

‘ஞாயிறு போற்றுதும்… ஞாயிறு போற்றுதும்…’ என்று கூறும் சிலப்பதிகாரம் தொடர்ந்து, ‘திங்களைப் போற்றுதும், மா மழை போற்றுதும்’ என இயற்கையைப் போற்று கிறது. இவ்வாறு போற்றுவதே அறிவியல் பார்வைதான். சோதிடம் புரிதலின்றிக் கூறுவதுபோல, ஞாயிறு என்பது ஒரு கோளல்ல. அதுவொரு விண்மீன் என்கிற அறிவியலை அறிவோம்.
15 கோடி கிலோமீட்டர் தொலைவில் நிலைத்து நின்று நம்மை வாழ வைக்கும் அந்த விண்மீனுக்கு முதல் வணக்கம். ஏனெனில், தனியே இருந்து சலித்துவிட்டது என்று பக்கத்திலுள்ள மற்றொரு விண்மீன் ‘பிராக்சிமா சென்டாரி’யை ஓர் எட்டுப் பார்த்துவிட்டு வருகிறேன் என்று அது புறப்பட்டுச் சென்றுவிட்டால் என்ன ஆகும்? நமது எட்டுக் கோள்களும் புட்டுக்கொண்டு போய்விடும்.
தடுப்பும் அனுமதியும்
கோள்களின் நடுவே ஞாயிறை வைத்ததோடு இயற்கை தன் பணியை முடித்துக் கொள்ளவில்லை. அதன் அளவையும் தீர்மானித்து வைத்துள்ளது. ஒரு விண்மீன் எந்தளவுக்குப் பெரிதாக இருக்குமோ அந்தளவுக்கு அது விரைவாக எரிந்து முடிந்துவிடும். எடுத்துக்காட்டாக, நம் ஞாயிறு இன்னும் பத்து மடங்கு பெரிதாக இருந்திருந்தால், அது ஒரு கோடி ஆண்டுகளிலேயே எரிந்து முடிந்திருக்கும். இதை எழுதும் நானும், படித்துக் கொண்டிருக்கும் நீங்களும் இங்கே இருந்திருக்க மாட்டோம்.
நமது ஞாயிறின் ஆயுள் ஆயிரம் கோடி ஆண்டுகள். இதுவரை எரிந்தது போக மீதி ஐந்நூறு கோடி ஆண்டுகளுக்குத் தேவையான எரிபொருளை அது கொண்டிருக்கிறது. எனவே, நாம் அதன் ஆயுளைக் குறித்துக் கவலைப்படுவதை விடுத்து, நம் ஆயுளைக் குறித்துக் கவலை கொள்வோம். நம் ஆயுளைக் காப்பாற்ற ஞாயிறு வழியாக என்னென்ன வசதிகளை இயற்கை ஏற்படுத்தி வைத்துள்ளது என்பதைப் பார்ப்போம்.
மின்காந்த அலைகள் என வர்ணிக்கப்படும் கதிரொளியில் நம் கண்களுக்குத் தெரிவது ஒளியலைகள் மட்டுமே. அது கதிரொளியில் 42% அளவுக்கு இருக்கிறது. இது தவிர 52% அளவுக்கு அகச்சிவப்புக் கதிர்களும், 3-5% அளவுக்குப் புறஊதா கதிர்களும் உள்ளன. இந்த அகச்சிவப்புக் கதிர் களும் புறஊதா கதிர்களும் நம் கண் களுக்குப் புலப்படாதவை. இவற்றில் புறஊதாக் கதிர்கள் ஆபத்தானவை.
இக்கதிரில், ‘ஏ,பி,சி’ என மூவகை உண்டு. இதில் ‘சி’ வகை மிகவும் தீங்கானது. அதனால்தான், வளிமண்டலத்தில் ஒரு பெருஞ்சுவரைக் கட்டி இயற்கை அதைத் தடுக்கிறது. ‘பி’ வகைக் கதிரிலும் 95% இவ்வாறு தடுக்கப்படுகிறது. இந்தச் சுவரின் பெயர்தான் ஓசோன். மனிதர்களாகிய நாம் அதை மெலியச் செய்துதான் ‘புறஊதாக் கதிர்களே வருக, எமக்குப் புற்றுநோயைத் தருக’ என வரவேற்கிறோம்.
புறஊதாக் கதிர்களில் ‘ஏ’ வகைக் கதிர்கள் மட்டும் புவியின் மேற்பரப்பை வந்தடைகின்றன. புறஊதாக் கதிர்கள் தீங்கானவை என்றால், இவ்வகையை மட்டும் ஏன் இயற்கை அனுமதிக்கிறது? இது நம் உடலுக்குத் தேவைப்படுகிறது. இது நம் தோல்மீது பட்டால்தான் உடலில் ‘விட்டமின் டி’ உற்பத்தி நடக்கும். இல்லையெனில், கார்ப்பரேட் நிறுவனங்களின் ‘விட்டமின் - டி’ விற்பனை கொடிக்கட்டி பறக்கும். ஆக, ஞாயிறு போற்றுதும் சரிதானே?
சரி, திங்களை ஏன் போற்ற வேண்டும்?
“நிலா நிலா ஓடி வா…
நில்லாமல் ஓடி வா…”
அம்மா அமுதூட்டும்போது பாடிய பாட்டு. இதை இன்று கேட்டால் என்ன சொல்கிறோம்? நீல் ஆர்ம்ஸ்ட்ராங் நிலவுக்கே போய் வந்துவிட்டார். நீ இன்னும் நிலவை இங்கு அழைத்துக் கொண்டிருக்கிறாயே என்று கேலி செய்வோம். ஆனால், உண்மை என்னவெனில் புவியை நோக்கி நிலவை அழைக்க வேண்டிய அவசியத்தில்தான் நாம் உள்ளோம்.
நம் கோளத்தைச் சரியான வேகத் திலும் சரியான கோணத்திலும் சுழல வைப்பதில் நிலவின் ஈர்ப்பு விசைக்கும் முக்கியப் பங்கு உண்டு. அதுவே கடலில் அலைகளை உருவாக்குகிறது. நிலவின் ஈர்ப்பு விசை அறுந்தால், சுற்றல் முடிவுக்கு வரும் பம்பரம்போல நம் புவிக்கோளம் தடுமாறிவிடும். அப்படி நடந்தால் புவியின் பருவநிலையும் தட்பவெப்பமும் என்னவாகும் என்பது நமக்குத் தெரியாது.
தற்போது ஆண்டுக்கு 4 செ.மீ. தொலைவுக்குப் புவியை விட்டு நிலவு நகர்ந்துகொண்டிருக்கிறது. இது மெல்ல நடக்கும் ஒரு செயல்முறையே. எனினும், அடுத்த 200 கோடி ஆண்டுகளில் அது நிலைநிறுத்த இயலாத அளவுக்குச் சென்றுவிடும். அது குறித்து வீண் கவலை வேண்டாம். ஏனெனில் அப்போது, ‘வெள்ளி நிலவே, வண்ண நிலவே’ என்றெல்லாம் கவிதைகள் எழுத மனிதக் குலம் உயிரோடு இருக்குமா என்பது தெரியவில்லையே!
(அடுத்த வாரம்: சாண்ட்விச் வாழ்க்கை)
கட்டுரையாளர், சூழலியல் எழுத்தாளர்
தொடர்புக்கு: vee.nakkeeran@gmail.com