

எவ்வளவு நேரம்தான் கடலில் நனைவது? சற்றே கரையேறுவோம். கரையில் மீன் வாங்கக் குவிந்துகிடக்கும் மக்கள் கூட்டம். மீன் என்பது ஏழைகளின் புரதம். இங்கு அவரவர் வருமானத்துக்கு ஏற்றவாறு இன்னும் மீன் கிடைப்பது நல்வாய்ப்பே. அதற்கு நம்முடைய கடல் வெப்பமண்டலப் பகுதியில் அமைந்துள்ளதும் ஒரு காரணம்.
இங்கு மீன்கள் வேகமாக வளரும். நிறைய முட்டைகளை இடும். கடல் மீன்களில் மூன்றில் இரண்டு பகுதி முட்டையிடுவதற்குக் கடலோரமே வருகின்றன. அதற்கேற்ப நம் கடலும் ஆற்றுப்பொழிகள் (கழிமுகம்), காயல்கள், பவளத்தீவுகள், அலையாத்திக்காடுகள் போன்ற அமைப்புகளைக் கொண்டுள்ளன.
இவற்றை மீன்களின் தொட்டில்கள் எனலாம். ஆறுகள் கொணரும் நன்னீரில் ஊட்டச்சத்துக்கள் மிகுந்திருப்பதால், அவை மீன்களின் வளர்ச்சிக்குப் பெருமளவில் உதவுகின்றன.
வெப்பமண்டலப் பகுதியில் அமைந்துள்ள அனைத்து நாடுகளிலும் இவ்வளவு மீன்வளம் கிடையாது. எடுத்துக்காட்டாக, பிற நாடுகளைக் காட்டிலும் அதிகக் கடற்கரையைக் கொண்ட ஆஸ்திரேலியா, மீன்பிடித் தொழில் நாடுகளின் பட்டியலில் முதல் ஐம்பதுக்குள் இல்லை.
கடல் உணவை இறக்குமதி செய்யும் நாடாகவும் அது இருக்கிறது. அதன் நிலத்தைப் போலவே கடலும் (கிரேட் பாரியர் ரீஃப் பவளத்திட்டு இருந்தும்) போதுமான விளைச்சலற்று இருப்பதே காரணம்.
அதனால் பல பணக்கார நாடுகளின் மீன்பிடிக்கும் கப்பல்கள் கடலில் திருட்டு வேட்டைக்காக அலைகின்றன. நம் கடலுக்குள்ளும் அவை சட்டவிரோதமாக மீன்பிடிக்கின்றன. 8,129 கி.மீ நீளம் கொண்ட நம் கடற்பகுதியில், 20 கோடி சதுர கிலோமீட்டர் பகுதி நமக்கென்று தனியுரிமை (Exclusive Economic Zone) கொண்ட பகுதியாகும்.
இங்கு நாம் மட்டுமே மீன் பிடிக்கலாம். ஆனால், அயல்நாட்டுக் கப்பல்கள் இங்கு மீன்களைத் திருடுகின்றன. தைவான் நாட்டுக் கப்பலொன்றில் சூரை மீன் ஆய்வுக்குச் சென்ற நம் அறிவியலாளர் ஒருவர் குடிநீர் என்று எழுதப்பட்ட தொட்டியில் எல்லாம் மீன்கள் நிரம்பியிருந்ததைக் கண்டதாக எழுதியிருக்கிறார் கடல் உயிரியல் பேராசிரியர் எஸ்.லாசரஸ்.
கச்சாப்பொருளும் பேரழிவும்
கடல்வாழ் உயிரினங்களின் இனப்பெருக்க வேகத்தைக் காட்டிலும் இரண்டரை மடங்கு அதிவேகத்தில் நவீன மீன்பிடித் தொழில் இயங்குகிறது. மீன்கள் மக்களின் வயிற்றை மட்டும் நிரப்பியவரைச் சிக்கல் ஏதுமில்லை. ஆனால், அது பங்குச் சந்தையை நிரப்பத் தொடங்கியதும் சிக்கல் தொடங்கிவிட்டது. இன்று மீன் என்பது மக்களின் உணவுப் பொருளாக அல்லாது தொழிற்சாலைகளின் கச்சாப்பொருளாக மாறிவிட்டது.
நம் கடலில் நிறைந்துள்ள அயோடின் சத்துள்ள இறால் வகைகள் அயல் நாடுகளின் உணவு மேசைக்கு விரைகின்றன. இறால்களைப் பிடிக்கையில் அவற்றுடன் பிடிபடும் மற்ற மீன்கள் தேவையற்ற குப்பையாகக் கருதப்பட்டு மீண்டும் கடலில் சடலமாகக் கொட்டப்படுகின்றன. ஒவ்வொரு கிலோ இறாலுக்காக நான்கு கிலோ மீன்கள் அவ்வாறு கொட்டப்படுகின்றன. வணிக மதிப்புள்ள பிற வகை மீன்களைப் பிடிக்கவும், ஆண்டுக்கு 2.2 கோடி டன் பிற வகை மீன்கள் அழிக்கப்படுகின்றன. நவீனத் தொழில்முறை மீன்பிடிப்பினால் உலக மீன்வளத்தில் 13% குறைந்துவிட்டது என்பது ஒரு பழைய புள்ளிவிவரம்.
1950களோடு ஒப்பிடுகையில் 2016இல் வணிக மதிப்புள்ள நீலத்துடுப்பு சூரை மீன்களின் எண்ணிக்கை ஐம்பதுக்கு ஒன்று என்ற அளவில் வீழ்ந்துவிட்டது. அம்மீன் அமெரிக்காவில் கிலோ முப்பதாயிரம் ரூபாய்க்கு விற்கப்படுவதும், அதன் உலகளாவிய சந்தை மதிப்பு 1200 கோடி டாலராக உயர்ந்ததுமே காரணம் என்கிறார் கடல்சார் ஆராய்ச்சியாளர் நாராயணி சுப்ரமணியன்.
சீல்களின் கொலை
மற்றொரு கொடிய எடுத்துக்காட்டு சீல் (கடல்நாய்) வேட்டை. கனடாவில் மட்டும் ஆண்டுக்கு மூன்று லட்சம் சீல்கள் வேட்டையாடப்படுகின்றன. உணவுக்காக அல்லாது, அவற்றின் தோலுக்காகவே இது நடக்கிறது.
தோலுரிக்கப்பட்ட சீல்களின் உடல்கள் அங்கேயே கைவிடப்படுவதால், பனிப்பாளங்களின்மீது செந்நிற குருதிப் படரப் போர்க்களம் போலக் காட்சியளிக்கிறது. அந்தத் தோல் என்னவாகிறது? நம் பார்வையை அப்படியே ஃபேஷன் ஷோக்களின் பக்கம் திருப்புவோம்.
ஃபேஷன் ஷோ தெரியும்தானே? கண்கள் ஒரே திசையில் வெறித்திருக்க, இயந்திரம்போல வெடுக்வெடுக்கென்று கவர்ச்சி பண்டமாகப் பெண்களை உருமாற்றி நடக்க வைப்பார்களே அதே ஃபேஷன் ஷோதான். அப்பெண்கள் அணியும் ஓர் ஆடை வகையாக உருமாறியுள்ளது சீலின் தோல். நிறுவனங்களின் வணிகம் இங்கே ஒய்யாரமாக நடப்பதற்காக, அங்கே பனிப்பாளங்களின்மீது தம் துடுப்புக் கால்களால் துழாவி நடக்கும் சீல்களின் ஒய்யார நடை மறைந்துவருவது எவ்வளவு துயரம்.
(அடுத்த வாரம்: பெருமணல் உலகம்)
கட்டுரையாளர், சூழலியல் எழுத்தாளர்
தொடர்புக்கு: vee.nakkeeran@gmail.com