

பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பு, எங்கள் வீட்டுக் கட்டுமானப் பணிக்காக ஆற்று மணல் கொட்டப்பட்டிருந்தது. கட்டுமானப் பணி முடிந்த பிறகு, மிச்சமிருந்த மணல் ஒரு மூலையில் குவிக்கப்பட்டிருந்தது. அப்போது காலை மாலை நேரத்தில் வீட்டிலுள்ள செடி கொடிகளில் பூச்சிகள் ஏதாவது தென்படுகின்றனவா என்று தேடிப் பார்ப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தேன். ஒரு சந்தர்ப்பத்தில் ஆற்று மணல் குவிக்கப்பட்டிருந்த பகுதியில் குளவியொன்று பறந்தபடி இருந்ததைக் கண்டு, சற்று நேரம் பொறுமையாக உட்கார்ந்து
பார்த்தேன். ஆற்று மணலில் தனக்கான கூட்டை அமைத்து, தொடர்ச்சியாக அது இரையைக் கொண்டு வருவதைச் சிறிது நேரத்தில் உணர முடிந்தது. அடுத்த மூன்று, நான்கு நாட்களுக்குக் காலை மாலை என இரு வேளையும் மணல் திட்டு எனக்கான இடமாக மாறியிருந்தது.
பளபளக்கும் மஞ்சள் நிற உடலில் அமைந்திருந்த கறுப்புப் பட்டைகள், மணல் குளவிக்குக் கூடுதல் அழகைக் கொடுத்தது. கறுப்பு நிறச் சிறிய உணர்கொம்புகளையும், இரையைப் பிடிப்பதற்கேற்ற மெல்லிய முள்முடிகளுடனான கால்களையும் மணல் குளவி கொண்டிருந்தது.
கூட்டின் அருகே அது இரையைக் கொண்டு வரும்போது, சற்று நிதானமாகப் பறப்பதும், மற்ற நேரத்தில் வேகமாகப் பறந்து கொண்டிருப்பதையும் உணர முடிந்தது. ஆற்று மணலைக் கிளறி, கூட்டுக்குள் சென்று
இரையை வைத்துவிட்டு, திரும்பும்போது பின் கால்களால் மணலைத் தள்ளிக் கூட்டை அது மூடிவிட்டுச் செல்லும் நுட்பத்தைப் பார்த்து வியந்தேன். அதுபோலவே, அதைக் கவனித்த நான்கு நாட்களும் ‘வீட்டு ஈ’யைத் தவிர, வேறு எந்தவொரு பூச்சியையும் அது இரையாகப் பிடித்து வராததும் வியப்பளித்தது.
- கட்டுரையாளர், காட்டுயிர் ஒளிப்படக் கலைஞர்
தொடர்புக்கு: shanmugam.wildlife@gmail.com