இயற்கை 24X7 - 34: அசலும் வட்டியும்

இயற்கை 24X7 - 34: அசலும் வட்டியும்
Updated on
2 min read

நீங்கள் ஒரு கணக்குப் புலியா? அப்படியெனில் இந்தக் கணக்கு உங்களுக்கானதே. கனடாவின் மெர்வ் வில்கில்சன் என்பவர் 1938 இல் ஒரு தீவை வாங்கினார். பிறகு அதில் ஒரு லட்சம் மரக்கன்றுகளை நட்டார். பத்தாண்டுகள் சென்றதும் வளர்ந்த மரங்களில் 20% அளவு மரங்கள் அக்காட்டிலிருந்து வெட்டப்பட்டன. அவ்வாறே, ஒவ்வொரு பத்தாண்டு முடிவிலும் அதே 20% அளவு மரங்கள் தொடர்ந்து வெட்டப்பட்டன. அப்படியெனில், ஐம்பது ஆண்டுகளின் முடிவில் அத்தீவில் மொத்தம் எத்தனை மரங்கள் மீதியிருக்கும்?

‘ஒரு மரமும் இருக்காது’ என்பது உங்கள் பதிலானால் உண்மையிலேயே நீங்கள் கணித மேதைதான். அப்படியே ஓர் ஓரமாகச் சென்று அமருங்கள். உம்மைப் போன்ற பொருளாதாரப் புலிகளால்தான் இயற்கை நாசமாகி வருகிறது. இயற்கையை நீங்கள் ஆனா ஆவன்னாவிலிருந்து கற்கத் தொடங்க வேண்டும். ஏனெனில், சூழலியல் கணக்கே வேறு.

அத்தீவில் ஒரு லட்சத்து இருபதாயிரம் மரங்கள் மீதியிருக்கும் என்பதே சரியான விடை. மரங்களைத் தேர்ந்தெடுத்த முறைப்படி நீக்கினால் அவை புதிய மரங்கள் வளர இடம் கொடுக்கும் என்பதே இயற்கை விதி. இம்முறையானது ‘சூழலியல் கானகவியல்’ (Ecological Forestry) எனப்படுகிறது. இதையே ‘அசலை வைத்துக் கொண்டு வட்டியைச் செலவு செய்தல்’ என்பார் பறவையியலாளர் சாலிம் அலி.

சூழலியல் செல்வம்: நமக்கு எதையுமே பணத்தின் அடிப்படையில் கணக்குப் போட்டுப் பார்ப்பதே வழக்கமாகிவிட்டது. அப்படிக் கணக்கிட்டாலும் காடுகள் தரும் சூழலியல் சேவையின் மதிப்பு ஆண்டுக்குச் சுமார் ஆறு லட்சம் கோடி ரூபாய் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. இதனால்தான், காடுகளை அழிப்பதைவிடக் காத்தலே வருமானம் தரும் என்கிறது ஐ.நா. சுற்றுச்சூழல் திட்ட அமைப்பு (UNEP). இது இயற்கை முதலீடு அல்லது சூழலியல் செல்வம் எனப்படும்.

பழங்கள் அனைத்துக்கும் மழைக்காடுகளே தாய். மொத்தமுள்ள மூவாயிரம் பழ வகைகளில் பழங்குடிகள் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட பழ வகைகளைப் பயன்படுத்துகின்றனர். நாம் வெறும் இருநூறு என்கிற அளவிலேயே இன்னும் ஸ்டாண்ட் போட்டு அமர்ந்து சைக்கிள் ஓட்டிக்கொண்டிருக்கிறோம். தற்கால மருத்துவத்திலும் கால் பகுதி மருந்துகள் மழைக்காட்டுத் தாவரங்களில் இருந்தே பெறப்படுகின்றன. இத்தனைக்கும் காடுகளில் இதுவரை ஒரு விழுக்காடு தாவரங்களே ஆய்வு செய்யப்பட்டுள்ளன.

பறிபோகும் சொத்து: காடுகளிலுள்ள மரங்கள் ஒவ்வொன்றும் 30,000 லிட்டர் மழைநீரைப் பிடித்துக்கொண்டு சிறுகச்சிறுக வெளியிடுகிறது என்பது சராசரி கணக்கு. அவ்வாறு வெளியாகும் நீர்தான் ஓடையாக மாறி ஆறாக உருவாகிறது. காட்டில் 10% அளவுக்கு மரங்கள் வெட்டப்பட்டாலே 40% மழைநீர் வழிந்தோடிவிடும் என்கிறார் பி.எஸ். மணி. இந்தியத் துணைக்கண்டத்தில் 767,419 ச.கி.மீ. நிலம் காடாக உள்ளது என்று வனத்துறையின் அறிக்கை (India state of forest report) சொல்கிறது. ஆனால், அதில் 30% அளவுக்கு மரங்களே கிடையாது என்று ‘இந்தியா ஸ்பென்ட்’ (India spend) தெரிவிக்கிறது.

கடந்த பதினோராயிரம் ஆண்டுக் கால வரலாற்றில் தொழில்யுகத்துக்குப் பிறகே அதிக மரங்கள் வெட்டப்பட்டுவருகின்றன. உலகம் முழுதும் ஆண்டுக்கு ஏறத்தாழ 1,500 கோடி மரங்கள் வெட்டப்படுகின்றன. அதற்குப் பதிலாக வெறும் 500 கோடி மரக்கன்றுகளே நடப்படுகின்றன. தொழில்யுகக் காலத்தில் வெட்டப்பட்ட மரங்களின் எண்ணிக்கை ஏறத்தாழ மூன்று லட்சம் கோடிகளைத் தாண்டியிருக்கலாம் என்பது ‘மாந்தர் கையில் பூவுலகு’ நூல் தரும் கணக்கு.

அரை ஏக்கர் பச்சையம்: சூரிய ஒளியை உணவாக மாற்றும் திறன் தாவரங்களிலேயே மரங்களுக்குத்தான் மிக அதிகம். நன்கு வளர்ந்த ஒரு மரமே அரை ஏக்கர் அளவிற்குப் பச்சையத்தைக் கொண்டிருக்கும். எனவேதான், ஒரு ஹெக்டேரிலுள்ள பயிரைவிட ஒரு மரமே கூடுதலாகக் கார்பன் டைஆக்சைடு வாயுவை உட்கொண்டு ஆக்சிஜனைக் கொடுக்கிறது. ஒரு ஹெக்டேர் காடு ஆண்டொன்றுக்கு 3.7 டன் கார்பன் டைஆக்சைடு வாயுவை உட்கொண்டு, இரண்டு டன் ஆக்சிஜனைத் தருகிறது என்கிறார் பி.எஸ்.மணி.

புவியின் நிலப்பரப்பில் பாதியளவுக்குக் காடு வளர்க்கப்பட வேண்டும் என்கிற கொள்கை (Half earth policy) ஒரு பிரிவு சூழலியலாளர்களிடையே நிலவுகிறது. இதற்காகக் காடு பாதுகாப்பு என்ற பெயரில் பழங்குடிகளைக் காட்டிலிருந்து வெளியே அனுப்பும் செயலும் நடைபெற்றுவருகிறது. இது தனியே விரிவாக விவாதிக்கப்பட வேண்டிய செய்தி. அதேவேளை, ஏற்கெனவே பாதுகாக்கப்பட்டிருக்கும் காட்டுப் பகுதிகளைவிட இத்திட்டத்தால் அதிகப் பலன் விளையாது என்று 2018இல் வெளியான ஓர் ஆய்வு (mongabay) தெரிவிக்கிறது. இருக்கும் காடுகளை ஒழுங்காகப் பாதுகாத்தாலே போதும் என்பதையே இது நமக்கு உணர்த்துகிறது. (அடுத்த வாரம்: காடழித்தால் நாடு வளருமா?) - நக்கீரன், கட்டுரையாளர், சூழலியல் எழுத்தாளர், vee.nakkeeran@gmail.com

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in