

ஒருமுறை ‘மாசு சூழ்ந்த உலகம்’ எனும் நூலைப் படிக்கையில், அதிலிருந்த ஒரு வரியைப் படித்ததும் திடுக்கிட்டேன். ‘நீங்கள் இந்தப் பக்கத்தைப் படித்து முடிப்ப தற்குள் ஏறத்தாழ இரண்டாயிரம் லிட்டர் பெட்ரோலியம் கடலில் கலந்திருக்கும்.’ இத்தனைக்கும் அது 1984ஆம் ஆண்டில் வெளிவந்த நூல்.
எண்ணெய்க் கப்பல்கள் கொண்டு செல்லும் எண்ணெய்யில் ஆயிரத்திலொரு பங்கு எண்ணெய் கடலில் கலந்த காலம் அது. இந்திய நாட்டைச் சுற்றியுள்ள கடலில் மட்டும் ஏறத்தாழ பத்து லட்சம் டன் எண்ணெய் அவ்வாறு கலந்துகொண்டிருந்தது.
இயற்கைக் கடலடியிலிருந்து நமக்கு எவ்வளவு பெட்ரோலியம் வழங்குகிறதோ அதே அளவு மாசுப் பொருட்களை நாம் கடலுக்குக் கொடுக்கிறோம் என்பது ஒருபுறமிருக்க, இன்று அதன் துணைப்பொருட்களுள் ஒன்றான ஞெகிழிதான் மாபெரும் சிக்கல்.
சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் பலருமே நிலத்தின் மேல் காட்டும் அக்கறையில் பகுதியளவுகூடக் கடலின் மேல் காட்டுவதில்லை. மலை, காடு, வயல், ஊர் என்று நிலத்தின் அனைத்துப் பகுதியிலும் நாம் கொட்டும் கழிவுகள் இறுதியில் கடலில்தான் சென்றுசேருகின்றன என்பதை மறந்து விடுகிறோம். வீடு கட்டும்போது மறவாது செப்டிக் டாங்கும் சேர்த்துக் கட்டுகிற நாம், உலகின் கழிவுகளைக் கொட்ட எந்தவொரு செப்டிக் டாங்கையும் இன்னும் கட்டவில்லை. அதுதான் இயற்கை அளித்த கடல் இருக்கிறதே!
வீட்டுக்குள் நுழையும் எமன்
அனைத்து விதமான கழிவுகளையும் கடலில்தான் கொட்டு கிறோம். அவற்றுள் முதன்மையானவை ஞெகிழிக் கழிவுகள். கொலம்பஸ் புதிய தீவுகளைக் கண்டறிந்தார் என்பார்கள். நாமோ பல புதிய தீவுகளை உருவாக்கிவருகிறோம்.
நாம் உருவாக்கிய ஞெகிழிக் கழிவுகள் மொத்தமாகக் குவிந்து ஐம்பெரும் தீவுகளாகப் பெருங்கடல்களில் மிதந்து கொண்டிருக்கின்றன. பசிபிக், அட்லாண்டிக் கடலில் மட்டும் மிதந்த அத்தீவுகள் தற்போது இந்தியப் பெருங் கடலிலும் எட்டிப் பார்க்கத் தொடங்கியுள்ளன.
‘ஸ்ட்ரா’வால் மூக்குக் குத்தப்பட்ட ஆமையின் படத்தையும், மீன் முட்டைகள் என்று ஞெகிழித் துகள்களைத் தன் குஞ்சுகளோடு தின்று இறந்துபோகும் ‘அல்பட்ராஸ்’ எனும் கடற்பறவையின் படத்தையும் சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருத்தக்குறிகளை அள்ளுவதற்கு மேல் எதுவும் செய்ய முடிவதில்லை. அந்த அளவுக்குக் கடலில் ஞெகிழித் துகள்கள் குவிந்துள்ளன.
உலகின் எந்தப் பகுதிக் கடலிலிருந்தும் ஒரு கைப்பிடி கடல் மண் அல்லது ஒரு கோப்பை கடல் நீர் எடுக்கப்பட்டாலும் அதில் நுண் ஞெகிழித் துகள்கள் கலந்திருக்கின்றன. லிட்டருக்கு 14,000 துகள்கள் உள்ளன என்கிறது ஒரு கணக்கு. அவை ஒவ்வொரு பத்தாண்டுகளுக்கு ஒருமுறை இரட்டிப்பாகின்றன. ஆர்டிக் வரை காணப்படும் இவை, இன்று நம் அடுப்படியிலும் நுழைந்துவிட்டன.
சைவம், அசைவம்
பெல்ஜியம் கெண்ட் (Ghent) பல்கலைக்கழக அறிவியலாளர்கள் “மீன் உணவு உண்பவர்கள் ஆண்டுக்கு 11,000 ஞெகிழித் துகள்களை உண்கின்றனர்” என்று கூறி அதிரவைக்கின்றனர். உடனே, சைவ உணவுக்காரர்கள் மகிழ்ச்சியில் துள்ள வேண்டாம். ஞெகிழிக்குச் சைவம், அசைவம் எல்லாம் புரியாது.
சைவ உணவில் ஞெகிழி எப்படி என்பவர்களுக்கு ஒரு கேள்வி. உப்புப் போட்டு உண்கிறீர்கள் அல்லவா? திட்டவில்லை, இது கேள்விதான். அக்கேள்விக்கான பதில் இதுதான். உப்பின் வழியாகவும் ஞெகிழித் துகள்கள் நம் குடலுக்குள் செல்கின்றன என்கின்றனர் ஆய்வாளர்கள்.
அத்தனையும் நானோ துகள்கள். வெறும் கண்ணுக்குத் தெரியாது. நுண்ணோக்கியில் மட்டுமே தெரியும் நானோ ஞெகிழித் துகள்கள் நம் உடல் செல்லின் சுவருக்குள்ளும் நுழையும் வாய்ப்புள்ளவை எனக் கூறி அச்சுறுத்துகிறது நேஷனல் ஜியாகிரபிக் இதழ். அந்தளவுக்குப் பாதுகாப்பற்றதாக மாறியுள்ளது கடல்.
உலகின் நிலப்பகுதியில் 12% பகுதியைப் பாதுகாக்கப்பட்ட பகுதியாக நாம் அறிவித்து வைத்துள்ளோம். ஆனால், கடலில் வெறும் ஒரு சதவீதப் பகுதி மட்டுமே அவ்வாறு அறிவிக்கப்பட்டுள்ளது. எஞ்சியவை மோசமாக மாசுபட்டுள்ளன என்பதில் சந்தேகமில்லை. நாம் என்ன கெடுதல் செய்தாலும் கடல் பதிலுக்கு எதுவும் செய்யாது என்கிற அசட்டு நம்பிக்கைதான் காரணமா?
கடலடிக் கண்டத் திட்டுக்கள் கொஞ்சம் புரண்டு படுத்தால் மட்டுமே, நமக்குக் கடலின் நினைவு வருகிறது. அப்போது ஏற்படும் ‘நிலநடுக்கம்’, ‘ஆழிப்பேரலை’ போன்ற ஆபத்துகள் வந்தால் மட்டுமே அலறுகிறோம். நம் உடலுக்கு உப்பையும் ஏன் உயிரையுமே தரும் கடலுக்கு நம் உள்ளத்திலும் சிறிது இடம் கொடுக்கலாமே!
(அடுத்த வாரம்: மீன் என்பது இனி உணவல்ல)
கட்டுரையாளர், சூழலியல் எழுத்தாளர்
தொடர்புக்கு: vee.nakkeeran@gmail.com