

உயிர்வளி (ஆக்சிஜன்) என்றதும் நமக்குக் காடுகள்தான் நினைவுக்கு வரும். ஏனெனில், நம் சிந்தனை வாழும் நிலம் சார்ந்தே கட்டமைக்கப்பட்டிருக்கிறது.
அதனால்தான், ‘உலகின் நுரையீரல் எது?’ என்று கேட்டால் உடனே ‘அமேசான்’ அல்லது ‘மழைக்காடுகள்’ என்கிறோம். ஆனால், முழு உலகையும் மூச்சு மண்டலத்தோடு ஒப்பிட்டால் மழைக்காடுகளை மூக்கு அல்லது மூச்சுக்குழல் என்கிற அளவுக்கே கூற முடியும்.
உயிர்வளியை வழங்கு வதில் மழைக்காடுகளின் பங்கு மூன்றிலொரு பாகமே. அதாவது ஏறக்குறைய 28% என்கிறது நேஷனல் ஜியாகிரபிக் இதழ். 2% உயிர்வளி இதர மூலங்களிடமிருந்து பெறப்படும் நிலையில், மீதியுள்ள 70% உயிர்வளியை நமக்கு அளிப்பது கடல்தான் என்கிறது அவ்விதழ். சதவீத அளவு முன்னே பின்னே இருக்கலாம். ஆனால், மொத்த உயிர்வளியில் பாதிக்கு மேல் கடல்தான் வழங்குகிறது என்பதில் மாற்றுக் கருத்தில்லை.
உயிர்மூச்சுக்குப் பொறுப்பு
கடல் குறித்த முழு உண்மையும் அறிந்தவர் எவருமில்லை. பெருங்கடலைப் பற்றி நமக்கு வெறும் ஐந்து சதவீதமே தெரியும் என்கிறது அறிவியல். சும்மா பேச்சுக்கு வேண்டுமானால், ‘கடலைவிடப் பெண் மனது ஆழமானது’ என்று கதையளக்கலாம். ஆனால், உலகின் ஆழமான கடல் பகுதியான மரியானா பள்ளத்தில் என்ன இருக்கிறது என்பதை அறிய அங்கு அடிக்கடி சென்று திரும்பக்கூடிய நீர்மூழ்கி நம்மிடம் இல்லை என்கிறார் அறிஞர் பில் பிரைசன்.
கடலையே அறியாத நிலையில், கண்ணுக்குத் தெரியாத கடல் நுண்ணுயிர்கள் பற்றி என்ன சொல்ல? நுண்ணுயிரிகளில் ‘மிதவிகள்’ (Plankton) என்பவை மிக முதன்மையானவை. அவற்றுள் இரண்டு வகைகள் உள்ளன.
ஒன்று, தாவரமிதவிகள் (Phytoplankton), மற்றொன்று, உயிரினமிதவிகள் (Zooplankton). இவற்றில் தாவரமிதவிகள் உணவுச்சங்கிலியின் அடித்தளமாக உள்ளன. அதாவது, முதன்மை உணவு மூலங்கள். இவைதான் நம் உயிர் மூச்சுக்கும் பொறுப்பேற்றுள்ளன.
அவை மற்ற கடல் தாவரங்களுடன் இணைந்து உயிர்வளியை உற்பத்தி செய்கின்றன. அதிலும் புரோகுளோரோகாக்கஸ் என்ற தாவரமிதவி குறிப்பிடத்தக்கது. ஒரு துளி கடல்நீரில் அவை கோடிக்கணக்கில் உள்ளன.
அவையே எண்ணற்ற டன் அளவில் உயிர்வளியை உற்பத்திசெய்கின்றன. ‘நாம் விடும் ஐந்து மூச்சுகளுள் ஒரு மூச்சு இந்தப் புரோகுளோரோகாக்கஸ் மிதவிகளே வழங்குகின்றன’ என்கிறார் நேஷனல் ஜியாகிரபிக் ஆய்வாளரான முனைவர் சில்வியா ஏர்ல்.
இத்தகைய மிதவிகளையே நாம் அழித்துவருகிறோம். தாவர மிதவிகளின் எண்ணிக்கை கடந்த ஐம்பது ஆண்டுகளில் வேகமாகச் சரிந்துவருகிறது என்கிறார் சூழலியல் ஆய்வாளர் பெல்லாமி பாஸ்டர். ஆக, நம் மூச்சுக்காற்றை நாமே அழித்துக்கொள்கிறோம். புவியின் வெப்பம் 90% அளவுக்குக் கடலில் குவிக்கப்பட்டுக் கடல் வெப்பமாவதே இதற்கு முதன்மை காரணம்.
செத்த மண்டலங்கள்
சூழலியலாளர்களின் இக்குற்றச்சாட்டை மறுக்கும் பொருளியல் ஆதரவாளர்கள் உள்ளனர். உலகின் நூற்றுக்கணக்கான இடங்களில் வேதியியல் கழிவுகள் கடலில் கலப்பதால் தாவர மிதவிகளின் எண்ணிக்கை பெருமளவில் அதிகரிக்கின்றன என்பது அவர்களது வாதம். அது பகுதியளவே உண்மை. புத்தகத்தின் அட்டைப்படத்தைப் பார்த்து உள்ளடக்கத்தைக் கணிப்பதைப் போன்றதே அது.
ஆறுகளின் வழியாகக் கடலில் கலக்கும் வேதிக் கழிவுகளில் நிறைந்துள்ள ஊட்டச்சத்தால் மிதவிகளின் எண்ணிக்கை அதிகரிக்கிறது என்பது உண்மையே. ஆனால், அதற்குப் பின் என்ன நிகழ்கிறது என்பதே கேள்வி.
அளவுக்கு மீறி அதிகரித்த அவை பெருந்திரளாக இறக்க நேருகையில், அவற்றின் திசுக்கள் அழுகி கடலின் கீழ்பகுதியில் தங்குவதால், கடலில் உயிர்வளியின் அளவைப் பெரிதும் குறைக்கின்றன. அது, ‘ஹைபோசிக் மண்டலம்’ அல்லது ‘குறைந்த உயிர்வளி மண்டலம்’ என்று நாகரிகமாக அழைக்கப்பட்டாலும், ‘செத்த மண்டலம்’ என்பதே பொருத்தமான சொல்.
அதைக் குறித்து அவர்கள் பேசமாட்டார்கள். செத்த மண்டலத்தில் பல மீன் வகைகள் வாழ முடியாது. அதற்கு மெக்சிகோ வளைகுடாவின் மிசிசிபி கழிமுகம் ஓர் எடுத்துக்காட்டு. உலகெங்கும் ஏறத்தாழ 500 செத்த மண்டலங்கள் உள்ளன.
பத்தாண்டுகளுக்கு ஒருமுறை அதன் பரப்பளவு இரண்டு மடங்காக அதிகரித்துவருகிறது. இன்று அவற்றின் மொத்தப் பரப்பளவு 2,45,000 ச.கி.மீ. இது நம் உயிர்மூச்சுக்கு நாமே தோண்டும் சவக்குழி.
கடல் இல்லையேல் நாம் இல்லை என்பதை அடுத்த தலைமுறைக்குக் கற்றுக்கொடுக்க வேண்டும். அதைத்தான், சில்வியா ஏர்ல் இன்னும் தெளிவாகச் சொல்கிறார்: ‘நீலம் இல்லையேல் பச்சை இல்லை’.
(அடுத்த வாரம்: உலகின் மாபெரும் கழிவுத் தொட்டி)
கட்டுரையாளர், சூழலியல் எழுத்தாளர்
தொடர்புக்கு: vee.nakkeeran@gmail.com