

உலகில் பெரும்பாலான நாடுகளில், ஊர்களில் கார்களை மையப்படுத்தியே பாலங்கள் உள்ளிட்ட பல போக்குவரத்துத் திட்டங்கள் தீட்டப்படுகின்றன. வாகனங்கள் 90% சாலையை அடைத்துக் கொண்டாலும் அதன் பயனர்களோ வெறும் 20% மட்டுமே. சென்னை நகரில் மக்கள்தொகை 10% பெருகினால் போக்குவரத்து வளர்ச்சி 108% பெருகுகிறது என்கிறார் பேராசிரியர் என்.மணி. அதற்குக் காரணம் மக்களின் வருவாய் அதிகரிப்பு என்பதைவிட, பொதுப் போக்குவரத்துத் திட்டமிட்டுக் குறைக்கப்பட்டதே என்கிறார் அவர். ‘மேம்பாலங்கள் கட்டுவதற்குக் கடன் வழங்கும் உலக நிதி நிறுவனங்கள், அரசுப் பேருந்துகள் வாங்கக் கடன் வழங்கி ஊக்குவிக்காதது ஏன்?’ என்று அவர் எழுப்பும் கேள்விக்கான பதிலைத் தேட வேண்டியது அவசியம்.
வெறும் 600 மீட்டரே உள்ள ஓரிடத்துக்குக் காரில் செல்ல, ‘ஒருவழிப் பாதை’, ‘யு டர்ன் இல்லாமை’ போன்ற பல காரணங்களால் 4 கி.மீ. தொலைவுக்குப் பயணத்தை நீட்டிக்க வேண்டியிருக்கிறது. இது வெறுமனே தொலைவு குறித்த சிக்கல் மட்டுமல்ல. ஒரு பெட்ரோல் கார் 0.024 பி.எம். அளவுக்குக் கார்பனும், டீசல் கார் அதைவிட பத்து மடங்கு அதிகக் கார்பனையும் வெளியிடுகின்றன. கார்பன் மோனாக்சைடு வடிவில் அது வெளியாவதை அறிவோம்.
மோனாக்சைடும் சமநிலையும்: காற்றில் கார்பன் மோனாக்சைடு ஏற்கெனவே கலந்துள்ளது. வளிமண்டலத்தில் மீத்தேன் வாயு ஆக்சிகரணம் அடைவதிலிருந்து அது உருவாகிறது. ஆண்டுக்கு 100 கோடி டன் என்ற அளவில் அதன் உற்பத்தி நடைபெறுகிறது.
அவ்வளவு ஏன்? காய்கறியிலிருந்தும் அது உற்பத்தியாகிறது. பல கடல்வாழ் உயிரினங்களின் அடிவயிற்றுப் பகுதியிலுள்ள காற்றறைகளில் அது செறிவோடு அடைபட்டுள்ளது. அதே செறிவோடு அது வளிமண்டலத்தில் அடைக்கப்பட்டிருந்தால் பெரிய வகைப் பாலூட்டிகளுக்கு நஞ்சாக மாறிவிடும். நம்மையும் மொத்தமாகக் கொன்று குவித்துவிடும். ஆனால், இயற்கை அதன் அளவைத் தன் கட்டுப்பாட்டில் வைத்துள்ளது.
நம் குருதியில் உள்ள ஹீமோகுளோபின்கள் ஆக்சிஜனை உட்கொள்ளும் ஆற்றல் மிக்கவை. அதே வேளை இவை கார்பன் மோனாக்சைடையும் உட்கொள்ளு கின்றன. ஆனால் கெடுவாய்ப்பாக ஆக்சிஜனைவிட அதிவேகத்தில் கார்பன் மோனாக்சைடை அவை உட்கொள்கின்றன. அதன் விளைவாகத் தலைவலி, நினைவிழத்தல் முதலிய தொந்தரவுகள் ஏற்படுகின்றன. எனவேதான், அனைத்து உயிரிகளும் புவியில் வாழும் பொருட்டு அதைச் சமநிலையில் வைத்துள்ளது இயற்கை. அதை, ‘நமக்கு நாமே’ திட்டத்தின் மூலம் நாம் குலைத்துக் கொள்கிறோம்.
விடுதலை எப்போது? - 100 லாரிகள் சேர்ந்தாற்போல ஐந்து நிமிடம் ஓடினால் ஒரு கிலோ வாகனப் புகை வெளியாகிறது. அதிலிருந்து மொத்தப் புகை அளவையும் கணக்கிட்டுக் கொள்ளலாம். அது நம் மூச்சுக்காற்றாக மாறுகையில் வளிமண்டலத்தில் கலந்திருக்கும் மாசைவிட மூன்று, நான்கு மடங்கு அதிகமாக இருக்கும். நம் நகரங்களில் 50-60% மக்கள் மாசு அதிகமுள்ள தெருவோரங்களில்தான் வசிக்கின்றனர் அல்லது பணிபுரிகின்றனர். அவர்களின் கதியை நினைத்துப் பாருங்கள். என்ன சொன்னாலும் உலகில் பெட்ரோலியம் இன்றி வாழ்வது சாத்தியமா? இந்தக் கேள்வி உறுதியாகத் தவிர்க்க முடியாத ஒன்றே. இக்கேள்விக்கான பதில் கண்ணுக்கெட்டும் தொலைவு வரை காணப்படவில்லை என்பதே உண்மை. அந்த அளவுக்கு நாம் ஹைட்ரோ கார்பன் அடிமைகளாக மாற்றப்பட்டுள்ளோம். ஆனால், பயன்பாட்டைக் குறைக்கும் வழிகள் தென்படுகின்றன.
கட்டுப்பாடு இல்லை: ஊதாரித்தனமாக இயற்கை வளங்களைச் செலவழிக்கும் நாடுகளில் இந்தியாவும் ஒன்று. மொத்த உள்நாட்டு உற்பத்திக்குப் பணக்கார நாடுகளைப் போல நாம் இரண்டு மடங்கு எரியாற்றலைச் செலவிடுகிறோம். மேற்கு ஐரோப்பிய நாடுகள், ஜப்பான் ஆகியவை பத்து லட்சம் டாலர் மதிப்புள்ள பொருட்களை உற்பத்திசெய்ய 40 – 60 டன் எரிபொருளைச் செலவிடுகின்றன. ஐக்கிய அமெரிக்க நாடோ அதே அளவு பொருட்களை உற்பத்தி செய்ய 84 டன் எரிபொருளைச் செலவழிக்கின்றது. அதேவேளை இந்தியா செலவழிப்பது எவ்வளவு தெரியுமா? 189 டன். இதில் 128 டன்னை இறக்குமதி வேறு செய்கிறோம். அளவுக்கு மேல் எண்ணெய் வளத்தை மோட்டார் தொழிலுக்குப் பயன்படுத்தும் கார் உரிமையாளருக்கு அமெரிக்காவில் விதிக்கப்படும் சாலை வரிவிதிப்பில் எட்டில் ஒரு பங்குகூட இங்கு விதிக்கப்படுவது கிடையாது. பெட்ரோலியப் பயன்பாடு அதிகரிக்காமல் என்ன செய்யும்? கோவிட் தொற்றுக்குப் பிறகு பொதுப் போக்குவரத்துப் பயன்பாடு குறைந்து, தனியார் வாகனப் பயன்பாடு அதிகரித்துள்ளது. ஒரு தகவலின் அடிப்படையில் நமது சாலைக்கு நாளொன்றுக்கு 800 புதிய வாகனங்கள் வந்துசேர்கின்றன. தற்போது அந்த எண்ணிக்கை இன்னும் பெருகியிருக்கலாம். எல்லாம் சரி, இவ்வளவு வேகமாக நாம் எங்கேதான் போய்க்கொண்டிருக்கிறோம்? (அடுத்த வாரம்: காற்று வாங்கினால் நோய் இலவசம்) - நக்கீரன் கட்டுரையாளர், சூழலியல் எழுத்தாளர், vee.nakkeeran@gmail.com