

அமிலப் புகையுள் முதன்மையாக இருக்கும் சல்பர் டை ஆக்சைடு உருவாக்கத்துக்குப் புதைப்படிவ எரிபொருளும் ஒரு காரணம். இவற்றைப் பற்றிப் பேசினால் ‘வளம் குன்றும் வளர்ச்சி நாயகர்கள்’ உடனே பொங்கி எழுவார்கள். “ஏன் அது எரிமலையால் உருவாவதில்லையா?” என்று எதிர்க்கேள்வி கேட்பார்கள். அதை யாரும் மறுக்கவில்லை! அது மட்டுமா? நைட்ரஸ் ஆக்சைடும் மின்னல் போன்ற இயற்கை நிகழ்வால் உருவாக்கப்படுகிறது என்பதையும் ஒப்புக் கொள்கிறோம். ஆனால், எரிமலையால் உருவாகும் சல்பர் டை ஆக்சைடைவிட ஆலைகளால் உருவாவது பத்து மடங்கு அதிகம் என்கிற உண்மையை மறைத்துவிட்டுப் பேச முடியுமா?
சும்மா இயற்கையின் மீது பழிசுமத்தித் தப்பிவிட முடியாது. செயற்கையாக உருவாக்கப்படும் அமில மழையே மண்வளத்தைப் பாதிக்கிறது. அதனால் மண்ணிலுள்ள சிலவகைப் பாக்டீரியா கொல்லப்படுவதால், அதன் நொதிப்புச் செயல்பாடு தடுக்கப்படுகிறது. மண்ணிலுள்ள அலுமினியம் போன்ற நச்சு அயனிகளின் செயலை அமிலமழை அதிகரிக்கச் செய்வதால், அவசியமான சில கனிம அயனிகள் தாவரங்களில் சேருவது தடுக்கப்படுகிறது. முதன்மையான சில கனிம உப்புகளும் மண்ணிலிருந்து அகற்றப்படுவதால், விளைச்சலும் மண்வளமும் குறைகின்றன.
சமநிலை குலைக்கும் அமிலம்: அமில மழையால் காடுகளும் பாதிக்கப்படலாம். குறிஞ்சி நிலக் காடுகள் முகில்களுடன் நேரடியாகத் தொடர்புடையவை. எனவே, அவை அதிகம் பாதிப்புக்குள்ளாகும். அமிலமழை கால்சியத்தையும் கரைக்கும் வல்லமையுடையது. அதனால், மண்ணிலிருந்து கால்சியம் நீக்கப்படுவதால் குளிர்ப்பகுதிக் காடுகளிலுள்ள மரங்கள் குளிருக்குத் தாக்குப்பிடிக்கும் திறனை இழந்து இறக்கின்றன அல்லது நோய்வாய்ப்படுகின்றன. நீர்நிலைகளும் பெருத்த பாதிப்பைச் சந்திக்கின்றன. ஏற்கெனவே பார்த்தபடி அது மண்ணில் கலந்துள்ள அலுமினியத்தின் மீது வினை புரிவதால் நீர்நிலைகளில், அலுமினிய அயனிகளின் செறிவை அதிகரிக்கின்றன. அது நீர்வாழ் உயிரினங்களைப் பாதிக்கிறது. குறிப்பாக நீரின் அமில-கார சமநிலை மதிப்பு ஐந்துக்கும் கீழே குறைந்தால் சில வகை மீன்களின் முட்டைகள் பொரிவதில்லை. சில வகை மீன்கள் இறக்கின்றன என்பது கண்டறியப்பட்டுள்ளது. மார்பிள் (சலவைக்கல்) என்பவை கால்சியம் கார்பனேட்டால் ஆனவை. கால்சியத்தைக் கரைக்கும் அமிலமழையால் சலவைக்கல்லால் ஆன கட்டிடங்கள், சிலைகள் ஆகியவை சேதமுறுகின்றன. தாஜ்மகால் போன்ற அரிய நினைவுச் சின்னங்களுக்கும் ஆபத்து நேரலாம். சலவைக்கல் மட்டுமன்றி உலோகங்களாலான பொருட்களும் அமில மழையால் சிதைவடைகின்றன.
அமிலம் தரும் வாடகை: நாம் பயன்படுத்தும் எரிபொருள்களில் உள்ள கந்தகத்தை நீக்குவது ஓர் எளிய தீர்வாக முன்வைக்கப்படுகிறது. ஒருவேளை கடும் முயற்சிகள் செய்து அமிலமழை பெய்வதை நிறுத்திவிட்டால் அப்போதாவது நிம்மதி கிடைத்துவிடுமா? “வாய்ப்பில்லை ராசா” என்கிறார் ரேச்சல் கார்சன். அவர் எழுதிய ‘மௌன வசந்தம்’ நூலில் பூச்சிக்கொல்லிகளின் தீமையைப் பேசுவதற்கு முன்பு அணுப் பிளவினால் ஏற்படும் தீமைகளைப் பற்றித்தான் முதலில் பேசியுள்ளார். அதில் அணுப் பிளவுகளினால் காற்றில் வெளியிடப்படும் ‘ஸ்ட்ரான்சியம் 90’ என்னும் தனிமம் அப்படியே காற்றோடு போவதில்லை. போன மச்சான் திரும்பி வந்தான் என்கிற கதையாக அது மீண்டும் புவிக்கு மழை வடிவில் திரும்பி வருகிறது’ என்கிறார் அவர். இந்த ஸ்ட்ரான்சியம் 90 தனிமம் செர்னோபில் அணு உலை விபத்தில் அதிகமாக வெளியான ஒரு கதிரியக்கத் தனிமமாகும். மழையின் வழி மண்ணுக்கு வரும் இத்தனிமம் மண்ணில் தங்கி அதில் பயிரிடப்படும் அரிசியிலும் கோதுமையிலும் நுழைகிறது. பிறகு அவற்றை உணவாக்கிக்கொள்ளும் மனிதருக்குள்ளும் நுழைகிறது. அங்கு எலும்பைக் கண்டதும் மகிழ்ச்சியோடு அதில் குடியேறுகிறது. அதற்கு ‘எலும்பு’தான் விருப்பமான வீடு. நாம் இறக்கும் வரை அங்கேயே வாடகைக் கொடுக்காமல் தங்கிக்கொள்கிறது. ஒருவேளை வாடகைத் தர விரும்பினாலும் அதைப் புற்றுநோயாகத் தருகிறது. யாருக்கு வேண்டும் அந்த வாடகை? இதற்காக மழையை வேண்டாம் என்று தடுக்கவா முடியும்? மழைதான் அமிலம் சொட்டும் மழையாக மாறிவிட்டது. கொஞ்சம் வெயிலிலாவது காயலாம் என்றால் அங்கேயாவது நிம்மதி இருக்கிறதா?
(அடுத்த வாரம்: இது என்ன தூசி!)
கட்டுரையாளர், சூழலியல் எழுத்தாளர்
vee.nakkeeran@gmail.com