

வீட்டின் ஜன்னல் வழியே நுழைந்த அந்தப் பாம்பு, உள்ளே இருந்தவர்களின் அலறல் சத்தம் கேட்டு வெளியேறி அருகிலிருந்த வேப்பமரத்துக்குத் தாவியது. காகம் கரைந்துகொண்டிருக்க வேப்ப மரத்தின் அடர்ந்த கிளைகளின் ஊடே அப்பாம்பை நான் பார்த்தேன். அது கொம்பேறி மூர்க்கன் (Common Bronzeback Tree Snake - Dendrelaphis tristis) பாம்பு. இதைக் கொம்பேறி மூக்கன், வில்லரணை பாம்பு எனவும் அழைக்கிறார்கள்.
அது சற்றுப் பதற்றத்துடன் இருந்தது. அது நஞ்சற்ற மரவாழ் பாம்பு. ஆனால், அது கொம்பேறி மூர்க்கன் பாம்பு என்று நான் சொன்ன மறுநொடி, அங்கிருந்த அனைவரும் ஓட்டம் பிடித்தார்கள். அதற்குக் காரணம் அது நஞ்சுப் பாம்பு என்கிற கற்பிதம்தான்.
அது ஒரு பகலாடி. கைவிரல் தடிமன் கொண்ட ஒல்லியான, நீண்ட உடலமைப்பைக் கொண்டுள்ளது. ‘ப’ வடிவத்தில் இருக்கும் அவற்றின் வயிற்றுப் பட்டைச் செதில்கள் மரவாழ் பாம்பினங்களுக்கே உரித்தானவை. இச்செதில் அமைப்பு இவ்வினங்கள் மரங்களில் இயல்பாகப் பற்றிக்கொண்டு நகர்வதற்கு உதவுகிறது.
இதன் உடல் வழவழப்பான, மிருதுவான செதில்களைக் கொண்டது. முதுகுப் பகுதி வெண்கல நிறத்திலும் பக்கவாட்டுப் பகுதி அடர் கரும்பழுப்பு நிறத்திலும் வயிற்றுப் பகுதி வெளிர் பழுப்பாகவும் இருக்கும். உடலின் பக்கவாட்டில் ஒரு மெல்லிய வெள்ளை நிற குறுக்குக்கோடு கழுத்தில் ஆரம்பித்து வால் வரை நீண்டுள்ளது. இந்த நிற அமைப்பு இப்பாம்பைப் பிற உயிரினங்கள் எளிதாக அடையாளம் காண இயலாத வகையில் உருமறைத்தோற்றத்தைத் தந்து கிளையோடு கிளையாக மறைந்திருக்க உதவுகிறது.
கழுத்துப் பகுதியைவிடத் தலை சற்றுப் பெரிதாக இருக்கிறது. தலையின் மேல் இரு பக்கவாட்டுச் செதில்களின் நடுவே காணப்படும் வெள்ளை நிறப் பொட்டு இப்பாம்பிற்கே உரித்தான அடையாளம். இந்தப் பேரினத்தில் இதுவரை 11 வகைகள் கண்டறியப்பட்டுள்ளன. இவற்றில் ‘ட்ரிஸ்டிஸ்’ இனம் இந்தியாவில் பரவலாக வாழ்கிறது. திறந்தவெளிக் காடு, புதர் காடு, அடர் மரங்கள் நிறைந்த பகுதிகள் எனத் தமிழகம் முழுவதும் சாதாரணமாகக் காணப்படும் பாம்புகளில் ஒன்றாக இது இருக்கிறது.
விரைந்தோடும்
நான் அன்றைக்குப் பார்த்தது ஒரு பெண் பாம்பு. பொதுவாக இவ்வினத்தில் பெண் பாம்புகளைவிட ஆண் பாம்புகள் நீளத்திலும் உடல் பருமனிலும் சற்றுச் சிறியவையாகவே இருக்கும். இப்பாம்பின் வால் ஒல்லியாக நீண்டு, மொத்த நீளத்தில் மூன்றில் ஒரு பங்கைப் பெற்றிருக்கும். பிறக்கும்பொழுது அரையடி நீளம் இருக்கும் இவை, 4 முதல் 5 அடி நீளம் வரை வளரக்கூடியவை.
காகம் தொடர்ந்து கரைந்துகொண்டிருக்க, பாம்பு என்னைக் கண்டு கொண்டது. மறுகணமே அங்கிருந்து சற்று நகர்ந்து அருகிலிருந்த மற்றொரு கிளைக்குத் தாவி வேகமாக மறைந்தது. இத்தகைய வேகத்தைத்தான் ‘பாம்பு பறந்து போயிடுச்சு’ எனச் சொல்வது உண்டு. இவை மரவாழ் பாம்பாக இருந்தாலும் தரையிலும் விரைந்தோடக் கூடியவை.
இப்பாம்பைப் பல முறை பார்த்திருக்கிறேன். இரை தேடி வீட்டுத்தோட்டங் களுக்கு வரும், சில நேரம் வீட்டுக்குள்ளும் நுழைந்துவிடும். இப்பாம்புகளைக் கையாள்வது எளிதல்ல. மிகவும் துடிப்பானவை, வேகமானவை. சில நேரங்களில் கடித்துவிடும். ஆனால், இதன் சிறிய பற்கள் பெரும் காயத்தையோ வலியையோ ஏற்படுத்தாது.
மரமேறிப் பார்க்குமா?
தெளிவான கண் பார்வை கொண்ட இந்தப் பாம்பு, மரப் பொந்துகளில் வசிக்கிறது. இரவு நேரத்தில் மரக்கிளைகளின் ஊடே ஓய்வெடுக்கும். மரத்தில் வாழும் சிறு பறவைகள், தவளை, ஓணான், பல்லி, சில நேரம் அவற்றின் முட்டைகள், இளம் உயிரிகளை உணவாக்கிக்கொள்கிறது. இது முட்டையிடும் பாம்பு. மரப்பொந்துகளில் வெண்ணிற நீள் வட்ட முட்டைகளை இடுவதாக அறியப்பட்டுள்ளது.
இப்பாம்பு ஒருவரைக் கடித்துவிட்டால் அவர்கள் மரணித்துவிடுவார்கள் எனவும் பின் சுடுகாட்டில் காணப்படும் உயர்ந்த மரத்தில் அமர்ந்துகொண்டு கடிபட்டவரின் சடலத்தை எரிக்கும் புகையைக் கண்ட பின்புதான் மரத்திலிருந்து கீழே இறங்கும் என்றொரு கட்டுக்கதை நிலவிவருகிறது. பொதுவாக அன்றைய சுடுகாடுகள் பனை மரங்களைக் கொண்டவையாக இருந்தன. அது மட்டுமல்லாமல் இயல்பாகவே இந்தப் பாம்பு பனை மரங்களில் வசிக்கக்கூடியது. இந்த அடிப்படையிலேயே இது மரத்தின் உச்சியிலிருந்து பார்க்கும் என்கிற கற்பிதம் உருவாகியிருக்க வேண்டும். சிறுவயதில் இப்பாம்பு பற்றி நான் அறிந்த தவறான செய்திகள், இவற்றை நேரில் கண்டபொழுதும் அது சார்ந்து தேடியபொழுதும் என்னை விட்டு அகன்றன. நம்மிடையே நிலவும் கட்டுக்கதைகளும் பயமுமே இப்பாம்பை நம்மிடமிருந்து விலக்கிவைத்திருக்கின்றன.
கட்டுரையாளர், ஊர்வன ஆராய்ச்சியாளர்
தொடர்புக்கு: oorvanapalli@gmail.com