

புவிக்கோளம் ஓர் உயிர்க்கோளம் என்று சொல்லிக்கொண்டே உயிரைப் பறித்துக் கொண்டிருக்கிறோம். புவியின் உயிரை அல்ல; நம் உயிரைத்தான். நமக்கு நாமே குழி தோண்டிக்கொள்வதில் நாம் வல்லவர்கள். நாம் தோண்டும் குழி ஒரு கிணறாக இருந்தவரை, அது நன்மை தருவதாக இருந்தது. அதுவே சுரங்கமாக மாறியபோது அது நம் சவக்குழியாகிவிட்டது.
புவியின் மையம் வரை ஒரு கிணறு தோண்டி அதில் ஒரு செங்கல்லைப் போட்டால் அது அடித்தளத்தைச் சென்றடைய 45 நிமிடங்கள் ஆகுமாம். பொதுவாகச் சுரங்கங்கள் 400 மீட்டருக்குக் கீழே செல்வதில்லை. ஆப்பிரிக்காவில் ஓரிரு தங்கச் சுரங்கங்கள் 3 கிலோமீட்டருக்கும் சற்று அதிகமாகச் சென்றுள்ளன. எனினும், புவியை ஒரு ஆப்பிளாகக் கொண்டால் நாம் அதன் தோலைக்கூடக் கீறவில்லை என்கிறார் பில் பிரைசன்.
புவியின் பெரும்பகுதி கடல் என்றாலும் உள்ளுக்குள் அதுவொரு நெருப்புக் கோளமே. இரும்பும் நிக்கலும் கலந்த நெருப்புப் பந்து ஒன்று கனன்றுகொண்டிருக்கிறது. நம் புவியின் மையம், கொஞ்ச நஞ்சமல்ல 50,000 பாகை செல்சியஸ் வெப்பத்தில் கொதித்துக் கொண்டிருக்கிறது. இது ஞாயிறின் மேற்பரப்புக்குச் சமமான வெப்பம்.
கீழே உள்ளுறை வெப்பம். மேலே ஞாயிறின் வெப்பம். இவ்விரு அடுப்பு களுக்கு இடையேதான் நாம் பக்குவமாகச் சமைக்கப்படுகிறோம். நம் வாழ்க்கை என்பது ஒரு சாண்ட்விச் வாழ்க்கை. 98.4 பாகை ஃபாரன்ஹீட் அல்லது 37 பாகை செல்சியஸ் வெப்பத்தில் பாதுகாக்கப்படும் நம் உடல், அதிக வெப்பத்தில் தீய்ந்துபோனாலோ வேகாமல் போனாலோ உயிர் செல்கள் உடைந்து அணுக்களாக அலைந்துகொண்டிருப்போம்.
நெருப்பு தந்த வாழ்க்கை
புவியின் உள்ளுறை மட்டுமல்ல அதன் மேலுறை என்பதும் 4500 – 5000 பாகை செல்சியஸ் கொதிநிலையில் உள்ள திரவத்தினால் ஆனதே. இந்நெருப்புக் குழம்பை மூடியிருக்கும் மேலோட்டின் மீதுதான் நாம் வாழ்க்கை நடத்துகிறோம். நாம் இதை மறந்துவிடக் கூடாது என்பதால்தான் இயற்கை அவ்வப்போது வெடிவெடித்து நமக்கு அதை நினைவுபடுத்திக் கொண்டே இருக்கிறது. அதை நாம் ‘எரிமலை வெடிப்பு’ என்கிறோம்.
ஆறரை கோடி ஆண்டுகளுக்கு முன்பு புவியின் மேற்பரப்புக் கிழிந்து வெள்ளமாய்ப் பீரிட்டுப் புறப்பட்ட எரிமலை பாறைக் குழம்பே இன்றைய தக்காண பீடபூமி. இன்று அப்படிப் பீரிட்டால் நாம் என்ன ஆவோம் என்று கற்பனை செய்து பாருங்கள்.
புவியின் உள்ளே எரிமலை கொதித்துக் கொண்டிருப்பது ஆபத்தில் லையா? இதுவா இயற்கையின் கருணை என்று கேள்வி எழுப்பினால், ஆம்! இதுதான் இயற்கையின் கருணை. எரிமலை இல்லையெனில் நாம் இங்கே இருந்திருக்கவே மாட்டோம். எரிமலைதான் புவி மேற்பரப்பில் தொடர்ச்சியாக மேடு பள்ளங்களை உருவாக்கியது. அந்த மேடுதான் நாம் வாழும் நிலமானது. இல்லையெனில் புவி முழுவதும் 4 கி.மீ. ஆழத்துக்கு நீரால் போர்த்தப்பட்டிருக்கும். புவியில் கடல் மீன்களும் மேலே விண்மீன்களும் மட்டுமே இங்கே வாழ்ந்திருக்கும்.
மேலும் அதுதான் வளிகளை வெளியே தள்ளி, நம்மைச் சூழ்ந்திருக்கும் வளிமண்டலத்தைக் கட்டமைக்க உதவியது. புவியின் மேலுறையில் கொதிநிலையில் உள்ள குழம்பே புவி உருண்டை யைச் சுற்றியுள்ள காந்தப் புலத்தை உருவாக்குகிறது. அந்தக் காந்தப்புலம் வானின் கதிர்வீச்சிலிருந்து நம்மைக் காப்பதோடு, புவிஈர்ப்பு விசைக்கும் பொறுப்பாக உள்ளது.
ஈர்ப்பு எனும் அற்புதம்
புவி சுழலுகையில் நிலநடுக்கோட்டுப் பகுதியில் அது மணிக்கு 1675 கி.மீ வேகத்தில் சுழன்றுகொண்டிருக்கிறது. அந்தப் பகுதியில் நாம் நின்றுகொண்டிருந்தால் மீண்டும் அதே இடத்தில் நம்மைக் கொண்டு வந்துவிட ஏறக்குறைய நாற்பதாயிரம் கிலோ மீட்டர் அது நம்மைச் சுமந்துசெல்ல வேண்டும். புவியின் சுழற்சி குறித்துச் சிறுவயதில் நாம் அறிந்தபோது எப்படி நழுவிக் கீழே விழாமல் இருக்கிறோம் என்று ஒவ்வொருவரும் வியந்திருப்போம். பிறகு, பாடத்தில் நியூட்டன் ஆப்பிளோடு வந்தபோது நமக்கு விடை தெரிந்தது.
புவிஈர்ப்பு விசை அறுந்துபோனால் நாம் என்ன ஆவோம்? இதை நாம் என்றைக்கும் நினைத்துப் பார்ப்பதே இல்லை. எல்லாவற்றுக்கும் கடவுள் இருக்கிறார் என்று சொல்லித் தப்பித்துக்கொள்கிறோம். அந்தக் கடவுள் யார்? அறிஞர் கார்ல் சாகன் இப்படிச் சொல்கிறார்: “இயற்பியல் விதிகள் என்னும் பொருளில், ‘கடவுள்’ எனும் சொல் பயன்படுத்தப்பட்டால், அப்படிப்பட்ட கடவுள் இருக்கிறார். அவர் – புவிஈர்ப்பு விசை.”
(அடுத்த வாரம்: வளிமண்டலம் எனும் வள்ளல்)
கட்டுரையாளர், சூழலியல் எழுத்தாளர்
தொடர்புக்கு: vee.nakkeeran@gmail.com