

ஓர் அமைதியான இளங்காலையில் சன்னல் வழியே நுழையும் கதிரொளியைப் பார்த்திருக்கிறீர்களா? பார்க்காதவர்கள் அடுத்த முறை அதைச் சற்று உற்றுப்பாருங்கள். ஒளியில் தூசி அலை பாய்வதைப் பார்க்கலாம். காற்றில் இவ்வளவு தூசி இருக்கிறதா? அப்படியெனில், நாம் உள்ளிழுக்கும் மூச்சுக் காற்றுத் தூய்மையாக இல்லையா என்கிற கேள்வியும் உடன் எழும். தூசி இயற்கையானது. இப்படிக் கூறினால், “இதென்ன ‘கறை நல்லது’ என்கிற சோப்பு நிறுவன விளம்பரம் போல இருக்கிறதே” என்று நினைக்கலாம். தூசி என்ன செய்யும்? கண்களில் விழுந்தால் உறுத்திக் கண்ணீர் வரும். மூக்கினுள் நுழைந்தால் தும்மல் வரும். இது இயற்கையில் காணப்படும் தூசிகளால் ஏற்படும் சிறு பாதிப்புகள்.
ஏரோசால் எனப்படும் தூசி இயற்கையாகவும் உருவா கிறது. களிமண், வண்டல் போன்றவற்றின் கனிமப் புழுதி (mineral dust), கடலுப்பின் துகள்கள் - பூக்களின் மகரந்தம் போன்றவை காற்றில் இயற்கையாகவே கலந்துள்ளன. ஆனால், மனிதரால் உருவாக்கப்பட்ட தூசி அப்படியல்ல.
காலநிலை மாற்றத்துக்கும் காரணம்: தொழில் யுகத்துக்குப் பிறகு உலகளவில் தூசிப் படலங்களின் செறிவு அதிகரித்துள்ளது. அவை மொத்த ஏரோசால் நிறையில் பத்து விழுக்காடுதான் உள்ளன. இருப்பினும், அவற்றின் ஒளியியல் பண்புகள் (optical properties) காரணமாக அவற்றின் கேடு விளைவுகள் பல மடங்கு அதிகமாக இருக்கின்றன. ஒரு பொருளின் ஒளியியல் பண்பு என்பது அப்பொருள் ஒளியுடன் கொள்ளும் தொடர்பைப் பொறுத்து அமைகிறது. தூசியால் ஏற்படும் பாதிப்புகளை ஒளியியல் ஆழம் (aerosol optical depth) என்ற அளவையின் மூலம் அளக்கலாம். இதை நிலப்பகுதிகளில் அளப்பதைக் காட்டிலும் நீர்நிலைகளின் மேல் அளப்பதே துல்லியமாக இருக்கும். இதன் அளவு 0.1லிருந்து 0.15 வரைக்குள் இருக்க வேண்டும் என்கிறார்கள். 0.5க்கும் அதிகமாகப் போனால் தூசியின் நிறை அதிகமாக உள்ளது எனப் பொருள். இந்தத் தூசி புவிப்பரப்புக்குள் வரும் கதிர்வீச்சினைச் சிதறடித்து விண்ணுக்குத் திருப்பி அனுப்புகின்றன. மேகங்களின் பிரதிபலிப்புச் சமச்சீர் தன்மையைச் சிதைக்கின்றன. அத்துடன் புவியின் கதிர்வீச்சுச் சமன்பாட்டினைப் பாதிப்புக்கு உள்ளாக்குகின்றன. அதனால், அவை காலநிலை மாற்றத்துக்கும் முதன்மை காரணிகளுள் ஒன்றாக மாறுகிறது.
72 லட்சம் பேர் பலி: என்ன, அறிவியல் விளக்கம் கண்ணைக் கட்டுகிறதா? நமக்குப் புரியும்படி சொல்ல வேண்டுமானால் இத்தூசி மண்டலம் ஆசியாவில் அதிகம் இருந்தால் அது இந்தியப் பெருங்கடலின் பருவநிலையில் பாதிப்பை ஏற்படுத்தும். அது நம் கோடைக்காலப் பருவமழையைப் பாதிக்கும். அதாவது, நமக்குக் கோடையில் பெய்யும் சிறிதளவு மழையும் காலி. பொதுவாகவே, காலநிலை மாற்றம் என்று பேசினால் எவரும் கவலைப்பட மாட்டார்கள். அதேசமயம் ‘காலரா’ பரவுகிறது என்றால் அலறுவார்கள். அதாவது தனக்கு வந்தால்தான் தலைவலி. பருவ மழையாவது கோடை மழை யாவது என்று எண்ணுபவர்கள்கூட உங்கள் உடல்நலம் கெட்டுப்போகும் என்றால் உடனே திரும்பிப் பார்ப்பர். தற்காலத்தில் தூசியால் ஆண்டுக்கு ஏறத்தாழ 72 லட்சம் பேர்கள் பலியாகின்றனர். அதிலும் எட்டு லட்சம் பேர் இளம் வயதிலேயே இறந்துவிடுகின்றனர். 2015ஆம் ஆண்டில் இந்தியாவில் மட்டும் ஏறக்குறைய 11 லட்சம் பேர் தூசியின் விளைவாகப் பலியாகியுள்ளனர். இதைச் சொன்னவுடன்தான், ஏன் இப்படி விவரமாக முதலிலேயே சொல்லவில்லை என்று கவனத்தோடு படிப்போம்.
அதிகரிக்கும் ஆபத்து: தூசி பத்து மைக்ரோமீட்டர் அல்லது அதைவிடக் குறைவான விட்டமுள்ள துகளாக இருந்தால் அது நம் நுரையீரல், குருதிக்குள் எளிதாக ‘பாஸ்போட், விசா’ ஏதுமின்றி நுழைந்துவிட முடியும். நுழைந்து குடியேறி பலவித நோய்களுக்கு அழைப்பிதழ்கள் அனுப்பும். துகள்களின் விட்டம் எவ்வளவு குறைவாக உள்ளதோ அந்த அளவுக்கு அழைப்பிதழ்களின் எண்ணிக்கையும் பெருகும், தீங்கும் பெருகும். உலகின் பல பகுதிகளில் 2.5 மைக்ரோமீட்டர் அளவுள்ள தூசி நுரையீரல் தேசத்துக்குள் நுழைய அலைந்து திரிந்துகொண்டிருக்கின்றன. உலக நிலப்பரப்பில் 41 விழுக்காடு வறண்ட நிலப்பகுதியாகும். அத்தகைய பகுதிகளில் 210 கோடி பேர் வாழ்கின்றனர். இனி சூழல் கேடுகளின் காரணமாக வறண்டநிலப் பரப்பளவு விரிவடையப் போகிறது. விளைவாக, காற்றில் தூசியும் அதிகரிக்கும். இந்தியாவில் கூடுதல் நுண்துகள்கள் உள்ள பகுதிகளில் மொத்தம் 66 கோடி பேர் வாழ்கின்றனர். அதாவது ஆயிரத்தில் ஒருவர் மட்டுமே நுண்துகள்கள் குறைவான பகுதிகளில் வாழ்கின்றனர். அந்த ஒருவராக உறுதியாக நாம் இருக்க மாட்டோம்.
கட்டுரையாளர், சூழலியல் எழுத்தாளர்
நக்கீரன்
vee.nakkeeran@gmail.com