

உலகின் பல மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்ட செவ்வியல் நாவல் 'தி ஓல்ட் மேன் அன்ட் தி சீ'. உலகின் பல மொழிகளில் திரைப்படமாகவும் வடிவெடுத்த காவியச் சுவை குன்றாத நாவல். தமிழில் எம்.எஸ். மொழிபெயர்ப்பில் காலச்சுவடு பதிப்பக வெளியீடாக வந்திருந்தாலும் அவருக்கு முன்பே ச.து.சு.யோகியார் மொழியாக்கத்தில் வெளியான ‘கிழவனும் கடலும்’ மற்றொரு சிறந்த தெரிவாக தமிழில் கிடைக்கிறது.
வாழ்வின் அந்திமத்தில் உடலின் வலிமைக் குறைந்து விட்டாலும் மனவலிமை குன்றாத ஒரு கியூப மீனவனுக்கும் கடல் தாய்க்குமான தன்னிகரற்ற போராட்டம், அந்த நாவலை வாசிக்கும் எவரையும் எளிதில் ஈர்த்துவிடக் கூடியது. ‘அதிர்ஷ்டமற்றவன்’ என்று நிராகரிக்கப்பட்ட கிழவன் சாண்டியாகோவுக்கு 84 நாட்கள் கடலில் மீன் கிடைக்காமல் போனாலும், அவனது படகைப் பின்தொடர்ந்தபடி சாண்டியாகோவின் தனிமையைப் போக்கிய நண்பர்களாகவே நான் ‘ஆலா’ பறவைகளைப் பார்க்கிறேன். கடற்பறவைகள் குடும்பத்தில் எண்ணிறந்த ஆலா பறவைகள் இருந்தாலும் ‘ஆர்க்டிக் ஆலா’ (Arctic tern) என்கிற வகை, நாயகன் சாண்டியாகோவின் சாகச மனப்பான்மைக்கு சற்றும் குறைந்தவை அல்ல!
‘வலசை’ப் பறவைகளின் உலகச் சாம்பியன்!
நம் நாட்டுக்கும் மாநிலத்துக்கும் விருந்தாளியாக வலசை வந்துசெல்லும் வெளிநாட்டுப் பறவைகளை வருடத்தின் பல மாதங்களில் பார்க்க முடியும். கூழைக்கடா, சங்குவளை நாரை, பிளெமிங்கோ என்கிற பூநாரைகள், ஊசிவால், தட்டைவாயன், நீலச்சிறகு போன்ற வாத்து வகைகள் ஆகியவற்றுடன் கருந்தலைக் கடற்காகங்களையும் சில வகை ஆலாக்களையும், கழிமுகங்கள், சதுப்புநிலம், ஏரிகள், பறவை சரணாலயங்கள் உள்ளிட்டப் பாதுகாக்கப்பட்ட நீர்பரப்புகளில் காணும்போது மனம் சில்லிட்டுத்தான் போகிறது. கைபேசிக் கேமராவில் அப்பறவைகளோடு செல்ஃபி எடுத்துகொள்ள முடியாதா என்று ஏங்கித்தான் போகிறோம்.
நமக்கும் சிறகுகள் கிடைத்துவிட்டால், பழவேற்காடு ஏரியில் குவிந்திருக்கும் பறவைகளைப் பார்த்தபின், அப்படியே கிழக்குக் கடற்கரையை ஒட்டியே சிறகடித்தப்படி தனுஷ்கோடி வரை பறந்து வந்தோமேயானால், வரலாற்றின் எச்சமாக நிற்கும் சில கட்டிடங்களோடு, அலை உறங்கிக் கிடக்கும் தனுஷ்கோடியின் தென்முனையில் அக்டோபர், நவம்பர் மாதங்களில் ‘ஆர்க்டிக் ஆலா’ என்கிற ஆயிரக்கணக்கான சாகசப் பறவைகள் கூட்டம் கூட்டமாகச் சிறகடிப்பதைப் பார்த்து பரவசம் கொள்ளமுடியும்.
தலையில் தொப்பிபோல் கறுப்பு வண்ணம். உடல் முழுவதும் பாலின் வெண்மை நிறம், அலகும் கால்களும் ஆரஞ்சு வண்ணம்ம் சிறகுகளின் விளிம்பில் கச்சிதமான கறுப்புக்கோடு எனத் தோற்றத்தால் வசீகரிக்கும் ‘ஆர்க்டிக் ஆலா’கள்தான் ‘வலசை’ப் பறவைகளில் உலகச் சாம்பியன்! ஆம்! உலகிலேயே அதிக தொலைவு வலசை சென்று திரும்பும் பறவையினம் ஆர்க்டிக் ஆலாதான். வட துருவமான ஆர்க்டிக்கிலிருந்து ஐரோப்பா, ஆசியா, வட அமெரிக்கா ஆகிய கண்டங்களின் வழியே தென்துருவமான அன்டார்க்டிகாவுக்கு வலசை போகின்றன.கடுங்குளிரிலிருந்து காத்துகொள்ள சீரான தட்பவெட்பப் பகுதிகளைத் தேடிச் செல்வதே வலசை போவதின் நோக்கம். மற்ற எந்தப் பறவையும் கடந்திராத தொலைவை ஆர்க்டிக் ஆலாக்கள் ஆண்டுதோறும் கடந்துவிடுகின்றன.
நீரூபிக்கப்பட்ட ஆய்வு!
ஆர்க்டிக் பகுதியிலிருந்து அண்டார்டிகாவுக்குப் போய்வர ஆர்க்டிக் ஆலாக்கள் சுமார் 35,200 கிலோ மீட்டர்கள் பயணம் செய்ததாக ஆய்வுகள் எடுத்துக் காட்டுகின்றன. அட்லாண்டிக் பெருங்கடல் வழியாக பயணம் செய்யும் ஆர்க்டிக் ஆலாக்கள் சிலவற்றைப் பிடித்து, அவற்றின் உடலில் ‘ஜியோலொக்கேட்டர்’ (Geolocator) கருவி பொருத்தப்பட்டன. இந்தக் கருவியின் எடை ஒரு ‘ஜெம் கிளிப்’ அளவுக்கானது. இதன்பிறகு கருவிகள் பொருத்தப்பட்ட ஆர்க்டிக் ஆலாக்களை ஆய்வுக் குழுவினர் கண்காணிக்கத் தொடங்கினர்.
ஒரு முனையிலிருந்து மற்றொரு முனைக்குப் போய்வர கருவி பொருத்தப்பட்ட ஆலாக்கள் சராசரியாக 90 ஆயிரம் கிலோ மீட்டர்கள் தூரம் பயணம் செய்து திரும்புவதை உறுதிப்படுத்தின. அது மட்டுமல்ல; இவை பறந்து செல்லும் வழியை ஓர் வரைபடமாக (Routing graph) கம்ப்யூட்டர் மூலம் உருவாக்கியபோது அது ‘S’ வடிவில் அமைந்தது. பூமிப்பந்தின் காலநிலையில், வழக்கமாக வீசும் காற்றின் திசையில் இவை பறந்து சென்று திரும்புவதுதான் இந்த ‘S’ ரகசியம்!
ஆர்க்டிக் ஆலாக்கள் பறக்கத் தொடங்கினால் 4 ஆயிரம் கிலோ மீட்டர்கள் இலக்கை அடைந்தபிறகே அவை கொஞ்சம் ஓய்வெடுக்கும். இடையில் எந்த உணவும் கிடையாது. இப்படிக் கொலைப்பட்டினியாக இவற்றால் எப்படிப் பறக்க முடிகிறது! வலசை புறப்படும் நாட்களுக்கு முன்னர் நிறைய மீன்களை உண்டு, அவற்றை உடலில் கொழுப்பாக சேமித்துகொள்வதால் பசியைத் துறந்து பறக்கின்றன. அவை பறப்பதே அவ்வளவு அழகு. வழியில் ஏரிகள், உப்பங்கழிகளில் சிறு மீன்களை கவனித்துப் பிடிக்க ஒரே இடத்தில் நின்றப்படி சிறகடிக்கும் அழகைக் கண்கொட்டாமல் பார்த்து வியக்கலாம்.
தனிப்பெரும் சாதனை
சுமார் ஒரு அடி நீளமேயுள்ள ஆர்க்டிக் ஆலாக்கள், தங்களுடைய வாழ்நாளின் பெரும்பகுதியைப் பறப்பதிலேயே செலவிட்டுவிடுகின்றன. தரையிலேயே முட்டையிட்டு குஞ்சு பொறிக்கின்றன. 30 ஆண்டுகள் உயிர்வாழும் இக்கடற்பறவையினம், வாழ்நாளில் குறைந்தது 24 லட்சம் கிலோ மீட்டர்கள் பறந்து பறந்து சிறகுகளால் பூமிப் பந்தை அளந்துவிடுகின்றன. இந்தத் தனிப்பெரும் சாதனையை நிகழ்த்திவிடும் ஆர்க்டிக் ஆலா ஒன்றின் உடல் எடை வெறும் 100 கிராம் என்றால் உங்களால் நம்ப முடிகிறதா?
ஆய்வில் கிடைத்த இன்னொரு தகவலும் நம்மை ஆச்சரியப்படுத்துகிறது. ஆர்க்டிக் ஆலாக்கள் இரண்டு துருவங்களிலும் கோடைக்காலத்தை அனுபவிப்பதால், மனிதன் மற்றும் வேறெந்த விலங்குகள் பறவைகளையும் விட ஆண்டுதோறும் அதிக அளவிலான வெளிச்சத்தைப் பார்க்கின்றன என்று நிறுவியிருக்கிறார்கள். மனித இனத்துக்கு உண்மையிலேயே வெளிச்சம் பாய்ச்சும் பறவைகளில் ஒன்றுதான் இந்த ஆர்க்டிக் ஆலாக்கள். சாண்டியாகோவைப் போன்று தன்னம்பிக்கை குன்றாத யாருக்கும் ஆர்க்டிக் ஆலாக்களைப் பிடித்துப்போகும்.
குறிப்பு: மே 11-ம் தேதி தொடங்கி பல ஐரோப்பிய, ஆசிய நாடுகளில் ‘உலக வலசை பறவை மாதம்’ அனுசரிக்கப்படுகிறது.
கட்டுரையாளர் தொடர்புக்கு: jesudoss.c@hindutamil.co.in