

உலகளாவிய நோய்ச் சுமை என்கிற அமைப்பு 2013ஆம் ஆண்டில் நடத்திய கணக்கெடுப்பின்படி ஐந்தில் ஒரு பங்கு மரணம் காற்று மாசினால் நிகழ்வதைக் கண்டறிந்தது. இந்தியாவைப் பொறுத்தவரை மரணத்துக்கான காரணிகளில் காற்று மாசு ஐந்தாம் இடம் வகிக்கிறது. இதற்காக வாழ்நாள் முழுதும் முகக் கவசம் அணிந்தா வாழ முடியும்?
அப்படியே அணிந்தாலும் காற்று மாசினால் நம் உடலில் இன்சுலின் சுரத்தல் குறைந்து, நீரிழிவு நோயாளிகளின் எண்ணிக்கை 14% உயர்ந்துள்ளது என்று நம்மை அலற வைக்கிறார்கள். உலக சுகாதார நிறுவனம் (WHO) குறிப்பிட்டுள்ள பாதுகாப்பான காற்றுத் தரக்குறியீடு (AQI) அளவுக்குக் குறைவாகவே இருந்தாலும், அதுவே நீரிழிவு நோய்க்குக் காரணியாகிறதாம்.
அத்துடன் விட்டால் பரவாயில்லை. குழந்தைகளின் உடல் நலமும் பாதிக்கப்படுவது கவலைக்குரியது. காற்றிலுள்ள நுண்துகள்களால் அவர்களின் மூளை வளர்ச்சி பாதிக்கப்பட்டு மொழி, கணக்குப் பாடங்களில் குறிப்பிடத்தக்க அளவுக்கு மதிப்பெண் குறைகிறது என்கின்றன ஆய்வுகள்.
பெரியவர்களைவிட இரண்டு மடங்கு காற்றைக் குழந்தைகள் உள்ளெடுக்கின்றனர். காரீயம் கலந்த வேதிப் பொருள்கள் புவிமட்டத்தில் இருந்து ஒரு மீட்டர் உயரத்தில்தான் காற்றில் மிதக்கும். எனவே, அந்த உயர அளவில் உள்ள குழந்தைகள் அதை அதிகம் சுவாசிக்க நேர்கின்றது. முன்பு பயன்பாட்டில் இருந்த ஈயம் கலந்த பெட்ரோல் இப்போது நிறுத்தப் பட்டுவிட்டது உண்மைதான். எனினும், சில இடங்களில் காற்றில் இயற்கையாக இருக்க வேண்டிய அளவைவிட அதிக அளவிலேயே காரீயம் கலந்துள்ளது.
இனி குழந்தையுடன் நிம்மதியாகக் காற்று வாங்கப் போக முடியுமா?
ஆச்சரியப்படுத்தும் சாண வண்டு
மின்சாரம் அற்ற ஒரு வாழ்வை இன்றைக்கு மனிதர்களால் கற்பனை செய்தும் பார்க்க முடியாது. உணவு, உடை, இருப்பிடம் இம்மூன்றும் மனிதர்களின் அடிப்படைத் தேவை. இத்துடன் மின்சாரமும் இப்போது இணைந்துவிட்டது. சூழலியலாளர்களுக்கும் இது பொருந்தும்.
மின்சாரம் இல்லாமல் நம்மால் ஒரு சாண வண்டு (Dung beetle) வாழும் வாழ்க்கையைக்கூட வாழ்ந்துவிட முடியாது. அது பகலில் மட்டுமல்லாது இரவிலும்கூட அப்பணியை மேற்கொள்ளும். பகலில் கதிரவன் ஒளியிலும் இரவில் நிலவின் ஒளியிலும் அவை இயங்குகின்றன. இவ்வண்டுகள் குறித்து மேலும் அறிந்துகொள்ள ஸ்வீடன் நாட்டுப் பல்கலைக்கழகம் ஒன்றில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அப்போது அவ்வண்டுகள் நிலவற்ற இரவிலும் இயங்குவதை அறிந்தனர். இது அவர்களுக்கு வியப்பளித்தது.
அது குறித்து மேலும் ஆய்வு நடத்துகையில் அவை விண்மீன்களின் ஒளியைக் கொண்டு இயங்குவது தெரிந்தது. பின்பு செயற்கை முறையில் விண்மீன் ஒளியையும் நீக்கிவிட்டு ஆய்வுசெய்தபோது ஒரு வியத்தகு உண்மை வெளிப்பட்டது. ஆம்! அவை பால்வீதி (Milkyway Galaxy) ஒளியைக் கொண்டு இயங்கின.
எனவேதான், மின்சாரமற்ற உலகில் ஒரு சாண வண்டுகூட வாழ்ந்துவிடும், சாதாரண மனிதர்கள் என்ன செய்யப் போகிறோம் என்கிற கேள்வி பிறக்கிறது. மின்சாரம் என்பது மனிதர்களின் மாபெரும் சாதனை என்பதில் மாற்றுக் கருத்தில்லை. ஆனால், நாம் மின்சாரத்தைக் கண்டுபிடித்து இரவை ஒளிவெள்ளத்தால் மூழ்கடித்ததும் உடனடியாகப் பாதிக்கப்பட்டது வேறொரு உயிரினம். அது பறவைகள்.
குழம்பும் பறவைகள்
மின்சாரமற்ற காலத்தில் வலசை சென்ற பறவைகளுக்கு ஞாயிறு, நிலவு, துருவ ஒளி போன்ற இயற்கை ஒளிகளே வழிகாட்டிகளாக அமைந்திருந்தன. இரவில் நிலவும் விண்மீன்களும் ஒளியைத் தந்தன. இவற்றிலிருந்து வரும் ஒளிக்கதிர் இணை ஒளிக்கதிர்களாக (parallel) அமைந்திருக்கும். ஆகையால் அத்தகைய கதிர்கள் பறவைகளுக்குத் திசைகாட்டிடப் பொருத்தமாக இருந்தது. அவை நேர்க்கோட்டில் பயணம் செய்தன.
செயற்கையான ஒளி இதற்கு நேர்மாறானது. அவை இணை ஒளிக்கதிர்களாக அமையாது சக்கரம் ஒன்றின் ஆரக்கால்கள்போல விரிந்து செல்லும் தன்மை கொண்டதாக, மையத்திலிருந்து விரிந்து செல்லும் ஒளியாக (radiating) அமைந்தன. அதனால், தொடக்கத்தில் பறவைகள் பெரும் இடரைச் சந்தித்தன. இன்று பழகிவிட்டது போலத் தோன்றினாலும் இன்றும் அவை சிக்கலைச் சந்திக்கின்றன.
ஜெர்மனியில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் நாட்டுப் புறங்களில் காணப்படும் பறவையைவிட நகரங்களிலுள்ள பறவைகள் சீக்கிரமாக விழித்துக்கொள்வது தெரியவந்தது. பறவைகளின் மீது கொண்ட ஆர்வம் காரணமாகச் சில நகரங்களில் பறவை வலசைகளின்போது இரவு நேரத்தில் கட்டிடங்களில் விளக்குகளை அணைக்கும் நடைமுறையைப் பின்பற்றுகின்றனர். இருப்பினும் நாளுக்கு நாள் பெருநகரங்களின் ஒளிவெள்ளம் பெருகிக்கொண்டே வருகிறது. - கட்டுரையாளர், சூழலியல் எழுத்தாளர், vee.nakkeeran@gmail.com