

என்னுடைய காட்டுப் பயணங்களில் பறவைகள், பாலூட்டிகள், ஊர்வன வகைகள் குட்டிகளோடு இருப்பதைப் பலமுறை பதிவு செய்துள்ளேன். ஆனால், பூச்சியொன்று முட்டைகளுடன் இருப்பதை முதலில் பார்த்தது பெரும் ஆச்சரியமளித்தது. பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பு எங்கள் வீட்டின் சிறிய தோட்டத்தில் இருந்த சீத்தா மரத்தின் இலையில்தான், அந்த விநோதப் பூச்சியைப் பார்த்தேன்.
மதிய உணவு சாப்பிடுவதற்காக அலுவலகத்தில் இருந்து வீடு திரும்பிய பின், கை கால் கழுவிக் கொண்டிருந்த நேரத்தில் பார்வை செடிகளிடையே சென்றது. சற்று வளர்ந்திருந்த சீத்தா மரத்தின் இலையொன்றில், இலைப் பச்சைப் பூச்சியொன்று தனது முட்டைகளுடன் இருந்த காட்சியைக் கண்டபோது, பார்வையை விலக்கச் சற்று நேரமானது. அந்தக் காலத்தில் பூச்சிகளைப் படம் எடுப்பதற்கான சிறப்புக் கருவிகளான மேக்ரோ லென்ஸ் போன்றவை ஏதுமில்லாத நிலையில், என்னுடைய ஒளிப்படக் கருவியில் (Nikon D70s) பொருத்த வாய்ப்புள்ள சிறப்புக் கருவிகளுக்கு இணையான உபகரணங்களை (Coping Lens and Flash) பயன்படுத்திச் சில நல்ல படங்களை எடுத்தேன்.
இலைப்பச்சைப் பூச்சியின் முட்டைகள் மழைநீரில் அடித்துச் செல்லப்படாமல் இருப்பதற்கேற்ற வகையில், பசை கொண்டு ஒட்டப்பட்டதுபோல இலையில் முட்டைகள் அழுத்தமாகப் பதிந்திருந்தன. ஒருவாரக் கால இடைவெளியில் முட்டைகளில் இருந்து இளம்பூச்சிகள் வெளிவருவதைப் படம் எடுப்பதற்கு முயற்சித்தும், அந்தப் படங்கள் சரியான கோணத்தில் அமையாமல் போயின. ஆனால், பறவைகள், பேருயிர்களை படம் எடுத்தால் கிடைக்கும் மகிழ்ச்சியை 'இலைபச்சைப் பூச்சி முட்டையோடு இருக்கும் இந்தக் காட்சி’ அளித்தது என்பது நிச்சயம் மிகையல்ல.
- கட்டுரையாளர், காட்டுயிர் ஒளிப்படக் கலைஞர்
தொடர்புக்கு: shanmugam.wildlife@gmail.com