

நிலவொளியில் நனையாத காதலர்கள் கிடையாது. ‘ஒரே நாள்… உனை நான் நிலாவில் பார்த்தது…’ எனப் பாடும் காதலர்களை அழைத்துச்சென்று, ‘வா, எந்த இடத்தில் பார்த்தாய் சொல்?’ என்று நிலவில் விட்டுவிட வேண்டும். செல்லும் நேரம் பகலென்றால் வெப்பம் 123 பாகை செல்சியசாக இருக்கும். நாம் நாற்பது செல்சியசுக்கே அலறுகிறோம். அதுவே இரவென்றால் 233 பாகை செல்சியஸ் குளிரில் உறைந்து போவோம்.
நிலவும் புவியும் ஞாயிறில் இருந்து ஏறக்குறைய சம தொலைவில் உள்ளன. இருந்தும் புவியின் நிழலுக்கும் நிலவின் நிழலுக்கும் வேறுபாடு உண்டு. நிலவில் எங்கோவொரு குகை இருப்பதாக வைத்துக்கொள்வோம். பகலில் வெப்பம் அதிகமாக உள்ளது என்று அதில் ஒளிந்துகொண்டால் அக்குகையில் -35 பாகை செல்சியஸ் அளவுக்குக் குளிர் நிலவும் என்கிறார் அறிவியல் எழுத்தாளர் என்.ராமதுரை.
பாதுகாப்புக் கவசம்
நம் புவிக்கோளத்தின் கதையோ இதற்கு நேர் எதிர். புவியில் வெயிலுக்கும் நிழலுக்கும் இடையே வெறும் 2 பாகை செல்சியஸ் அளவே வேறுபாடிருக்கும். வீட்டுக்கு வெளியே 34 பாகை செல்சியஸ் வெப்பம் நிலவினால், வீட்டுக்குள்ளே 32 பாகை செல்சியஸ் வெப்பமே நிலவும். அதற்குக் காரணம் புவியின் வளிமண்டலம்.
ஒட்டுமொத்தமாக, 5,200 லட்சம் டன் காற்று நம்மைச் சுற்றிலும் உள்ளது. கோளின் ஒவ்வொரு சதுர மைலுக்கும் அது 2.5 கோடி டன்னாக உள்ளது. இது புவியின் போர்வை. இப்போர்வை 4.5 மீட்டர் கனம் கொண்ட ஒரு கான்கிரீட் சுவருக்கு இணை யானது. கதிரொளியின் வெப்பம் புவிக்கோளுக்குள் முழுமையாக நுழைய அனுமதிக்காமல் தடுக்கும் எல்லைக்காவல் படையே வளிமண்டலம்.
பகலில் வெப்பத்தைக் கட்டுப்படுத்தும் அதேவேளையில் இரவில் புவியைச் சற்று சூடாகவே வைத்திருக்கிறது வளிமண்டலம். அத்தகைய கட்டுப்பாட்டு அமைப்பு இல்லாவிட்டால் புவி உருண்டை உறைநிலையில் வைத்த போண்டாவாக மாறியிருக்கும். அதாவது, –50 பாகை செல்சியசில் உயிர்களற்ற பனிக்கட்டி உருண்டையாக இருந்திருக்கும்.
எப்படிச் செயலாற்றுகிறது?
பனி உருண்டையாக மாறாமல் தடுக்கவே, வளிமண்டலத்தில் நைட்ரஜன் 78.09%, ஆக்சிஜன் 20.95%, ஆர்கன் 0.93%, கரிக்காற்று 0.0387%, இவற்றோடு நியான், ஹீலியம், மீத்தேன், கிரிப்டான், ஹைட்ரஜன், நைட்ரஸ் ஆக்சைடு, ஸெனான், ஓசோன், நைட்ரஸ் டயாக்சைடு, அயோடின், அமோனியா ஆகியவை குறைந்த அளவில் நீராவியுடன் கலந்துள்ளன.
இவற்றில் மிகுந்த அளவிலுள்ள உயிர்வளி என்றாலும், குறைந்த அளவிலுள்ள அமோனியா என்றாலும் அதனதன் பங்களிப்பைத் தவறாமல் வழங்குகின்றன. இதில் நேரும் சிறு விலகலும் உயிருக்குப் பேரழிவைத் தரும்.
புவிக்குத் தேவைப்படும் கச்சாப் பொருள்களைக் கொடுக்கும் வள்ளலே வளிமண்டலம். கொடுப்பது மட்டுமன்றி தனக்குத் தேவையான பொருள்களைப் புவியிலிருந்து எடுத்தும் கொள்கிறது. இந்தக் கொடுக்கல்-வாங்கலை நெடுங்காலம் அறிவியலாளர்களே உணரவில்லை.
சான்றாக, கடலை எடுத்துக்கொள்வோம். கடல் அலைகளின் இயக்கம் என்பது இயற்பியல். அதிலுள்ள உப்பின் சுவை வேதியியல். அதில் வாழும் பாசிகள் உயிரியல். கடலுக்குள்ளேயே இப்பிரிவினை என்றால் வளிமண்டலமும் கடலும் தனித்தனியே பார்க்கப்பட்டதில் வியப்பில்லை.
எங்கெங்கும் உயிர்
புவிக்கோளம் எப்படி நிலையாகவும் குளிர்ச்சி யாகவும் இருக்கிறது என்கிற இயற்பியல், வேதியியல் ஆகிய காரணிகளுக்கு அப்பால் அதில் உயிரினங்களின் பங்கும் இருப்பது தாமதமாகவே தெரியவந்தது.
கல்கேரியஸ் ஆல்கே போன்ற கோடானுகோடி பாசிகள் வளிமண்டலத்திலிருந்து மழையில் கரைந்து வரும் கார்பனைப் பிடித்துவைத்து அவற்றைக் கரியமில வாயு வடிவில் கடலுக்குள் சேமித்துவைக்கின்றன.
இதை அறிந்த பின்னரே பாசிகளுக்கும் பருவநிலை மாற்றத்துக்கும் இடையே, அதியமான் - ஔவையார் போலத் தோழமை இருப்பது புரிந்தது. கார்பன்தான் வளிமண்டல அதியமான் வழங்கும் நெல்லிக்கனி.
வளிமண்டலம் உயிரற்றது போலத் தோன்றினாலும் அதுவொரு பறவையின் இறகைப் போன்றதே என்று கவித்துவமாகக் கூறுவார் ஜேம்ஸ் லவ்லாக். உயிர்க் கட்டுமானத்தின் இன்றியமையாத பகுதி அது.
இறகு இல்லாமல் பறவை இல்லை. பறவை என்பது உயிரே. வளி, கடல், நிலம் அனைத்துமே உயிர்மண்டலத்தின் கூறுகள். இவற்றைத் தனித்தனியே பார்த்தால் இறகைப் போல உயிரற்ற பொருள். ஒட்டுமொத்தமாகப் பார்த்தால் பறவை போலவே ஓர் உயிரினம்.
எனவே, புவிக்கு உயிருண்டு என்கிற கருத்து உலகில் மெல்ல எழத் தொடங்கியது. ‘புவி என்பதே ஒட்டுமொத்தமாக ஓர் உயிரினம்’ என்று ஜேம்ஸ் லவ்லாக் அறிவித்து, அதற்கு ‘கையா’ என்றும் பெயரிட்டார்.
புவி உண்மையிலேயே ஓர் உயிரினமா?
(அடுத்த வாரம்: புவி ஓர் உயிரினமா?)
கட்டுரையாளர், சூழலியல் எழுத்தாளர்
தொடர்புக்கு: vee.nakkeeran@gmail.com