இயற்கை 24X7 - 23: அமிலம் சொட்டும் மழையே!

இயற்கை 24X7 - 23: அமிலம் சொட்டும் மழையே!
Updated on
2 min read

பல வகைகளில் நாம் நீரை வீணாக்குகிறோம். இந்த உண்மை அரசாங்கத்துக்கு நன்றாகவே தெரியும். ஆனாலும், போதிய அக்கறையைச் செலுத்துவதில்லை. குறிப்பாக, தொழிற்துறையை விட வேளாண்மையில் நீர் அதிகமாகச் செலவாகிறது என்பது நீண்டகாலக் குற்றச்சாட்டு. நம் நிலத்தடி நீர்வளத்தில் 90% வேளாண்மைக்கே செலவாகிறது. அதேவேளை, நாம் போட்டியாளராகக் கருதும் சீனா வேளாண்மைக்கு வெறும் 54% மட்டுமே நீரைச் செலவழிக்கிறது. நாம் வேளாண்மைக்குப் பயன் படுத்தும் 90 சதவீதம் நீரில் ஏறக்குறைய 80 சதவீதம் நீர் கரும்பு, கோதுமை, அரிசி ஆகிய மூன்று பணப்பயிர்களுக்கே செலவா கிறது. சரி, பணப்பயிரில் இருந்தாவது நமக்குப் பணம் கிடைக்கிறதே எனலாம். ஆனால், அதிலும் ஒரு சிக்கல் இருக்கிறது.

நம் வேளாண்மை முறையில் ஒரு கனமீட்டர் நீருக்கு மூன்று அமெரிக்க டாலர் மட்டுமே வருமான மாகப் பெறுகிறோம். அதேவேளை, சீனா எட்டு டாலரை வருமானமாகப் பெறுகிறது. போலி தேசபக்திக்காகக் காட்டும் சீன எதிர்ப்பை, இதில் காட்டலாம் அல்லவா?

தப்பிப்போமா? - அரசுக்கு எப்போதும் புரிந்த மொழி ஜிடிபி மொழிதான். அந்த மொழியிலேயே ஒரு தகவலைப் பார்ப்போம். 2050க்குள் இந்திய ஒன்றியத்தின் நீர்ப் பற்றாக்குறை அளவு 0.5 விழுக்காடு இருக்கும் என்பது மதிப்பீடு. அப்போது நமது வரவுசெலவில் 920 கோடி டாலர் துண்டு விழலாம் என்று எச்சரிக்கிறது நபார்டு வங்கி. அப்போது நம் நகரங்களுக்கு ‘டே ஜீரோ’ வராது என்பதற்கு என்ன உறுதி?

நாசமாகப் போன பிறகுதான் நமக்குச் சில நகரங் களின் பெயர்களே தெரிய வந்தன. செர்னோபில், ஃபுகுசிமா, போபால் போன்ற நகரங்களை வேறு எப்படி நமக்குத் தெரியும்? அதுபோன்று நமது நகரங்களுள் ஒன்று இந்த ‘டே ஜீரோ’ பட்டியலில் இருக்கக் கூடாது என்பதே தற்போது சூழலியலாளர்களின் கவலை.

நம்மூரில் அமில மழை: “உலகம் இயங்குவதே வான் மழையால்தான். அதனால், மழையை ‘அமிழ்தம்’ எனலாம்” என்கிறார் திருவள்ளுவர். இப்படித்தான் பல நூற்றாண்டுகளுக்கு முன்பு வாழ்ந்தவர்கள் எதையாவது அவர்கள் காலத்தைய உண்மையை எழுதி வைத்துவிட்டுச் சென்றுவிடுகின்றனர். கேட்கும் நமக்குத்தான் வயிற்றெரிச்சலாக இருக்கிறது. வள்ளுவரின் பேச்சை நம்பி தற்காலத்தின் மழையை அமிழ்தம் என்று நினைத்து வாய் பிளந்து நின்றால் ‘அமிழ்தம்’ கொட்டாது, ‘அமிலம்’தான் சொட்டும்.

நாகூர் அருகே நிலக்கரி இறக்குமதி செய்யும் தனியார் துறைமுகம் ஒன்று இருக்கிறது. அதன் கரித்துகள் எப்போதும் காற்றில் கலந்துகொண்டி ருப்பதால் நீண்ட நாட்கள் கழித்துப் பெய்யும் முதல் மழை சற்று கருமை நிறம் கலந்து பெய்யும். உள்ளூர்க் காரர்கள் முன்னெச்சரிக்கையுடன் அதில் நனையாமல் ஓடி ஒளிந்துவிடுவர். ஆனால், விவரம் தெரியாத வெளியூர்க்காரர்களின் சட்டைக் கறைபடிந்துவிடும் என்று வேடிக்கையாகப் பேசி சிரிப்பர். அங்கு அமிலமழை பாதிப்பு இன்றும் இருக்கிறது.

நழுவி வந்த ஆலைகள்: தூய்மையான நீர் எனில் அதன் pH மதிப்பு (அமில-காரச் சமநிலை) 7.0 என்றிருக்க வேண்டும். அதற்குக் குறைவாக இருந்தால் அது அமிலம். அந்த அமிலத்தன்மை நிறைந்த மழையைத்தான் நாம் அமிலமழை என்கிறோம். அந்தக் காலத்தில் பெய்யாத அமில மழை இன்று மட்டும் பெய்வது ஏன்? தொழிற்புரட்சி யுகமே இதற்குத் தொடக்கம் எனலாம். அப்போது தொழிற்சாலைகளின் புகைபோக்கி சிறியதாக இருக்கும். அதனால், சிக்கலும் உள்ளூர் அளவிலேயே சிறியதாக இருந்தது.

நாளடைவில் புகைப்போக்கிகள் உயரமானதும் சுற்றுச்சூழல் பாதிப்பும் அதிகரித்துவிட்டது. அவை அமிலமழைக்கு முதன்மைக் காரணமாயின. அதிலிருந்து வெளியாகும் அமிலப் புகைகளுள் கந்தக டை ஆக்சைடு, நைட்ரஸ் ஆக்சைடு போன்றவை முதலிடம் வகித்தன. குறிப்பாகக் கந்தக டை ஆக்சைடு பெருத்த பாதிப்பை உருவாக்கியது. அதை உணர்ந்ததும் வளர்ந்த நாடுகளில் வலுவான எதிர்ப்புகள் உருவாகின. அதனால், அந்த ஆலைகள் ஓசையின்றி மூன்றாம் உலக நாடுகளை நோக்கி நழுவி, அந்நாட்டு மக்களின் மூச்சுடன் விளையாடத் தொடங்கி விட்டன. எடுத்துக்காட்டு: தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை.

(அடுத்த வாரம்: மனிதருக்குள்ளும் நுழையும்)

கட்டுரையாளர், சூழலியல் எழுத்தாளர்

தொடர்புக்கு: vee.nakkeeran@gmail.com

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in