

எட்டு அல்லது ஒன்பது ஆண்டுகளுக்கு முன்பு என்று நினைக்கிறேன். சட்டக் கல்லூரியில் படித்துக்கொண்டிருந்த என்னுடைய நண்பர் இளங்கோவிடம் இருந்து அவசரத் தொலைபேசி அழைப்பு வந்தது. தன்னுடைய வீட்டில் ஒரு வித்தியாசமான வண்ணத்துப்பூச்சியொன்றைப் பார்த்திருப்பதாகவும், உடனே வந்தால் அதைப் பார்க்கலாம் என்றும் கூப்பிட்டார். உடனே கேமராவுடன் அவருடைய வீட்டுக்குப் போனேன். அவரது வீட்டின் பின்புறம் உள்ள சிறு தோட்டத்தில் இருந்த கறிவேப்பிலைச் செடியில், இலையின் கீழ்ப்பக்கம் திருப்பிக் காண்பித்தார். வெளிச்சத்தைத் தவிர்க்க நினைத்த 'அந்திப்பூச்சி'யொன்று மீண்டும் இலையின் கீழ்ப்பகுதிக்குச் சென்றது. பார்ப்பதற்கு வண்ணத்துப் பூச்சியைப் போன்று தோற்றமளித்தாலும், அது ஒரு அந்திப்பூச்சியே.
நண்பர் இலையைத் திருப்ப, சில நிமிடங்களில் அதை முழுமையாகப் பார்த்ததுடன், ஒளிப்படங்களையும் எடுத்துக்கொண்டேன். வெளிர் இளம் பச்சை நிறத்தில் காணப்பட்ட அந்திப்பூச்சியின் உணர்கொம்பு பின்னோக்கி, உடலின் கீழ்ப்பகுதிவரை நீண்டிருந்தது. இறகுகளின் கீழ்ப்பகுதியில் வெள்ளை நிற மென்மயிர்கள் அடர்ந்திருந்தன. பச்சை நிற உருண்ட கண்களும், சற்றுக் கூர்மையான முக அமைப்பையும் கொண்டிருந்தது. கால்களில் மணிகளைக் கோத்ததுபோல் தோற்றமளித்தது. இவற்றையெல்லாம்விட வியப்பை ஏற்படுத்தியது, அதன் உடலின் பின்பகுதியில் இருந்த தூரிகை போன்ற வித்தியாசமான அமைப்புதான்.
கறுப்பும் அடர் பழுப்பு நிறமும் கலந்த முடிக்கற்றைகள் நிறைந்து, ஓவியர்களின் தூரிகையை அது நினைவுபடுத்தியது. அந்திப்பூச்சிகளை மாலை, இரவு நேரங்களில் நீங்களும் பார்த்திருக்கலாம். ஆனால், அவற்றிலேயே முற்றிலும் மாறுபட்டிருந்தது இந்த அந்திப்பூச்சி. அதன் காரணமாகவே காலம் பல கடந்தாலும், தூரிகை அந்திப்பூச்சி நினைவடுக்குகளிலிருந்து அகல மறுக்கிறது.
- கட்டுரையாளர், காட்டுயிர் ஒளிப்படக் கலைஞர்
தொடர்புக்கு: shanmugam.wildlife@gmail.com