பூச்சி சூழ் உலகு 06: உதவத் துடித்த வண்ணத்துப்பூச்சிகள்

பூச்சி சூழ் உலகு 06: உதவத் துடித்த வண்ணத்துப்பூச்சிகள்
Updated on
1 min read

2009-ம் ஆண்டு மழைக் காலம். மைசூரு அருகிலுள்ள பந்திபூர் தேசியப் பூங்காவுக்கு (Bandipur National Park) சென்றுவிட்டுத் திரும்பும் வழியில் பெங்களூருவில் உள்ள வண்ணத்துப்பூச்சி பூங்காவுக்கு நண்பர்களுடன் சென்றிருந்தேன். அங்கே வண்ணத்துப்பூச்சிகளைக் கவர்வதற்காகவும் இனப்பெருக்கத்துக்காகவும் பல வகையான பூச்செடிகள் வளர்க்கப்பட்டிருந்தன. பூக்களில் உள்ள தேனுக்குப் போட்டி போடுபவை, பெண்ணைக் கவர நடனமாடுபவை, இனப்பெருக்கத்தில் ஈடுபடும் இணைகள், வாழ்விடப் போட்டியில் சில வகைகள் என வண்ணத்துப்பூச்சிகளின் உலகத்தில் விழுந்து நான் திளைத்துக் கொண்டிருந்தேன்.

இப்படி வண்ணத்துப் பூச்சிகளின் வாழ்விடத்தை ரசித்துக்கொண்டு இருந்தபோது, ‘எலுமிச்சை அழகி’ வகை ஒன்று தரையில் இருந்தது. ஒளிப்படக்கருவியை Tripod-ல் பொருத்தாமல், கைகளில் தாங்கி ஒளிப்படம் எடுக்க அதை நெருங்கியபோது, அதன் இறகு அடிபட்டிருப்பதைக் காண முடிந்தது. இந்த வண்ணத்துப்பூச்சி வகையின் புழு வில்வம், கறிவேப்பிலை போன்ற தாவரங்களை உண்டு கூடமைத்தாலும் எலுமிச்சை, நாரத்தை, சாத்துக்குடி போன்ற தாவர இலைகளைத் தின்று, இந்தத் தாவரங்களில் கூடமைப்பதே அதிகம். அதன் காரணமாகவே இதற்கு ‘எலுமிச்சை அழகி’ என்ற பெயர் வந்தது.

காயம்பட்ட இறகோடு இருந்த எலுமிச்சை அழகியை ஒளிப்படம் எடுத்த அடுத்த சில நிமிடங்களில், அதனருகில் மற்றொரு எலுமிச்சை அழகி வந்து அருகே அமர்ந்தது. அதையும் சேர்த்து ஒளிப்படம் எடுத்த சில நிமிடங்களில், இறகுகளை அடித்தபடி அது பறந்து செல்ல, சற்று இடைவெளிவிட்டு வேறு மூன்று எலுமிச்சை அழகிகள், அடிபட்ட வண்ணத்துப்பூச்சியின் அருகில் வந்துவிட்டுச் சென்றன. இதற்கான அறிவியல் விளக்கம் புரியாமல் தொடர்ச்சியாக அவற்றைப் பதிவு செய்தேன். இன்றுவரை அவை அப்படிச் செய்ததற்கான விளக்கத்தைக் கண்டறிய முடியவில்லை.

- கட்டுரையாளர், காட்டுயிர் ஒளிப்படக் கலைஞர்
தொடர்புக்கு: shanmugam.wildlife@gmail.com

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in