

ஐரோப்பியர்கள் புதிய நிலப்பகுதி களைத் தேடி அலைந்த காலம். அவர்களின் கண்களில் படாமல் பசிபிக் பெருங்கடலின் நடுவே தனிமையில் அதுவரை ஒதுங்கியிருந்தது ஒரு தீவு. அதன் அப்போதைய பெயர் ‘ரப்பா நுய்’. அத்தீவுக்கு அருகிலுள்ள ஓரிடத்துக்குச் செல்ல வேண்டுமானால் 2300 கி.மீ. தொலைவில் உள்ள சிலி நாட்டுக்குத்தான் சென்றாக வேண்டும். அவ்வளவு தனிமை.
1722ஆம் ஆண்டில் டச்சுக் கப்பல் ஒன்று எப்படியோ அத்தீவுக்கு வந்துசேர்ந்தது. அந்தக் கப்பலிலிருந்தவர்கள், ஈஸ்டர் திருநாளன்று அத்தீவில் காலடி எடுத்து வைத்ததால் டச்சுக்காரர்கள் அதற்கு ‘ஈஸ்டர் தீவு’ என்று பெயரிட்டனர். அங்கே சென்றதும் அவர்கள் திகைத்தனர். காரணம் அங்கிருந்த மாபெரும் சிலைகள்தாம். ஏறக்குறையாக 900 சிலைகள் இருந்தன. ஒவ்வொன்றும் 40 அடி உயரமும் 14 டன் (1 டன் - ஆயிரம் கிலோ) எடையும் கொண்டவை. இவ்வளவு பெரிய சிலைகளை அத்தீவின் மக்கள் எப்படி வடித்திருப்பார்கள் என்று அன்றைக்கு டச்சுக்காரர்களுக்கு ஏற்பட்ட அதே வியப்புதான், இன்றைக்கும் சுற்றுலாப் பயணிகள் அங்கே குவியக் காரணமாக உள்ளது.
அத்தீவில் பழங்குடிகள் மிகக் குறைந்த எண்ணிக்கையில் வசித்தது டச்சுக்காரர்களுக்கு மேலும் வியப்பை அளித்தது. மரங்களோ இயற்கை வளங்களோ அறவே அங்கில்லை. கடல் உணவு மட்டுமே அவர்கள் உயிர் பிழைப்பதற்கான ஒரே வழியாக இருந்தது. இம்மக்களா இவ்வளவு பெரிய சிலைகளை வடித்திருப்பார்கள்?
அதுவொரு பழைய வரலாறு. ஒரு காலத்தில் அத்தீவு முழுமையும் காடாக இருந்தது. அது அழிக்கப்பட்ட வரலாற்றுக்கு ‘சூழலியல் சீரழிவு வரலாறு’ எனப் பெயரிடலாம். அங்கு முதலில் குடியேறிய பாலினேசிய மக்கள் காடுகளைக் கொன்று வேளாண் நிலமாக மாற்றினர். பிறகு விறகுக்காகத் தொடர்ந்து மரங்களை வெட்டினர். மக்கள்தொகை என்னவோ ஏழாயிரம்தான் என்றாலும் எறும்பு ஊரக் கல் தேய்ந்தது.
ஏன் வந்தது அழிவு?
பின்னர், நாம் பிரம்மாண்டக் கட்டிடங்களைக் கட்டுவதுபோல, அவர்கள் தம் இனத் தலைவருக்காகப் பாறைகளை வெட்டி பிரம்மாண்டமான சிலைகளை உருவாக்கினர். அவற்றை அங்கிருந்து வேறிடத்துக்கு உருட்டிச் செல்ல உருளைகள் தேவைப்பட்டன. அதற்கு மரங்கள் தேவை. அன்றாட வாழ்வுக்கும் மரங்கள் தேவை. விளைவு, காடுகள் புல்வெளிகளாக மாற்றப்பட்டன. புற்களை வைத்து அடுப்பெரித்து வாழும் சூழலைக் கற்பனைச் செய்து பாருங்கள்.
ஏன், அங்கு மரக்கன்றுகள் தொடர்ந்து முளைக்கவில்லை என்கிற கேள்வி எழுந்தது. நெடும் ஆய்வுக்குப் பின்னரே அதற்கு விடைக் கிடைத்தது. மரங்களின் இனப் பெருக்கம் நிகழாமல் தடுத்தது எலிகள்தாம். மனிதர்களுக்கே பற்றாக்குறை எனில், எலிகள் உணவுக்கு என்ன செய்யும்? அவை விதைகளை உணவாகத் தின்று தீர்த்தன.
உணவுத் தட்டுப்பாடு ஏற்பட்டதால் சமூக வாழ்க்கையும் சீர்குலைந்தது. ‘குட்டைக் காது’, ‘நீளக்காது’ என மக்களுக்குள் இரு பிரிவுகள் தோன்றி தமக்குள் சண்டையிட்டு ஒருவரை ஒருவர் வெட்டிக் கொன்றனர். பிழைத்திருந்த மக்களையும் பிற்காலத்தில் தீவுக்கு வந்த ஐரோப்பியர்கள் கொணர்ந்த நோய் நுண்மிகள் கொன்றழித்தன. இன்று தீவு இருக்கிறது, அம்மக்கள் இல்லை.
புவி அழியும்போது...
‘மனிதக்குலத்தின் பேராசை நம் புவிக்கு என்னென்ன பாதிப்புகளை ஏற்படுத்தும் என்பதற்கான விடைதான் ஈஸ்டர் தீவு’ என்கிறார் அறிஞர் ஜாரட் டயமண்ட். நமது முந்தைய சமூகங்கள் அழிந்து போனதற்கு அவர் எட்டுக் காரணங்களைப் பட்டியலிடு கிறார்: காடழிப்பு, நிலவள இழப்பு, நீராதாரச் சிக்கல், மிகை வேட்டை, மிகை மீன்பிடிப்பு, அந்நிய உயிரினங்களின் ஊடுருவல், மக்கள்தொகைப் பெருக்கம், சுற்றுச்சூழல் மீது தனிமனிதர் ஏற்படுத்தும் பாதிப்பு அதி கரித்தல் ஆகியவையே அவை. இந்த எட்டுக் காரணங்களும் இன்றைக்கும் உயிர்ப்புடன் உள்ளன என்பதை நாம் உணரவேண்டும்.
புவியின் சிறிய மாதிரி வடிவம்தான் ஈஸ்டர் தீவு. நாம் செய்யும் சீரழிவுகள் தொடர்ந்தால் புவி மட்டுமே இருக்கும், நாம் இருக்கமாட்டோம். அதனால்தான் மானுடவியல் அறிஞர் லெவிஸ்ட்ராஸ், “உலகம் மனித இனம் இல்லாமல் தோன்றியது. அது அழியும்போது மனிதக் குலம் இருக்கப் போவதில்லை” என்றார்.
உலகம் எப்போது அழியும்? நமக்குத் தெரியாது. ஆனால், நாம் எப்போது அழிவோம் என்பதை இயற்கை நன்கறியும். அது, தன் இயக்கத்தில் ஒரு சிறிய மாற்றத்தை ஏற்படுத்தினாலே மொத்தமும் காலி. எப்படி? ஒரேயொரு எடுத்துக்காட்டைப் பார்ப்போம்.
ஆக்சிஜன் எளிதில் தீப்பிடிக்கும் தனிமம். ஹைட்ரஜனும் அப்படியே. ஆனால், அவை இரண்டும் ஒன்று சேர்ந்தால் தீயையே அணைக்கும் நீரை உருவாக்குகின்றன. இரண்டும் சேராமல் தடுக்கப்பட்டால்?
இது ஒன்றே போதும் என்று நினைக்கிறேன்.
(அடுத்த வாரம்: இது இரண்டாம் உலகம்)
கட்டுரையாளர், சூழலியல் எழுத்தாளர்
தொடர்புக்கு: vee.nakkeeran@gmail.com