தேனீக்கள் தந்த இருபெரும் தொழில்நுட்பங்கள்!

தேனீக்கள் தந்த இருபெரும் தொழில்நுட்பங்கள்!
Updated on
3 min read

தேனின் சுவை குறித்த தன் லயிப்பை பல நூற்றாண்டுகளுக்கு முன்பே இலக்கியங்களில், பலமொழிகளில், சொலவடைகளில் பதிவு செய்திருக்கிறது மனித இனம். அப்போது தேனீக்களுக்கு அழிவில்லை. ஆனால், இன்று அழிந்துவரும் பூச்சியினங்களில் ஒன்றாக மாறியிருப்பதால் தேனீக்களின் வாழ்க்கை குறித்துக் கவலைப்படத் தொடங்கியிருக்கிறோம். ஏனென்றால் தேனீக்கள் செய்யும் மகரந்தச் சேர்க்கையினால்தான் தாவரங்கள் பல்கிப் பெருகுகின்றன. அயல் மகரந்தச் சேர்க்கை நடைபெறாமல் போனால் மனித இனம் கடும் நெருக்கடியைச் சந்திக்க வேண்டியிருக்கும். அதனால்தான் விவசாயிகள் மனித சமூகத்தின் காவலர்களாக தேனீக்களைப் பார்க்கிறார்கள். ஆனால் என்ன செய்ய? கொடிய பூச்சிக்கொல்லி ரசாயனங்களை, விவசாயம், தேனீ வளர்ப்பு உள்ளிட்ட தொழில்களில் பயன்படுத்தி வருவதால், தேனீக்கள் அழிவை நோக்கிச் சென்றுகொண்டிருக்கின்றன. அவற்றைக் காக்கவும் மீட்டெடுக்கவும் வேண்டிய காலத்தின் கட்டாயம் உருவாகியிருக்கிறது.

தேனீக்களால் மனிதன் பெற்றுக்கொண்டதும் கற்றுக்கொண்டதும் ஏராளம். கற்றுக்கொண்டவற்றில் ‘டீம் ஒர்க்’ என்கிற கூட்டுழைப்புச் செயலாற்றலையும் எதிர்கால வாழ்க்கைக்கானச் ‘சேமிப்பு’ என்கிற திட்டமிடலையும் குறிப்பிட்டுச் சொல்லலாம். ஆனால், இயற்கையோடு எப்படி இயைந்து வாழ்வது என்கிற தேனீக்களின் தலைசிறந்த வாழ்வியலை கற்றுக்கொள்ளத் தவறிவிட்டோம். உலக தேனீக்கள் தினமான இன்று, அவற்றிடமிருந்து 20ஆம் நூற்றாண்டுக்குப் பின் நாம் பெற்றுக்கொண்டிருக்கும் இரண்டு நவீனத் தொழில்நுட்பங்களை இப்போது பார்ப்போம்!

கணக்கில் கெட்டி

சுமார் 4 கோடி ஆண்டுகளாக தேனீக்கள் பூமியில் இருந்துவருவதாக பசுமை ஆராய்ச்சியாளர்கள் குறிப்பிடுகிறார்கள். அப்படிபட்ட தேனீக்களின் அறிவியல் பெயர் அபிஸ் மெலிஃபெரா. ஆறு கால்கள் கொண்ட அதன் அடிவயிற்றில் இருக்கும் அதிசயமான சுரப்பிகளிலிருந்து சுரக்கும் மெழுகைக் கொண்டு தேனீக்கள் தங்களின் கூட்டைக் கட்டிக்கொள்கின்றன. பல பறவைகளும் கூடத் தங்களுக்கான கூட்டைக் கட்டிக்கொள்கின்றன என்று தோன்றலாம். ஆனால், தேனீக்களின் கூட்டையும் தூக்கணாங்குருவியின் கூட்டையும் மட்டும் தான் இயற்பியல் விஞ்ஞானிகள் ‘அறிவியல் அதிசயம்’ என்று வருணிக்கிறார்கள். குறிப்பாக தேனீக்களை ‘கணக்கில் கெட்டி’ என்று அவர்கள் பாராட்டுகிறார்கள்! இந்தப் பாராட்டுக்கு தேனீக்கள் தகுதியானவைதான்!

மற்ற வடிவங்களை விட, அதாவது சமபக்க முக்கோணங்கள், சதுரங்கள், வட்டங்கள் அல்லது வேறெந்த வடிவங்களையும் விட அறுகோண வடிவமே (hexagon) சிறந்தது எனக் கடந்த பல நூற்றாண்டுகளாக கணித மேதைகள் நம்பி வந்தார்கள். அறுகோண வடிவத்தில் அறைகளைக் கட்டும்போது மிகக் குறைந்த அளவிலானப் பொருட்களைக் கொண்டு நிறைய அறைகளைக் கட்ட முடியும் என்று அவர்கள் நம்பினார்கள். ஆனால் இது குறித்து விலாவாரியாக அவர்களால் விளக்கம் தர முடியவில்லை. ஆனால், தேனீக்களின் கூட்டிலிருக்கும் தொழில்நுட்பச் சிறப்பை 1999-ல் அட்டகாசமாக ‘கிராக்’ செய்து நிரூபித்துக் காட்டினார் ஐரோப்பியக் கணித பேராசிரியரான டி.சி.ஹேல்ஸ் என்கிற தாமஸ் காலிஸ்டர் ஹேல்ஸ்.

தாமஸ் காலிஸ்டர் ஹேல்ஸ்.
தாமஸ் காலிஸ்டர் ஹேல்ஸ்.

வானில் பறக்கும் அறுகோணம்!

அறுகோண வடிவத்தில் ஒரு இடத்தைச் சம அளவில் பிரிக்க முடியும். மிகக் குறைந்த அளவிலான பொருள்களைக் கொண்டு அறைகளைக் கட்ட முடியுமென அவர் தன்னுடைய ஆராய்ச்சியின் வழியாக நிரூபித்துக் காட்டினார். இப்படி வீடு கட்டுவதால் தேனீக்கள் என்ன நன்மையைக் கண்டன? அறுகோண வடிவத்தில் அறைகள் கட்டுவதால், இருக்கும் இடத்தை முழுமையாக அவற்றால் பயன்படுத்திக்கொள்ள முடிவதை, மனிதர்களுக்கு முன்பே அவைக் கண்டறிந்துவிட்டன என்பதுதான்! குறைந்த எடை கொண்ட பொருட்களைக் கொண்டே உறுதியான அறைகளை அவைகளால் கட்ட முடிந்தது. அதாவது, குறைந்த அளவு மெழுகைக் கொண்டே கூட்டில் நிறைய அறைகளை அவைகளால் கட்ட முடிகிறது. அவற்றில் தேனையும் அதிக அளவில் சேமித்து வைக்க முடிகிறது. ஆக, தேனீக்கள் கட்டும் கட்டிடமே ‘வேலைபாடு’ மிக்க ஒன்றாக இருப்பதை அறிவியல் உலகம் கண்டறிந்து கூறிவிட்டது. இந்த ஆய்வுக்குப்பின் ஐரோப்பாவில் ஒரு ‘வானளாவிய’ப் புரட்சிக்கு தேனீக்கள் வித்திட்டுவிட்டன. தேனீக்கள் கண்டறிந்த அறுகோணத்தைப் பயன்படுத்தி, குறைந்த எடையில் மிக உறுதியான ‘பேனல்களை’ (panels) வடிவமைத்து அவற்றைக் கொண்டு விமானங்களின் உடலைத் தயாரிக்கக் தொடங்கிவிட்டார்கள். இதனால் நிறைய எரிபொருள் செலவு மிச்சமாகிறது என்பதை நிரூபித்திருக்கிறார்கள். தற்போது, அறுகோண பேனல்கள் இல்லாமல் விமானங்கள் தயாரிக்கப்படுவதில்லை!

நம்ம ஸ்டைலே வேற...!
நம்ம ஸ்டைலே வேற...!

இதுதான் தேனீக்களின் ஸ்டைல்!

தேனீக்களிடமிருந்து மற்றொரு அட்டகாசமான தொழில்நுட்பத்தை ‘ரோபாட்டிக்ஸ்’ துறை சுவீகரித்துக்கொண்டிருக்கிறது. தேனீக்கள் எந்த கோணத்திலிருந்து எவ்வளவு வேகத்தில் பறந்து வந்தாலும் பூவின் மீது சிந்தாமல் சிதறாமல் மென்மையாக அமருவதைப் பற்றி எப்போதாவது யோசித்திருக்கிறீர்களா? விர்ரென்று வேகமாகப் பறந்து வரும் ஒரு தேனீ, பூவின்மீது அதிர்வு ஏற்படுத்தாமல் மென்மையாக உட்காரவேண்டும் என்றால் அது பறந்து வரும் வேகத்தை முழுவதுமாக குறைத்தாக வேண்டும். தேனீக்கள் இதைச் செய்வதற்கு இரண்டு விஷயங்களைக் கணக்கிட வேண்டியது அவசியம். முதலாவது, பறந்து வரும் வேகம். அடுத்தது, பூவுக்கும் தேனீக்கும் இடையிலான தூரம். பறக்கும் பூச்சியினங்கள் எல்லாவற்றாலும் இப்படி வேகத்தைத் திடீரென்று குறைத்துவிட முடிவதில்லை. ஏனென்றால், மற்றப் பூச்சியினங்களின் கண்களுக்குத் தூரத்தை அளவிடும் திறன் இல்லை. காரணம், அவற்றின் கண்களுக்கு இடையிலிருக்கும் தூரம் குறைவாகவே இருக்கிறது. அத்துடன், தங்களுடைய பார்வையை ஒரு பொருளின்மீது ஒருமுகப்படுத்த முடியாது.

ஆனால், தேனீக்களின் பார்வை அவற்றுக்கு ஒரு வரம். ஒரு பொருளுக்கு அருகில் போகும்போதுதான் தேனீக்களின் கண்களுக்கு அது பெரிதாகத் தெரியும். எவ்வளவு பக்கத்தில் நெருங்குகிறதோ பொருள் அவ்வளவு பெரிதாகத் தெரியும். இதைத்தான் ‘பைனாக்குலர் விஷன்’ என்று சொல்லுகிறோம். தான் நெருங்கிச் செல்லும் மலர், அல்லது கூடு பார்ப்பதற்குப் பெரிதாகிக்கொண்டே போகாமல் ஒரே நிலையான அளவில் தெரிவதற்காக, தேனீ அனிச்சையாகப் பறந்து வரும் வேகத்தைக் குறைக்கும். இப்படி விர்ரென்று பறந்துவந்து மலரின்மீது உட்காரும் தருணத்தில், தேனீ தன்னுடைய வேகத்தை ‘ஸீரோ ஸ்பீட்’ என்கிற நிலைக்குக் கொண்டுவந்துவிடும். மலர்களின் மீது வெகு மென்மையாக அவற்றால் கால்பதிக்க முடிவதன் பின்னாலிருக்கும் இந்தத் தொழில்நுட்ப அதிசயத்தை இயற்கை அதற்கு வழங்கியிருக்கிறது. இதை ஆஸ்திரேலியாவின் தேசியப் பல்கலைக்கழகம் ஆய்வுசெய்து உலகுக்கு அறிவித்திருக்கிறது. ‘தேனீக்கள் வேகமாகப் பறந்து வந்து ‘ஸீரோ ஸ்பீ’டில் அமரும் இந்த நுட்பத்தின் வழியாகவே, பறக்கும் ரோபோக்கள் பத்திரமாகக் தரையிறங்கும் தொழில்நுட்பத்தை உருவாக்க எங்களுக்கு உதவியாக இருக்கிறது’ என்று அமெரிக்காவின் புகழ்பெற்ற ‘பி.என்.ஏ.எஸ்’ (Proceedings of the National Academy of Sciences of the United States of America) அமைப்பு, தேனீக்களைப் புகழ்ந்திருக்கிறது. தேனீக்களிடமிருந்து பெற்றுக்கொள்ள நமக்கு நிறைய இருந்தும், நாம் தேனீக்களுக்குக் கொடுக்க இந்தப் பூவுலகை எப்படிப்பட்டதாக மாற்றி வைத்திருக்கிறோம் என்பதை யோசிக்க வேண்டியவர்களாக இருக்கிறோம். தேனீக்கள் அழிந்தால் அது தேனீக்களின் அழிவல்ல; அது மானுட அழிவின் தொடக்கமே.

தொடர்புக்கு: jesudoss.c@hindutamil.co.in

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in