

“2012, டிசம்பர் 21 இந்த நாளை உங்களுக்கு நினைவிருக்கிறதா?”
இளைஞர்களிடம் உரையாற்றுகையில் இந்தக் கேள்வியைக் கேட்பது வழக்கம். பலருக்கு மறந்திருக்கும், சிலருக்கு நினைவிருக்கும். நினைவிருப்பவர்களிடம் அடுத்த கேள்வியைக் கேட்பேன்.
“இப்போதும் அந்த அச்சம் இருக்கிறதா?”
அவர்கள் வெட்கப்பட்டுச் சிரிப்பார்கள். மறக்கக்கூடிய நாளா அது? அந்த நாள் உலகமே உறங்காது விழித்திருந்த நாள். உடலின் அட்ரினல் சுரப்பிகள் தாறுமாறாகப் பொங்கிப் பலரையும் பதற்றமாக்கிய நாள். இருக்காதா பின்னே? உலகம் அழியப்போகும் நாள் என்றால், அன்று எவரால் நிம்மதியாக இருக்க முடியும்?
அந்நாளைப் பற்றித் தெரியாதவர்களுக்குச் சிறு விளக்கம். லத்தீன் அமெரிக்கத் தொல்குடிகளுள் ஒன்றான மாயன் தொல்குடி, ஆதிகாலத்தில் இருந்து தொடங்கும் ஒரு நாள்காட்டியை உருவாக்கி வைத்திருந்தது. ஆனால், குறிப்பிட்ட ஒரு நாளோடு அது திடுமென முடிவடைந்திருந்தது. அந்த நாளையே உலகம் அழியப்போகும் நாளாக ஊடகங்கள் ஊதிப்பெருக்கி பெரும் பரபரப்பாக மாற்றியிருந்தன. 24X7 அதே செய்தி திரும்பத்திரும்ப ஓடிக்கொண்டே இருந்தது. அதனால், கோடானுகோடி மக்கள் அச்சமடைந்தனர்.
அந்நாள் வந்ததும் உலகம் அழியும் காட்சியைக் காண அனைவரும் தொலைக்காட்சி முன் குழுமினர். உலகின் அழிவு எந்த மூலையிலிருந்து தொடங்கும் என்கிற ஆவலும், அதே வேளை அது நம் ஊரிலிருந்து தொடங்கிவிட்டால் என்ன செய்வது என்கிற அச்சமும் அவர்கள் மனத்தில் கலந்திருந்தது. நொறுக்குத் தீனியைத் தின்றவாறே உலகம் அழியும் காட்சிக்காகக் காத்திருந்தனர். சாகும்போதும் எதையாவது தின்றுகொண்டே சாக வேண்டும். அழியும்போதும் ஒரு நேரடி ஒளிபரப்பைப் பார்த்துக்கொண்டே அழிய வேண்டும்!
பின், ஏதோவொரு நொடியில் தூக்கம் சொக்கியது. கண் விழித்துப் பார்த்தால், ‘நாளை மற்றுமொரு நாளே’ என்பதாகப் பொழுது விடிந்திருந்தது. அனைவரும் நிம்மதிப் பெருமூச்சுவிட்டனர். உடனே, ஒவ்வொருவரும் தம் உயிரின் கணக்குப் புத்தகத்தைத் திறந்து பார்த்தனர். ஒரு மனிதரின் நெடிய ஆயுட்காலம் 6,50,000 மணி நேரம். அதிலிருந்து தம் வயதைக் கழித்துக் கணக்கிட்டனர். இன்னும் வாழ வேண்டிய காலம் மிச்சமிருந்தது. அப்புறம் என்ன? வெந்ததைத் தின்று வேலைக்குப் புறப்பட்டுவிட்டனர். அதுதான் உலகம் அழியவில்லையே!
யார் அந்தப் பூனை?
‘பூனை கண்களை மூடிக்கொண்டால் உலகம் இருண்டுவிடுமாம்’ என்று நம்மிடையே ஒரு பழமொழி உண்டு. உண்மையில் மனிதர்கள்தாம் அந்தப் பூனைகள். நம் கண்கள் மூடினால் உலகமே இருளும் என்று நம்புகிறோம். அதாவது, மனிதர் அழிந்தால் இந்த உலகமும் சேர்ந்தே அழியும் என்பதே நம் கற்பனை.
உலகம் அழிவது பற்றிய நம் கற்பனைகள் புனைகதைகளையும் விஞ்சுபவை. நமது திரைப்படங்களும் அதற்குத் தீனி போடுகின்றன. நிலம் அப்படியே இரண்டாகப் பிளந்து உள்வாங்குவது, உலகமே தீப்பற்றி எரிவது, பெருவெள்ளத்தில் புவிக்கோளமே மூழ்குவது எனக் கற்பனைகள் கண்டபடி சிறகை விரிக்கின்றன. அதாவது, உலகம் அழியும்போது மனிதர்களான நாம் மட்டும் தனியே அழியமாட்டோமாம். நம்மோடு சேர்ந்து புவிக்கோளமும் அழிந்துவிடுமாம். எப்பேர்ப்பட்ட அபத்த கற்பனை.
உலகம் அழியப்போகிறது என்று பரபரப்பு நிலவிய அந்தக் காலகட்டத்தில் ஊடகவியலாளர் குழு ஒன்று தென் அமெரிக்காவின் ஆண்டீஸ் மலைத்தொடரில் வசிக்கும் தொல்குடி மூதாட்டி ஒருவரைத் தேடிச் சென்றது. அவரிடம் அந்த நாள்காட்டி குறித்துக் கருத்துக் கேட்பதே அவர்களது நோக்கம். அவரைச் சந்தித்ததும் இந்தக் கேள்வியைக் கேட்டனர்:
“உலகம் அழியப் போகிறதா?”
மூதாட்டி சிரித்தார். “உலகம் எப்படி அழியும் குழந்தைகளே? அதற்கு ஒரு ஆபத்தும் இல்லை. மனிதர்களான நாம்தாம் ஆபத்தில் இருக்கிறோம். நம் வாழ்க்கையை நாம் மாற்றிக் கொள்ளாவிட்டால் ‘பச்சமாமா’ (புவி அன்னை) நம்மை ஒட்டுண்ணிகளை உதறுவதுபோல உதறிவிட்டுப் போய் விடுவாள்”.
உண்மையான ஆபத்து
உண்மையில் அந்த உதறித்தள்ளுதல் தொடங்கிவிட்டது. இதை ஏதோவொரு மூதாட்டியின் உளறலாகச் சில மனிதர்கள் கருதலாம். ஆனால், உலகப் புகழ்பெற்ற அறிவியலாளர் ஒருவரும் அதே கருத்தைத் தெரிவித்துள்ளார். சக்கர நாற்காலியில் அமர்ந்தபடியே இந்தப் பிரபஞ்சத்தையே கணக்கிட்ட ஸ்டீவன் ஹாக்கிங் என்னும் மாமேதைதான் அந்த அறிவியலாளர். அவர் இப்படி எச்சரித்தார்:
“நாம் நமது வழிமுறைகளை மாற்றிக் கொள்ளாவிடில் இன்னும் நூறாண்டுக் காலத்தில் உலகம் வாழத் தகுதியற்றதாக மாறிவிடும்”
ஒரு தொல்குடியின் குரலும், ஓர் அறிவியல் அறிஞரின் குரலும் எப்படி ஒத்திசைந்து ஒலிக்கின்றன பாருங்கள். இருப்பினும், யார் சொன்னாலும் சரி, என்ன சொன்னாலும் சரி, நமக்கு உயிரளிக்கும் ஆக்சிஜன் நிலைத்திருக்கும் என்கிற நவீன மூடநம்பிக்கையில்தான் நாம் வாழ்கிறோம். ஆனால், அந்த ஆக்சிஜனே ஆபத்து என்பது நம்மில் எத்தனை பேருக்குத் தெரியும்?
கட்டுரையாளர், தொடர்புக்கு: vee.nakkeeran@gmail.com
| நக்கீரன் தமிழ்ச் சூழலியல் எழுத்தில் சமீப ஆண்டு களாக அதிகக் கவனம் பெற்றுவரும் எழுத் தாளர். அவருடைய தன்வரலாற்றுப் பின்னணியில் அமைந்த ‘காடோடி’, தமிழின் முதன்மையான சூழலியல் நாவல்களில் ஒன்று.‘நீர் எழுத்து’, தமிழ்நாட்டின் ஈராயிரம் ஆண்டுகால நீர் வரலாற்றைப் பேசும் நூல். |
| ‘சூழலும் சாதியும்’, பெரும் அதிர்வுகளை ஏற்படுத்திய நூல். சூழலியல் செயல்பாடுகளும், சூழலியல் பாதுகாப்பு சார்ந்த பேச்சும் பெரிதும் ஆழமற்றுள்ள இன்றைய சூழ்நிலையில் நம் மரபின் வேர்களையும் நவீனத்தின் கிளை களையும் இணைப்பவராக இருக்கிறார். |