

மணல் கொள்ளையால் பாதிக்கப்படுவது தண்ணீர் மட்டுமல்ல. கன்னியாகுமரி சென்ற வர்கள் அங்கு ‘கலர்மணல்’ பொட்டலங்கள் விற்பதைப் பார்த்திருக்கலாம்.
சிவப்பு, செங்காவி, கறுப்பு போன்ற பல நிறங்களில் காணப்படும் கடற்கரை மணல், சுற்றுலாப் பயணிகளுக்கு ஒரு நினைவுப்பொருளாக ஐந்துக்கும் பத்துக்கும் விற்பனை செய்யப்படுகின்றது. அதே வண்ண மணலின் விற்பனை மறுபுறம் கோடிகளில் நடைபெறுவது நிறையப் பேருக்குத் தெரியாது.
கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களின் கடற்கரை மணல் பல நிறங்களில் காணப்படுகிறது. அவை வெறுமனே வண்ண மணல் அல்ல. அவ்வளவும் அருங்கனிமங்கள் நிறைந்த மணல். அவையே பல்வேறுபட்ட நிறங்களுக்குக் காரணம். அதில் ஸிர்கோனியம், ரூட்டைல், இல்மனைட், லியூகோஸீன், கார்னெட் போன்ற கனிமத் தாதுக்கள் கலந்துள்ளன.
அருங்கனிமம்
கார்னெட் மணலில் ‘மோனோ சைட்’ உள்ளது. அதுவொரு அணுவாற்றல் அருங்கனிமம் (Atomic mineral). ஆயிரம் டன் கார்னெட்டில் 4% மோனோசைட் உள்ளதாகக் கூறப்படுகிறது. மோனோ சைட்டை தனிமனிதர் வைத்திருக்க முடியாது.
அது சட்டவிரோதம். அணு உலை எரிபொருளாகப் பயன்படும் தோரியம், மோனோசைட்டில் இருந்தே பிரிக்கப்படுகிறது என்பதே அதற்குக் காரணம். மோனோசைட் கதிர்வீச்சு அபாயமிக்கக் கனிமம். அதனால்தான், உலகில் இயற்கைக் கதிர்வீச்சு அபாயமிக்க ஐந்து இடங்களில் ஒன்றாகக் குமரி மாவட்டம் உள்ளது.
பெருமணல் உலகில் தண்ணீர் இருந்தாலே காலிச் செய்திடும் பெருந்தொழில் நிறுவனங்கள், கனிமம் இருந்தால் சும்மா விடுமா? அவற்றைப் பிரித்தெடுக்கும் ஆலைகள் அங்குச் சட்டப்பூர்வமாகவும் கள்ளத்தனமாகவும் இயங்கி அப்பெருமணல் உலகைச் சிதைத்துள்ளன. மணலைத் தோண்ட மாபெரும் ஆழ்துளை உறிஞ்சுக் கருவிகள் (Suction dredge / Float dredge) பயன்படுத்தப்பட்டன. அங்கு, நாற்பது முதல் அறுபது அடி ஆழம் வரையிலும் மணல் உறிஞ்சப்பட்டது. கடல் விளிம்பு வரை மணல் தோண்டப்பட்டுள்ளது.
அழிவின் கரங்கள்
கடற்கரையில் இரண்டு ஏக்கர் நிலம் தேவைப்பட்டால் நிறுவனங்கள் ஒரு ஏக்கர் வாங்கினாலே போதும். அந்த ஒரு ஏக்கரில் உறிஞ்சிகளை வைத்து மணலை உறிஞ்சுகையில் மீதியுள்ள ஒரு ஏக்கர் மணலும் அப்படியே கீழே குழிக்குள் சரிந்து உறிஞ்சப்பட்டுவிடும்.
அதனால், பல சதுர கிலோமீட்டர் அளவில் அமைந்துள்ள குடியிருப்புப் பகுதிகளில் நிலத்தாழ்வு (Land subsidence) ஏற்பட்டுக் குடியிருப்புக் கட்டிடங்களுக்கு ஆயுள் சேதம் ஏற்பட்டுள்ளது.
அலைவாய்க் கரையிலிருந்து 200 மீட்டர் விலகியே மணலை எடுக்க வேண்டும். ஓரடி ஆழத்துக்கு மேல் குழி எடுக்கக் கூடாது என்றெல்லாம் விதிகள் இருக்கின்றனவே எனச் சிலர் கேட்கலாம்.
அவையெல்லாம் கடலில் கரைக்கப்பட்டு வெகு நாட்களாகிவிட்டன. கார்னெட் மணல் கொள்ளையின் சூழலியல் விளைவுகளைப் பற்றி ஒரு புவியியல் அறிஞரைவிட நுட்பமாக ஒரு படிக்காத மீனவர் குறிப்பிடுவதைப் பற்றி அறிஞர் ஆ.சிவசுப்பிரமணியன் எழுதியிருக்கிறார்.
“அலைகள் கரையில் மோதி மணலை இழுத்துப் போவது வழக்கம். ஆனால், கார்னெட் கலந்துள்ள மணல் என்றால், அப்படி இழுத்துப் போகும் மணலின் அளவு குறைவாக இருக்கும். ஆலைகள் கார்னெட் மணலை எடுத்து அதைப் பிரித்ததும், மீதி மணலை அதே குழியிலிட்டு நிரப்பவேண்டும். அப்படி நிரப்பினால் பாதியளவாவது குழிகள் நிரம்ப வேண்டும். ஆனால், பல இடங்களில், குழிகள் இரண்டு ஆள் உயரத்திற்கு ஆழமாக உள்ளன.
அலைகளின் சீற்றம் அதிகமாக இருக்கும் அமாவாசை, பௌர்ணமி நேரத்தில் வரும் அலைகள் அக்குழிகளுள் நிரம்பித் திரும்புகையில் கார்னெட் நீக்கப்பட்ட மணலை முன்பைவிட அதிக அளவில் கடலுக்குள் இழுத்துச் செல்கிறது. அம்மணல், கடலின் சேற்றுப் பகுதியில் மீன்கள் இட்டு வைத்துள்ள முட்டைகளை மூடிவிடுகிறது. அதனால் மீன் இனப்பெருக்கம் இல்லாமல் போகிறது.”
விடை தெரியா கேள்விகள்
அருங்கனிம மணல் கொள்ளையால் கடல் ஆமைகள் முட்டையிடும் பகுதிகளும் பாதிக்கப்படுவதாக ஒரு சூழலியல் ஆர்வலர் உணர்ச்சிப் பொங்க என்னிடம் கூறினார். நான் சொன்னேன் “அவர்கள் மனித முட்டைகள் பற்றியே (புற்றுநோயால் மானுடம் பாதிக்கப்படுவது) கவலைப்படவில்லை. இதில் மீன் முட்டையாவது? ஆமை முட்டையாவது?”
கிடைக்கும் பணமூட்டைகளை எங்கே பாதுகாப்பாக முதலீடு செய்வது என்பதைப் பற்றி மட்டுமே கவலைப்படுபவர்கள் சூழலியல் பாதுகாப்பைப் பற்றி ஏன் கவலைப்படப் போகிறார்கள்? அது மட்டுமன்றி, அணுவாற்றல் அருங்கனிமங்களை அரசாங்கம் எடுத்தால் புரிந்துகொள்ள முடிகிறது. ஆனால், தனியார் நிறுவனங்கள் அதை வைத்து என்ன செய்யும்? அவை எங்குச் செல்கின்றன? என்னவாகின்றன? இவை இன்றுவரை விடைத் தெரியாத கேள்விகள்.
(அடுத்த வாரம்: மணல் – இயற்கை மருத்துவர்)
கட்டுரையாளர், சூழலியல் எழுத்தாளர்
தொடர்புக்கு: vee.nakkeeran@gmail.com