

விவசாயி என்றதும் பொதுவாக நம் மனத்துக் குள் தோன்றும் பிம்பத்துக்கு மாறாக இருக்கிறார் கோவி. அய்யாராசு. வெள்ளை வேட்டி, வெள்ளைச் சட்டை அணிந்தபடி வயதை மறைக்கும் வெள்ளைப்பூச் சிரிப்புடன் இருக்கும் அவர், இன்னும் அதிகமானோர் ஈடுபாடு காட்டாத இயற்கை விவசாயத்தில் சாதித்துவருகிறார்.
இயற்கை விவசாயத்தைத் தூக்கிப்பிடித்த வேளாண் அறிவியலாளர் கோ. நம்மாழ்வாரின் சித்தாந்தத்தின்படி விவசாயம் செய்கிறார் தஞ்சையைச் சேர்ந்த கோவி. அய்யாராசு (69). அவர் ஒரு விவசாயி மட்டுமல்ல; பழுத்த அரசியல்வாதியும்கூட. பாபநாசத்திற்கு அருகே திருக்கருகாவூரில் மே 7 அன்று நடந்த நம்மாழ்வார் சிலை திறப்பு விழாவில், பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவருக்கு ‘நம்மாழ்வார்’ விருதை வழங்கினார்.
அரசியலும் விவசாயமும்
நஞ்சையும் புஞ்சையும் கொஞ்சித் தவழும் தஞ்சை பூமியில் காவிரியும் அரசலாறும் பிரியும் இடத்தில் இருக்கிறது அவரது இல்லம். நீர்வளமும் மண்வளமும் நீர்த்துப்போகாத தென்சருக்கைக் கிராமத்தில் அவருடைய குடும்பம் பரம்பரைப் பரம்பரையாக வேளாண்மையில் ஈடுபட்டுவருகிறது. அய்யாராசுவே அந்தக் குடும்பத்தின் முதல் தலைமுறைப் பட்டதாரி.
1970-களில் கல்லூரிப் படிப்பின்போது அவருக்கு அரசியல் ஆர்வம் தொற்றிக்கொண்டது. எழுபதுகளில் பாபநாசத்தில் இருந்த பேரறிஞர் அண்ணா சிலை அகற்றப்பட்டபோது, அதைக் கண்டித்து கல்லூரி மாணவர் தலைவர் என்கிற முறையில் பல கல்லூரிகளில் அவர் உரையாற்றினார்; நாட்டில் நெருக்கடி நிலை பிரகடனப்படுத்தப்பட்ட அன்றைய இரவே கைது செய்யப்பட்டு திருச்சி சிறையில் அடைக்கப்பட்டார்.
1980களில் தொய்வற்ற அரசியல் நடவடிக்கைகளால் படிப்படியாக முன்னேறிய அவர் தற்போது தஞ்சை மாவட்டத்தில் முக்கிய அரசியல் பிரமுகர்களில் ஒருவராக இருக்கிறார். அரசியலில் ஓய்வின்றி இயங்கிவரும் சூழலிலும், குடும்பத்தின் பரம்பரைத் தொழிலான வேளாண்மையில் கடந்த பத்து ஆண்டுகளாக ஈடுபட்டுவருகிறார்.
நம்மாழ்வாரின் தாக்கம்
கபிஸ்தலத்தில் பெரியார் அறக்கட்டளை நடத்திய பொங்கல் விழாவில், நம்மாழ்வார் ஆற்றிய உரை அவரை இயற்கை வேளாண்மையை நோக்கி இட்டுச்சென்றது. அது குறித்த நினைவை அவர் பகிரும்போது ”ஆரம்பத்தில் தயக்கமும் அச்சமும் என்னைத் தடுத்தன. இருந்தபோதும் உறவினர்கள், நண்பர்கள், குறிப்பாக கர்நாடகத்தைச் சார்ந்த இரண்டு நண்பர்கள் கொடுத்த உற்சாகத்தில் இயற்கை விவசாயியாகக் களமிறங்கினேன்” என்று கூறுகிறார். விவசாயத்தில் மண்ணைக் காத்து வணிக நிறுவனங்களுக்கு இணையாக லாபம் கொழிக்கும் வண்ணம் வளர்த்தெடுக்க முடியும் என்று அவர் நம்புகிறார்; அதை செயல்படுத்தியும் காட்டியிருக்கிறார்.
அதற்கான வழிமுறைகளாக அவர் சுட்டிக்காட்டுபவை:
l வண்டல், கரிசல், செம்மண், சரளை மண், பாலை மண், மலை மண், உவர் மண், சதுப்புநில மண் என்று எந்த மண்ணாக இருந்தாலும், அவற்றிற்கு ஊட்டம் தரவேண்டும்.
l தொழு உரம், தாழைச் சத்து, மணிச் சத்து, சாம்பல் சத்து ஆகியவற்றின் மூலம் அந்த ஊட்டத்தை மண்ணுக்குத் தரமுடியும்.
l அப்போது மண் உயிர்மண்ணாக மாறி இயற்கை விவசாய நிலமாகவே மாறிவிடும்.
l மண்ணைக் காக்க மேலும் இயற்கைத் தாவர கரைசல்களான சிறியாநங்கை கசாயம், பஞ்சகவ்யம், ஆடாதோடை கசாயம், பூண்டுக் கசாயம், வேம்பு கசாயம், இஞ்சி, பச்சைமிளகாய்க் கரைசல், வசம்புக் கரைசல், உரமில்லாத பூச்சிவிரட்டி ஆகியவற்றையும் ஊட்ட வேண்டும்.
l தென்னைக்கு மண்புழு உரம், நார்க்கழிவு, மாட்டுச்சாணம் ஆகியவையே தாய்ப்பால்.
l இயற்கை வேளாண்மைக்கு இன்றியமையாதது நாட்டு மாடு.
ஹூகும்சந்த் அடைந்த வெற்றியே இலக்கு
வெளிநாட்டு விதைகளும், பூச்சிக்கொல்லிகளும், செயற்கை உரங்களும் நமது பாரம்பரிய வேளாண்மையை அழித்தன; இயற்கை விவசாயம் மேம்பட்டால்தான் மக்களுக்கு ஆரோக்கியமான உணவு கிடைக்கும்; விவசாயிகளின் வாழ்க்கைத்தரமும் உயரும் என்று ஆணித்தரமாக நம்பும் அய்யாராசு, ராஜஸ்தானின் புகழ்பெற்ற விவசாயி ஹூகும்சந்த் படிதாரை உதாரணம் காட்டுகிறார்.
தாய்நாட்டிலும் வெளிநாடுகளிலும் புகழ்பெறும் அளவுக்கு இயற்கை வேளாண்மையைப் பெரும் வணிக நிறுவனங்களுக்கு இணையாகக் கொண்டுசெல்ல முடியும் என்று நிரூபித்துக் காட்டியவர் ஹூகும்சந்த். நாற்பது வகையான காய்ந்த இலைகளைச் சேகரித்து, அவற்றில் ஜீவாமிர்தக் கரைசலைச் சேர்த்துக் கொதிக்கவைத்து, மண்புழுக்களைக் கலந்து, அத்துடன் வைக்கோலை மண்ணில் போட்டு மக்கச்செய்து இறுதியில் ஓர் இயற்கை உரத்தைத் தயாரித்து வெற்றிபெற்றவர் அவர். இயற்கை வேளாண்மை விளைபொருட்களை இணையவழி சந்தையின் மூலம் அமெரிக்கா, ஜப்பான், ஜெர்மனி உள்ளிட்ட 28 நாடுகளுக்கு அவர் ஏற்றுமதி செய்கிறார். 2018இல் பத்ம விருது பெற்ற அவர், ராஜஸ்தான் வேளாண்மைப் பல்கலைக்கழகங்களில் ஆலோசகராகவும், பாடத்திட்ட வடிவமைப்பாளராகவும் இருக்கிறார்.
ஹூகும்சந்த் அடைந்த வெற்றியே அய்யாராசுவின் இலக்கு. ஒருங்கிணைந்த பண்ணைச் சாகுபடி விவசாயத்தை முன்னெடுத்துச் சென்று ஆண்டு முழுக்க வருமானம் கொழிக்கச் செய்யும் தொழிலாக மாற்ற வேண்டும் என்பது அவருடைய லட்சியம். அந்தப் பாதையை நோக்கி உற்சாகமாக நடைபோட்டு வருகிறார் அய்யாராசு.
கட்டுரையாளர், பத்திரிகையாளர், மொழிபெயர்ப்பாளர்
தொடர்புக்கு. lakshmison62@gmail.com