இயற்கை 24X7 - 31: ஒளியிலே தெரிவது தேவதையல்ல!

இயற்கை 24X7 - 31: ஒளியிலே தெரிவது தேவதையல்ல!
Updated on
2 min read

பல நகரங்களில் இரவில் விண்மீன்களைக் காண முடிவதில்லை. அந்த அளவுக்கு ஒளி மாசினால் அவை பாதிக்கப்பட்டுள்ளன. ஒளி மாசில் சிங்கப்பூர், கத்தார், குவைத் ஆகிய நகரங்கள் உலகின் முதல் மூன்று இடங்களில் உள்ளன. அதேவேளை, ஒளி மாசு என்றால் மின்சாரத்தை மட்டுமே குறிப்பிடுவது தவறு. இயற்கை ஒளியிலும் அந்தச் சிக்கல்கள் உள்ளன. அதற்கும்கூட மனிதத் தலையீடே காரணம்.

பல ஆண்டுகளுக்கு முன்பு மும்பை நகரில் ஓர் அக்டோபர் மாதப் பிற்பகலில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வு ஒன்றை அறிஞர் பி.எஸ்.மணி விவரித்திருப்பார். கதிரொளியானது கான்கிரீட் கட்டிடங்களின் மேல் பட்டுப் பிரதிபலிக்கும் ஒளிமாசு பற்றிய ஆய்வு அது. இன்றும் நகரங்களில் பயணிக்கையில் கண்கள் கூசுவதை உணர்வோம். அதற்கு இத்தகைய ஒளிமாசே காரணம். கான்கிரீட் கட்டிடங்கள்மீது படும் கதிரொளி 60% அளவுக்குப் பிரதிபலிக்கிறது.

அதே ஒளி நகரின் தார்ச்சாலைகளின் மீது படும்போது 45% அளவுக்குப் பிரதிபலிக்கிறது. அதனால் கண் கூசும் நிலைமை ஏற்பட்டு, நமது பார்வைத் திறனுக்குப் பாதிப்பு ஏற்படுகிறது. அதுவே சாலையோரம் மரங்கள் இருந்தால் அந்தப் பிரதிபலிப்புத்தன்மை குறைகிறது. குறிப்பாக ஆலமரம் போன்ற தழையமைப்புக் கொண்ட மரங்கள் இருந்தால், அது வெறும் 9% என்ற அளவிலேயே ஒளியைப் பிரதிபலிக்கிறது.

பறவைகள் மட்டுமல்ல… சரி, மீண்டும் மின்சாரத்துக்கு வருவோம். மின்சாரத்தைக் குறை சொல்வதல்ல நம் பணி. அதைச் சூழலுக்குக் கேடில்லாத வகையில் உற்பத்திசெய்வதும், மிகை மின் பயன்பாட்டைக் குறைப்பதும்தான் நமது எண்ணம். அதுபோல, உற்பத்தி - விநியோகத்தின்போது ஏற்படும் ஏராளமான மின் இழப்பைப் பற்றி மின்துறை வல்லுநர்களே குறிப்பிடுகின்றனர். இக்குறைபாடுகளை நீக்க வேண்டும் என்பதில் யாருக்கும் மாற்றுக் கருத்து இருக்க முடியாது.

பறவைகளை மட்டும் மின்சார ஒளி பாதிக்கவில்லை. மனித உடலையும் அது பாதிக்கின்றது. நம் உடலில் உள்ள ஒருவகை இயக்குநீர் (ஹார்மோன்) மெலடோனின். இது இரவு நேரத்தில் மட்டுமே சுரக்கக்கூடியது. மின் ஒளியால் இந்தச் சுரப்புப் பாதிக்கப்படுகிறது. அதனால் இரவில் விழித்திருக்கும் மனிதருக்குத் தூக்கமின்மை, மயக்கம், தலைவலி, ரத்தஅழுத்தம் போன்றவை ஏற்படுகின்றன. தற்போதைய ஆய்வுகள் மெலடோனின் குறைபாட்டுக்கும் புற்றுநோய்க்கும் தொடர்பு இருப்பதைச் சுட்டிக்காட்டுகின்றன.

காலனியாதிக்கம்: செயற்கை விளக்குகள் ஏற்படுத்தும் பாதிப்பை அமெரிக்க மருத்துவ சங்கம் உணர்ந்துள்ளது. குறிப்பாக, நீலநிற விளக்குகள் மெலடோனின் சுரப்பைக் குறைப்பதில் பெரும்பங்காற்றுகின்றன. இவ்வகை விளக்குகள் கைப்பேசி, கணினி, எல்இடி விளக்குகளில் காணப்படுகிறது. விலை மலிவாக இருப்பதால் வீடுகளிலும் இவை பயன்படுத்தப்படுவது குறிப்பிடத்தக்கது.

மின்சாரம் நமக்குக் காலனிய ஆட்சியில்தான் அறிமுகமானது. அதே மின்சாரம் ஒருவகையில் நம்மை இன்னும் காலனி ஆதிக்கத்தில்தான் வைத்துள்ளது என்றால் அது மிகையில்லை. குறிப்பாக, தகவல் தொழில்நுட்பப் பூங்காக்களும் ஏற்றுமதிப் பொருட்களை உற்பத்திசெய்யும் ஆலைகளும் இரவில் ஒளிவெள்ளத்தில் இயங்குகின்றன. நம் மக்களின் உடல்நலம் அதற்கு விலையாகத் தரப்படுகிறது. ஆகவே, ஒளி மாசில் நம்முடைய நேரடிப் பங்கு முழுமையானதா என்கிற கேள்வி எழுகிறது.

தகவல் தொழில்நுட்பப் பூங்காக்களை எடுத்துக்கொள்வோம். அமெரிக்கர்கள் பகலில் செய்ய வேண்டிய வேலையை அவர்களுக்காக உடல்நலத்தைப் பணயம் வைத்து இரவில் நாம் செய்து தருகிறோம். இவ்விடத்தில் நாம் உண்மையிலேயே காலனி ஆதிக்கத்திலிருந்து விடுதலைப் பெற்றுவிட்டோமா என்கிற கேள்வி பிறக்கிறது. இல்லை என்பதுதான் இயல்பான பதில். ஆம், அமெரிக்காவின் பகலுக்கு இந்தியாவின் இரவு காலனியாக்கப்பட்டிருக்கிறது. - நக்கீரன் vee.nakkeeran@gmail.com, கட்டுரையாளர், சூழலியல் எழுத்தாளர்

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in