

திருப்பூர் பெரியபாளையம் நஞ்சராயன் குளத்தில் பவழக்கால் உள்ளான் பறவைகளின் வாழிடத்துக்கான போட்டியை மூன்று மணி நேரத்துக்கும் மேலாகப் பொறுமையுடன் படம் எடுத்த அனுபவம் உண்டென்றாலும், தட்டான்களின் வாழிடப் போட்டியை மேட்டுப்பாளையம் அருகிலுள்ள குனுக்குமடுவு பகுதியில் 2012-ம் ஆண்டு பதிவு செய்வதற்கு முன்பு, அது போன்றதொரு சம்பவத்தைப் பார்த்ததில்லை.
என்னுடன் வந்திருந்த நண்பர்கள் உயிரினங்கள் தொடர்பான உரையாடலைத் தொடங்க, நானோ ஓடைக்கருகே பூச்சிகளைத் தேடிச் சென்றேன். என் எதிர்பார்ப்பைப் பொய்யாக்காமல் அழகிய செஞ்சிறகு ஊசித்தும்பியொன்று அருகில் வந்து அமர்ந்தது. பூச்சிகளைப் படமெடுக்கும் மேக்ரோ லென்ஸைப் பொருத்தி, டிரைபாட் இன்றி கைகளிலேயே ஒளிப்படக்கருவியைப் பிடித்துக்கொண்டு செஞ்சிறகியை ஒளிப்படம் எடுப்பதற்குக் குனிந்தேன்.
சில நிமிடங்களில் மற்றொரு செஞ்சிறகி அதைத் துரத்த, அப்போது தொடங்கிய போட்டி ஒரு மணி நேரத்துக்கும் மேலாக நீண்டது. செஞ் சிறகிகளை சரியான கோணத்தில் துல்லியமாகப் படம் எடுப்பதற்காகச் சில நேரம் படுத்தபடியும் பாதி குனிந்தபடியும் முழங்கையை ஓடை நீரில் அழுத்தியபடியும் ஒளிப்படக்கருவியில் தண்ணீர் படாமல் சமாளித்துக்கொண்டு சற்றுச் சிரமப்பட்டுப் படங்களை எடுக்க ஆரம்பித்தேன். தட்டான்களின் வேகத்துக்கு ஈடுகொடுக்க முடியவில்லையென்றாலும், சற்றுச் சுறுசுறுப்பாக இயங்கியதில் எடுத்திருந்த படங்களில் நான்கைந்து படங்கள் துல்லியமாகவும் சரியான கோணத்திலும் அமைந்தது மகிழ்ச்சியளித்தது.
செஞ்சிறகு ஊசித்தும்பிகளின் கண்கள் கறுப்பு கலந்த பழுப்பு நிறத்தில் காணப்படுகின்றன. ஆண் ஊசித்தும்பிகளின் நெஞ்சுப் பகுதி (Thorax) கறுப்பு நிறத்தில் இளமஞ்சள், ஆரஞ்சு, இளஞ்சிவப்பில் மெல்லிய பட்டைகளோடு காணப்படுகிறது. கறுப்பு நிறத்தில் இளமஞ்சள் பட்டைகளோடு பெண் தும்பிகள் தோற்றமளிக்கின்றன. ஆண்தும்பிகளின் வயிற்றுப் பகுதி (Abdomen) கறுப்பு மஞ்சள் புள்ளிகளோடும், அதே நிறத்தில் சற்று வெளிறிய தோற்றத்துடன் பெண் தும்பிகளும் காணப்படுகின்றன.
கால்களில் மெல்லிய மயிர்க்கற்றைகள் தென்படும். தலையில் இருந்து பின்புறம் உடலோடு ஒட்டியபடி உள்ள இறகுகள் ஊடுருவும் தன்மையுடன் முனையில் சிவப்பு, கறுப்பு நிறத்திட்டு கலந்து காணப்படுகின்றன. பெண் தும்பிகளின் இறகுகள் ஊடுருவும் தன்மையில் இளமஞ்சள், ஆரஞ்சு, இளஞ்சிவப்பு நிறங்களில் தோற்றமளிக்கின்றன. இந்த இறகு நிறமே, இவை அந்தப் பெயரைப் பெறுவதற்குக் காரணம். செஞ்சிறகு ஊசித்தும்பிகளை ஆண்டு முழுவதும் உயர்ந்த மலை சிகரங்களில் காண முடியும்.
- கட்டுரையாளர், காட்டுயிர் ஒளிப்படக் கலைஞர்
தொடர்புக்கு: shanmugam.wildlife@gmail.com