

தென்னாப்பிரிக்காவில் ‘கேப் டவுன்’ என்று ஒரு நகரம் இருக்கிறது என்று சமூகவியல் ஆசிரியர் சொல்லிக்கொடுத்தபோது நாம் கொட்டாவிவிட்டிருப்போம். ஆனால், கடந்த 2018 ஏப்ரல் 12ஆம் தேதி அந்நகரின் ‘டே ஜீரோ’ (Day Zero) என்று அறிவிக்கப்பட்டதும், உடனே அது உலகப் புகழ்பெற்றது.
‘டே ஜீரோ’ என்றால், அன்று முதல் கேப் டவுன் நகரக் குழாய்களில் தண்ணீர் வராது என்பது பொருள். கேப் டவுன் நகர மக்களுக்கு இனி குடிப்பதற்கு நீர் கிடைக்காது என்கிற செய்தியைக் கேட்டதும் உலகமே சற்று பதற்றமடைந்தது. கேப் டவுனுக்குதானே தண்ணீர் கிடைக்காது, அதற்கு உலகம் ஏன் பதற்றமாக வேண்டும் என்று கேட்கலாம். அதற்குக் காரணம் இருந்தது. கேப் டவுனைத் தொடர்ந்து உலகின் பல நகரங்கள் ஏன், நம் பெங்களூரு உட்பட ‘டே ஜீரோ’ பட்டியலில் இணையக் காத்திருக்கின்றன. அதனால்தான் அந்தப் பதற்றம்.
இயற்கையின் கருணை: கேப் டவுன் நகருக்கு ‘டே ஜீரோ’ ஏற்படும் என்று 1990ஆம் ஆண்டே தண்ணீர் ஆராய்ச்சி ஆணையம் எச்சரிக்கை விடுத்திருந்தது. ஆனால், அது 2007இல் ஏற்படும் என்று எச்சரித்திருந்தது. அவ்வாறு நிகழவில்லை என்பதால் அந்நகரவாசிகள், ஆட்சியாளர்கள் சற்று அசட்டையாக இருந்தனர். இயற்கை அதைச் சற்று ஒத்திப்போட்டு 2018ஆம் ஆண்டு என்றதும் மீண்டும் பதற்றமடைந்தனர்.
நமக்குத் தண்ணீர் தாராளமாகக் கிடைக்கும்போது இந்த ஹைட்ரஜனும் ஆக்சிஜனும் சேர்ந்தாலென்ன பிரிந்தாலென்ன என்று வாழ்வோம். ஒரு வறட்சியோ வெள்ளமோ வந்துவிட்டால் உடனே கழுதைக்குக் கல்யாணம் பண்ணி வைத்தாவது இரண்டு ஹைரட்ஜன் அணுக்களோடு ஓர் ஆக்சிஜன் அணு சேர வேண்டும் என்று துடியாய்த் துடிப்போம். இம்முறையும் மனம் அப்படித் துடித்ததினாலோ என்னவோ, இயற்கை கேப் டவுனைக் கைவிடவில்லை.
குறிப்பிட்ட அந்தத் தேதிக்கு முன்னரே போதுமான மழையைப் பொழிந்து கேப் டவுனைக் காப்பாற்றியது இயற்கை. ஆனால், எப்போதும் அப்படிக் காப்பாற்றுமா என்பது தெரியாது. காலநிலை மாற்ற நெருக்கடியின் காரணமாக, எங்கு எப்போது எந்த அளவுக்கு மழை பெய்யும் என்பதை எவராலும் கூற முடியவில்லை. அந்த அளவுக்குப் புவியின் நீர்ச்சுழற்சி வளையம் சீர்கெட்டுவிட்டது.
சராசரி எனும் கட்டுக்கதை: நீர்ப் பற்றாக்குறை ஏற்படுவதற்குப் போதுமான நீர் இல்லை என்பது மட்டுமே காரணமாக இருக்க முடியாது. முறையான பயன்பாடு இல்லாமையும், நியாயமான பங்கீடு இல்லாமையும் ஒரு காரணமாகும். மனிதக்குலம் முழுமையும் பயன்படுத்தும் நீரில் வீட்டுப் பயன்பாட்டு நீரின் சராசரி அளவு 1-3%. அதே வேளை சராசரி என்பது ஒரு கட்டுக்கதையே.
எடுத்துக்காட்டாக, ஓர் அமெரிக்கர் நாளொன்றுக்கு 375 லிட்டர் நீரைப் பயன்படுத்துகிறார். அதேசமயம் கேப் டவுன் மக்களுக்கு நாளொன்றுக்கு ஐம்பது லிட்டர் நீரே கிடைத்தது. இதுவும் சராசரிக் கணக்கே. கிடைக்கும் நீரில் யாருக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது என்பதுதான் கேள்வி. இயற்கை இலவசமாக வழங்கும் நீருக்கு விலை வைப்பதன் காரணமாக ஏழை எளிய மக்களே எப்போதும் முதல் பலியாகிறார்கள்.
மறைநீர் ஏற்றுமதி: நீர்ப் பற்றாக்குறைக்குப் பின்னே செயற்கையான அரசியல் பொருளாதாரக் காரணங்கள் ஒளிந்துள்ளன. எடுத்துக்காட்டாக, ‘மறைநீர்’ கணக்கு. சான்றாக, கேப் டவுன் நகரையே எடுத்துக்கொள்வோம். அந்நகரிலிருந்து 2016இல் ஏறத்தாழ 43 கோடி லிட்டர் ஒயின் ஏற்றுமதியானது. ஒரு லிட்டர் ஒயினின் மறைநீர் அளவு திராட்சை விளையும் இடத்தைப் பொறுத்து 800-1,600 லிட்டர் ஆகும். தோராயமாக 1,000 லி. என்று வைத்துக்கொண்டாலும் அந்த ஆண்டில் மட்டும் கேப்டவுன் நகரம் 43,000 கோடி லிட்டர் நீரை இழந்தது.
ஓர் ஆரஞ்சுப் பழத்தின் மறைநீர் அளவு ஏறத்தாழ 80 லிட்டர். 2017இல் மேற்கு கேப் டவுன் மாநிலத்தில் 2,31,000 டன் ஆரஞ்சுப் பழங்கள் ஏற்றுமதியாகின. அதன் மறைநீர் அளவு 11,500 கோடி லிட்டர். சொந்த நகரத்துக்குத் தண்ணீர் இல்லாதபோது மறைநீர் ஏற்றுமதியைக் கட்டுப்படுத்தி இருந்தால் அந்நகரம் ‘டே ஜீரோ’ நெருக்கடிக்கு ஆளாகியிருக்காது.
மக்கள் தொகை காரணமா? - நீர் தட்டுப்பாட்டுக்கு மறைநீர் கணக்கைப் பற்றிக் கூறினால் உடனே மக்கள்தொகை கணக்கை எடுத்துக்கொண்டு சிலர் வருகின்றனர். நம் துணைக்கண்டத்தில் மக்கள்தொகை மிகுந்திருப்பதும் ஒரு காரணம் என்கின்றனர். சரி, அப்படியே வைத்துக்கொள்வோம். அப்படியானால், நம்மைவிட அதிக மக்கள்தொகை கொண்ட சீனாவில் நன்னீர் பயன்பாடு நம்மைக் காட்டிலும் 28% குறைவாகவே இருக்கிறதே அது எப்படி? இக்கேள்விக்கும் பதில் சொல்ல வேண்டும் அல்லவா?
(அடுத்த வாரம்: அமிலம் சொட்டும் மழையே!)
கட்டுரையாளர், சூழலியல் எழுத்தாளர் தொடர்புக்கு: vee.nakkeeran@gmail.com