

கடற்கரையிலிருந்து நெடுஞ் சாலைக்கு வந்தால், ஒரு மணல் லாரி விரைகிறது. லாரியில் இருக்கும் ஈரமணலில் இருந்து தண்ணீர் சொட்டுகிறது. அவ்வாறு ஒரு லாரியில் இருந்து சொட்டும் நீரின் அளவு ஆயிரம் லிட்டர் என்கிறது ஒரு கணக்கீடு. ஒரு லாரி மணலில் இவ்வளவு நீர் இருந்தால், மொத்த ஆற்று மணலும் எவ்வளவு நீரைத் தேக்கிவைத்திருக்கும்? கற்பனை செய்து பாருங்கள்.
நீரைப் பற்றி நிறையச் சொல்ல முடியும். என்னுடைய ‘நீர் எழுத்து’ எனும் நூலில் அனைத்தையும் விரிவாக எழுதிவிட்டதால், இங்குச் சுருக்கமான அறிமுகத்தோடு நிறுத்திக்கொள்கிறேன். இன்றைக்கு நீர் மாசுபட்டுள்ளது என்பதை அறிவோம். நீர் மாசு எப்போது தொடங்கியது? ‘மௌன வசந்தம்’ நூலை எழுதிய ரேச்சல் கார்சன் கூறுகிறார்: “இயற்கை உருவாக்காத புதுப்புது பொருட்களை வேதியியலாளர்கள் கண்டுபிடிக்கத் தொடங்கிய நாளிலிருந்தே நீர் மாசு தொடங்கியது.”
உலகம் தோன்றியது தொடங்கி இன்றுவரையுள்ள மொத்த நீரில் ஒரு சொட்டுகூட அதிகரிக்கவும் இல்லை குறையவும் இல்லை. இன்றும் அதேயளவு நீர்தான் உள்ளது. இதென்ன புதுக்கதை? அப்படியானால் இவ்வளவு தண்ணீர்த் தட்டுப்பாடு ஏன் என்று கேட்கலாம்.
நீர்ப் பற்றாக்குறைக்குக் காரணம்
உலகிலுள்ள நீரை மூன்று வகையாகப் பிரிப்பர். 1. பச்சை நீர் 2. நீல நீர் 3. சாம்பல் நீர். இவற்றுள் பச்சை நீர் என்பது வளிமண்டலத்தில் முகில்களில் நிறைந்துள்ள நீர். நீல நீர் என்பது நீர்நிலைகளிலும், நிலத்தடியிலும் உள்ள நீர். பச்சை நீரும் நீல நீரும் மட்டுமே இருந்தபோது நீர்த் தட்டுப்பாடு இல்லை. சாம்பல் நீர் தோன்றிய பிறகே சிக்கல் தொடங்கியது.
சாம்பல் நீர் என்பது கழிவு நீர். ஆலைகள் மற்றும் நகர்ப்புற கழிவுகள் நன்னீரில் கலந்ததால் அது நன்னீர் நிலைகளைப் பாதித்தது. அதாவது நீல நீர், சாம்பல் நீராக மாறியது. அதன் விளைவே, இன்றைய நீர்ப் பற்றாக்குறை. எடுத்துக்காட்டாக, ஒரு லிட்டர் குரூடாயில் எனப்படும் கச்சா எண்ணெய் தவறி ஒரு குளத்தில் கொட்டிவிட்டால், அது 1,58,000 லிட்டர் நீரை வீணாக்கிவிடும் என்கிறார்கள். அப்படியானால் மொத்த ஆலைகளும் நகரங்களின் கழிவுநீரும் எவ்வளவு சாம்பல் நீரை உருவாக்கியிருக்கும்? பின் ஏன் நீர்ப்பற்றாக்குறை நிலவாது?
இந்தியத் தட்டுப்பாடு
இந்திய ஒன்றியத்தில் 60 கோடி பேருக்குத் தண்ணீர்த் தட்டுப்பாடு நிலவுகிறது. மாசுபட்ட ஆறுகளின் எண்ணிக்கைப் பெருகியுள்ளது. 650 நகரங்கள் அவற்றின் கரைகளில்தான் உள்ளன. ஆண்டுக்கு இரண்டு லட்சம் பேர் தூய்மையான நீர் கிடைக்காத காரணத்தால் இறக்கின்றனர். 2016இல் வெளியான ஓர் ஆய்வின்படி உலகின் 400 கோடி பேருக்கு ஆண்டில் ஒரு மாதமாவது தண்ணீர்ப் பற்றாக்குறை நிலவுவதாக நேஷனல் ஜியாகிரபிக் இதழ் தெரிவிக்கின்றது. இன்னும் 200 கோடி பேர் நீர்ப் பற்றாக்குறைப் பகுதிகளில் வாழ்ந்துவருகின்றனர்.
இவ்வளவு மோசமான நிலையிலும் நீரை உறிஞ்சும் வேகம் மட்டும் குறையவில்லை. உலகின் நிலத்தடி நீர்நிலைகளில் மூன்றிலொரு பங்கு அபாய நிலையில் உள்ளன. தமிழ்நாட்டின் நீர்வளமும் சொல்லிக்கொள்ளும் வகையில் இல்லை. நமது பொறியியலாளர்களும் புவியியலாளர்களும் ஏற்கனவே அதைக் கணக்கிட்டுள்ளனர்.
நாம் எங்கிருக்கிறோம்?
தமிழ்நாட்டின் நிலப்பரப்பினுள் மழைநீர் நிலத்துக்குள் ஊடுருவும் திறன் (Water Transmissivity Rate) அவ்வாறு கணக்கிடப்பட்டுள்ளது. ஒட்டுமொத்த தமிழகத்தின் நிலப்பரப்பில் வெறும் 27 விழுக்காடு அளவுக்கு மட்டுமே அது நிகழ்கிறது. அப்பகுதியும் ஆற்றுப்படுகைகளில் மட்டுமே அமைந்துள்ளது. ஆற்றிலும் மணல் இல்லாமையால் போதுமான அளவில் தண்ணீர் ஊடுருவுவது குறைந்துவிட்டது. விளைவாக, வெள்ள நீரும் நிலத்துக்குள் ஊடுருவாமல் விரைந்து கடந்துவிடுகிறது.
மீதமுள்ள 73% நிலப்பரப்பில் நீர் ஊடுருவும் திறன் குறைவாக இருப்பதற்கு அங்குப் பலவிதப் பாறை அமைப்புகள் இருப்பதே காரணம். கோவை, தர்மபுரி, மதுரை போன்ற மாவட்டங்களில் கடினப் பாறைகள் அதிகமாக உள்ளதால் நீர் ஊடுருவல் குறைவாகவே உள்ளது. அதுவே காஞ்சிபுரம், வேலூர், திருச்சி, சிவகங்கை, ராமநாதபுரம் (ஒரு பகுதி) ஆகியவற்றில் பாறைகள் இளக்கமாக இருப்பதால் நீர் சற்றுக் கூடுதலாக ஊடுருவுகிறது. எனவே, தமிழகத்தின் நிலத்தடி நீர்வளம் காக்கப்பட வேண்டியது அவசியம். சுருக்கமாகச் சொன்னால் இனிமேல், ‘காக்கக் காக்க நீர்வளம் காக்க’ என மாற்றிப் பாட வேண்டும்.
(அடுத்த வாரம்: நீரில்லாத நாள்)
கட்டுரையாளர், சூழலியல் எழுத்தாளர்
தொடர்புக்கு: vee.nakkeeran@gmail.com