பரவக்கூடியவை. காடுகளை அழிப்பதன் மூலம் அவற்றை நாம் இலவசமாகப் பெற்றுக்கொள்ள வழிவகைச் செய்துகொள்கிறோம். அண்மையில் நம் வாழ்வையே சிதைத்த கோவிட் தொற்றுக் காலத்தை மறந்திருக்க மாட்டோம்.
இந்தியத் துணைக்கண்டம் ஓர் ஆற்றல்மிக்கத் தொற்றுநோய் பிறப்பிடமாக (hotspot) விளங்குகிறது. இப்பகுதி செறிவுமிக்க மக்கள்தொகையும் கால்நடைகளும் கூடிய பல்லுயிரியப் பகுதியில் அமைந்திருப்பதால் அவற்றிற்கு இடையேயான தொடர்பும் அதிகமாக உள்ளது. இது நோய்த்தொற்றுக்கான வாய்ப்பை அதிகரிக்கும்.
இந்திய எடுத்துக்காட்டு: மேற்குத் தொடர்ச்சி மலைக் காடுகளில் மேற்கொள்ளப்படும் வளர்ச்சி திட்டங்கள் குறிப்பாகத் தோட்டங்கள், குவாரிகள், ஆலைகள், சாலை அமைத்தல், அதன் விரிவாக்கம் ஆகியவை காரணமாக அதிகரிக்கும் மனித செயல்பாடு, கால்நடைகளின் செயல்பாடு நோய்ப் பரவலுக்குக் காரணமாகிறது. குறிப்பாக, KFD (Kyasanur Forest Disease) எனும் நோயைப் பற்றிப் பார்ப்போம்.
இது உண்ணியின் மூலம் பரவும் ஒரு நோய். மேற்குத் தொடர்ச்சி மலையில் வசிக்கும் குரங்குகளிடமிருந்து மனிதருக்குத் தொற்றிய நோய். இந்த நோயால் தலைவலி, காய்ச்சல், தசைவலி, ரத்தப்போக்கு போன்றவை ஏற்படும்.
இந்நோய் முதன்முதலாக 1950களில் கர்நாடகத்தின் மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் அமைந்துள்ள சிமோகா பகுதியில் பதிவுசெய்யப்பட்டது. பின்னர் இது கேரளம், தமிழ்நாடு ஆகியவற்றுக்குப் பரவிய பின்னர் குஜராத்திலும் தென்பட்டது. இந்தத் தொற்று ஆண்டுக்கு 400-500 என்ற அளவில் பரவியது. அதில் 3-5% அளவு அபாயகரமான அளவுக்குச் சென்றது என்று அமெரிக்க நோய்க் கட்டுப்பாட்டு அமைப்பு (United state center for disease control and prevention) தெரிவிக்கிறது. இது உலக அளவில் திடீர் நோய் உருவாக்கத்தைக் கண்காணிக்கும் அமைப்பு.
ஆபத்தான கடன்வாங்குதல்: காட்டு விலங்குகளை மனிதக்குலம் வீட்டு விலங்குகளாகப் பயன்படுத்தியதன் வழியாகவே நமக்குப் பறவை காய்ச்சல், நிபா உள்ளிட்ட விலங்குவழி நோய்த்தொற்றுகள் அறிமுகமாகியுள்ளன. அதுபோல மான், நெருப்புக்கோழி, புனுகுப்பூனை உள்ளிட்ட காட்டுயிர்களைப் பண்ணை விலங்காகவும், பாம்பு, வௌவால், காட்டுப் பறவைகளைப் பிடித்து இறைச்சிக் காகக் கள்ளச்சந்தையில் விற்பதன் மூலமாகவும், காட்டு விலங்குகளை வேட்டையாடுவதாலும் பல நோய்களை நாம் கடன் வாங்கியுள்ளோம்.
1960களில் இருந்து இதுவரை 30% புதிய நோய்த் தொற்றுகள் உருவாகியுள்ளன. நம்மால் இன்னும் அடையாளம் காணப்படாத 17 லட்சம் நச்சில்கள் (வைரஸ்கள்) விலங்குகளிலும் பறவைகளிலும் ஒளிந்துகொண்டுள்ளன. இவற்றில் ஏறக்குறைய பாதியளவு நோய்கள் கோவிட் தொற்றைப் போல மனிதருக்குப் பாதிப்பை உண்டாக்கக்கூடியவை என்று ‘டவுன் டு எர்த்’ இதழ் மதிப்பிடுகிறது. இந்தச் சூழலில் காட்டை அழிக்க நாம் ஏன் இன்னும் துடித்துக் கொண்டிருக்கிறோம் என்பதுதான் புரியவில்லை. (அடுத்த வாரம்: உயிர்வளி திருடர்) - நக்கீரன் கட்டுரையாளர், சூழலியல் எழுத்தாளர், vee.nakkeeran@gmail.com