

பனிப்புகை நிகழ்வுகளில் வாகனப் புகை, குப்பைகூளம் எரித்தல், கட்டுமான தூசி, பட்டாசு வெடித்தல், சாலைத் தூசி, ஆலைப் புகை, அனல் மின்நிலையம், நிலக்கரி சாம்பல், கல்குவாரி போன்ற பலவற்றுக்கும் பங்குண்டு. புவியின் காற்று மண்டலத்தில் சேரும் கரிக்காற்றில் (கார்பன் டை ஆக்சைடு) 29% அனல் மின்நிலையங்களால் சேருவதாகும். அனல்மின் நிலைய உற்பத்தியில் முதல் மூன்று இடங்களைச் சீனா, அமெரிக்கா, இந்தியா ஆகியவை பகிர்ந்துகொள்கின்றன.
சென்னையில் வடசென்னைப் பகுதி அனல்மின் நிலையங்கள் நிறைந்த பகுதியாகும். அதனால், அங்குச் சுற்றுச்சூழல் பாதிப்பு அதிகமாகவே உள்ளது. அது வடசென்னையில்தானே நிகழ்கிறது என்று சென்னையின் இதர பகுதி மக்கள் நிம்மதியாக இருந்திட முடியாது. பருவநிலை சற்று மாறி கோளாறு செய்தாலும் லண்டனில் நேர்ந்தது போலச் சென்னை முழுக்கவும் பாதிக்கப்படும் அபாயம் இருக்கிறது என்பதை நினைவில் கொள்ளவேண்டும்.
வீட்டுக்குள்ளும் ஆபத்து: வீட்டுக்கு வெளியே போனால்தானே சிக்கல்? வீட்டுக்குள்ளேயே நிம்மதியாக இருந்து தப்பிக்கலாம் என்று நினைத்தால் அதுவும் முடியாது போலிருக்கிறது. வீட்டுக்கு வெளியே காற்று மாசால் இறப்பவர்கள் ஆண்டுக்கு எட்டு லட்சம் பேர் என்றால், வீட்டுக்குள் நிலவும் காற்று மாசால் இறப்பவர்களின் எண்ணிக்கை இரண்டு மடங்காக, அதாவது 16 லட்சமாக இருக்கிறது என்று கூறி அதிர்ச்சியூட்டுகிறது ஐ.நா. சுற்றுச்சூழல் திட்டம் (UNEP) வெளியிட்டுள்ள நான்காவது அறிக்கை. அவை வெவ்வேறு வகைப்பட்ட வேதித்தன்மை கொண்ட நுண்துகள்களால் ஏற்படுகின்றன. அந்த அளவுக்குக் காற்று மாசு நிறைந்த உலகில் நாம் காலத்தை ஓட்டிக்கொண்டிருக்கிறோம்.
அந்திப்பூச்சியின் நிற மாற்றம்: ஓரிடத்தின் சுற்றுச்சூழல் பாதிக்கப்படும்போது அங்குள்ள உயிரினங்களின் வாழ்வையும் அது பாதிக்கின்றது. எனவே, உயிரினங்கள் தம்மைத் தகவமைத்துக்கொள்ளும் முயற்சியில் ஈடுபடுகின்றன. எடுத்துக்காட்டாக, இங்கிலாந்தில் வாழும் ஒருவகை அந்திப்பூச்சியான ‘பெப்பர் மாத்’தை (Pepper moth) எடுத்துக்கொள்வோம். அது வெளிர் சாம்பல் நிறத்தில் இருக்கும். இரைக்கொல்லிகளிடம் இருந்து அதைப் பாதுகாத்துக் கொள்ள அந்நிறம் பொருத்தமாக இருந்தது.
இங்கிலாந்தில் தொழிற்சாலைகள் பெருகிய பிறகு எங்கும் கரும்புகைப் படியத் தொடங்கியது. அதனால், அடுத்த சில பத்தாண்டுகளில் அப்பூச்சி தன்னைத் தகவமைத்துக்கொண்டு, தன் மேற்புற நிறத்தை முற்றிலும் கறுப்பு நிறத்துக்கு மாற்றிக்கொண்டது. மோசமான பாதிப்புகளுக்குப் பிறகு இங்கிலாந்தில் காற்றுத் தூய்மைச் சட்டம் நடைமுறைக்கு வந்தது. அதனால், அங்குக் கரிப்புகைக் குறையவே தற்போது அப்பூச்சி இழந்துவிட்ட தன் பழைய சாம்பல் நிறத்தை நோக்கி, மெல்ல மாறிவருகிறது.
நாம் படிமலர்ச்சி வரலாற்றை உற்று நோக்கினால், சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படுகையில் பெரும்பாலும் சிற்றுயிர்கள் எப்படியாவது தம்மைத் தகவமைத்துத் தப்பித்துவிடுவதைக் காண முடிகிறது. பேருயிர்களால் அவ்வாறு முடிவதில்லை என்பதைத்தான் டைனசோர், மம்மூத் போன்ற உயிரினங்களின் வரலாறு நமக்குக் காட்டுகிறது. ஊர்ப்புறத்தில் சொல்வார்கள் அல்லவா? ‘பெரும் புயலில் ஆலமரங்களே சாயும். நாணல்கள் சாயாது’ என்று. இன்றைய ஆலமரங்கள் யார்? மனிதர்கள்தானே?
எங்கே செல்கிறார்கள்? - தொலைக்காட்சி ஒன்றில் மாமல்லபுரத்துக்கு வந்திருந்த வெளிநாட்டவர் ஒருவரிடம் பேட்டிக் கண்டனர். “சென்னையில் நீங்கள் பார்த்து வியந்தது எது?” அவர் மாமல்லபுரச் சிற்பங்கள் பற்றி ஏதாவது கூறுவார் என்பது பேட்டி கண்டவரின் நோக்கமாக இருக்கலாம். ஆனால், அந்த வெளிநாட்டவர் இப்படிப் பதில் சொன்னார்: “இங்கு எல்லோருமே நடப்பதற்குப் பதில் ஓடிக்கொண்டே இருக்கிறார்கள். வாகனத்தில் செல்பவர்கூட எப்போதும் ஹாரன் அடித்துக்கொண்டே விரைகிறார்கள். ஒருவரிடமும் நிதானம் இல்லை. அவ்வளவு வேகமாக எல்லோரும் எங்கே செல்கிறார்கள் என்பதுதான் என் வியப்பு!” நியாயமான வியப்புதான். அவசரத்துக்குப் பிறந்தது போலத்தான் நாம் வாழ்ந்துகொண்டி ருக்கிறோம். வேகமான பயணத்துக்குத்தான் வாகனங்களை வைத்திருக்கிறோம். நாம் உண்மையில் வேகமாகத்தான் செல்கிறோமா? சென்னை போன்ற பெருநகரங்களில் நின்றுகொண்டு இதற்கான பதிலை யோசித்தால் வேடிக்கையாக இருக்கிறது.
மாட்டு வண்டி வேகம்: வாகனங்களின் வேகம் குறித்துப் பிரபுல் பித்வாய் நல்லதொரு ஆய்வுக் கட்டுரையை எழுதியிருக்கிறார். அதில் அமெரிக்காவில் மேற்கொள்ளப்பட்ட ஓர் ஆய்வைப் பற்றி அவர் விளக்கியுள்ளார். அங்கே கார்களைப் பழுது பார்த்தல், பராமரித்தல், சமிக்ஞை விளக்குகளில் காத்திருத்தல் போன்ற காரணங்களுக்காகச் செலவிடும் நேரத்தையெல்லாம் உள்ளடக்கி ஒரு மணி நேரத்துக்குச் சராசரியாக ஒரு கார் எவ்வளவு வேகத்தில் செல்கிறது என்று கணக்கிட்டனர். அந்தக் கணக்கு மணிக்கு 10–12 கி.மீ வேகம்தான் செல்ல முடியும் என்று காட்டியது. இது சைக்கிளில் செல்லும் வேகத்துக்குச் சற்றே அதிகம். அதை ‘மாட்டு வண்டி வேகம்தான்’ என்று சொன்னாலும் யாரும் வருத்தப்பட முடியாது. - கட்டுரையாளர், சூழலியல் எழுத்தாளர்
vee.nakkeeran@gmail.com